52
அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
5வடபுல மன்னர் வாட வடல்குறித்
தின்னா வெம்போ ரியறேர் வழுதி
இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
10வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரி னொரீஇ யினியே
கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
15வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
கான வாரண மீனும்
காடாகி விளியு நாடுடை யோரே.

(பி - ம்.) 3 ‘ஊன்மிசை’ 12 ‘கலிகெழு மூதூர்க்கந்து’

திணையும் துறையும் அவை.

அவனை மருதனிளநாகனார் (பி - ம். மருதினிள நாகனார்) பாடியது.

(இ - ள்.) தெய்வங்களையுடைத்தாகிய நெடிய சிகரங்களையுடைய மலையின்கண்ணே முழையின்கண் துயிலைவெறுத்து 1மூரிநிமிர்ந்த புலியாகிய நிரம்பிய வலியையுடைய ஏற்றை ஊனை விரும்பிய உள்ளம் செலுத்துதலான் அவ்விரையைக் கருதித் தான்வேண்டிய இடத்தே விரும்பிச் சென்றாற்போல வடநாட்டு வேந்தர் வாட அவரைக் கொல்லுதலைக் கருதி 2இன்னாத வெய்ய போரைச் செய்யும் இயற்றப்பட்ட தேரினையுடைய வழுதி! நீ கருதியது இப்போராயின், பெரிய உலகத்தின்கண் யாரோ அளிக்கத்தக்கார்தாம்? ஊர்தோறும் மீன்சுடுகின்ற புகையினது புலால் நாறும் நெடிய ஒழுங்கு வயலிடத்து மருதினது வளைந்த கோட்டைச் சூழும் பெரிய நல்ல புதுவருவாயின் நீங்கி இப்பொழுது முழவு முதலாகிய ஒலிபொருந்திய தெய்வங்கள் தூணத்தைக் கைவிடும் பரிசு பலி இடத்தின்மாறிய பாழ்பட்ட அம்பலத்தின்கண் முற்காலத்து நரையையுடைய முதியோர் சூதாடுங்கருவியை இடுதலாற் குழிந்த அச்சூதுகருவியினது நல்லமனையாகிய இடம்நிறையப் பலபொறியையுடைய காட்டுக்கோழி முட்டையிடும் காடாய்க் கெடும் நாடுடையோர்-எ - று.

கலி - புகழும் அரவமுமாம்.

வழுதி! அடல்குறித்து நீ கருதியது இதுவாயின், விளியும் நாடுடை யோர்தாம் யார்கொல் அளியரெனக் கூட்டுக.


(கு - ரை.) 1. அணங்குடை நெடுங்கோடு: “அணங்குடை நெடுவரை” (அகநா. 22 : 1). அணங்கு - தெய்வம். கோடு - சிகரத்தையுடைய மலை; ஆகுபெயர்.

1 - 4. புறநா. 78 : 1 - 4; திருப்பாவை, 23 : 1 - 5.

6. இன்னா - இனிதல்லாத. போர்வழுதி : உருபும் பயனும் உடன் தொக்க தொகை. இயல்தேர் : வினைத்தொகை.

7 - 8. “இதுநீ கருதினை யாயி னேற்பவர், முதுநீ ருலகின் முழு வதுமில்லை” (சிலப். 25 : 166 - 7)

9. “கொழுமீன் சுடுபுகை மறுகினுண் மயங்கி” (நற். 311); “தூமக் கொடியும்” (மணி. 6 : 64)

12. “மரஞ்சேர் மாடத், தெழுதணி கடவுள் போகலிற் புல்லென், றொழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை”, “கடவுள் போகிய கருந்தாட் கந்தம்” (அகநா. 167, 370); “அருந்திறற் கடவுட் டிருந்துபலிக் கந்தமும்”, “இலகொளிக் கந்தமும்” (மணி. 6 : 60, 24 : 162)

‘கலி’ என்பது ஒலித்தற்றொழிற்பண்பில் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 458, மயிலை.

13. பலி - பூசை; நிவேதனமுமாம். பொதியில் - அம்பலம்; பொது இல் - பொதுவான இடம்; இலக்கணப் போலி. அம்பலத்தில் அமைக்கப் பெற்றுள்ள தூணில் தெய்வத்தை ஆவாகித்து வழிபட்டு வருதல் பண்டைக்கால வழக்கம்; “கந்துடைப் பொதியில்” (பட்டினப். 249) என்பதனாலறியலாகும்; மலைநாட்டிலுள்ள ஆலயங்கள் அம்பலமென்று இக்காலத்தும் வழங்கப்படுகின்றன.

14. நாய் - சூதாடுகருவியுளொன்று; “பளிக்குநாய் சிவப்பத் தொட்டு” (கம்ப. மிதிலைக்காட்சி. 17)

16. கானவாரணம் : புறநா. 320 : 11, 395 : 10.

15 - 6. பல்பொறிக் கானவாரணம் : “அந்நுண் பல்பொறிக், காமரு தகைய கான வாரணம் (நற். 21 : 7-8, மருதனிளநாகனார்)

14 - 6. “உமண ருயங்குவயி னொழித்த, பண்ணழி பழம்பார் வெண்குரு கீனும், தண்ணந் துறைவன்” (நற். 138)

13 - 6. “நரைமூ தாள ரதிர்தலை யிறக்கிக், கவைமனத் திருத்தும் வல்லுவனப் பழிய......பொதியில்” (அகநா. 377)

16 - 7. “கானங் கோழிக் கவர்குரற் சேவல், ஒண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்ப” (குறுந். 242)

கோழியை வாரணமென்றல் மரபென்பதற்கு மேற்கோள்; தொல். மரபு. சூ. 68, பேர்.

(52)


1. மூரிநிமிர்தல் - துயின்றெழுந்தவுடன் இரண்டுகைகளையும் நிமிர்த்துச் சோம்பைப்போக்குதல்; “மூரி நிமிர்வன போல” (பெருங். 2. 6 : 102); “பொய்த்ததோர் மூரியா னிமிர்ந்து போக்குவாள்” (கம்ப. உண்டாட்டு. 35); இக்காலத்துச் சோம்பல்முறித்தலென வழங்கும்.

2. இன்னாத - பகைவர்களுக்கு இன்னாத; “இன்னா வாகப் பிறர் மண் கொண்டு” (புறநா. 12 : 4) என்பதையும் அதன் உரையையும் பார்க்க.