252
கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து
தில்லை யன்ன புல்லென் சடையோ
டள்ளிலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
5சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) ஒலிக்கும் வெள்ளியஅருவிநீரை ஏற்றலாற் பழையநிறம் மாறித் தில்லந்தளிர்போன்றபுற்கென்ற சடையோடு கூடிநின்று செறிந்த இலையையுடையதாளியைப் பறிப்போன், மனையின்கண் இயங்கும்மடப் பத்தையுடைய மயிலை அகப்படுத்திக்கொள்ளும்சொல்லாகிய வலையை யுடைய வேட்டைக்காரனாயினான்முன்பு - எ - று.

இதுவும் அவன் நிலைமையைக் கண்டுவியந்து கூறியது.


(கு - ரை.) 1 - 3. கலித். 133 : 1.

3. தாளி - ஒருவகைக் கொடி.

4. பிணித்தல் - வயமாக்குதல்.

4 - 5. பிறன்கட்டோன்றிய அசைவுபற்றிய அவலச்சுவைக்குமேற் கோள்; தொல். மெய்ப்பாடு. சூ. 5, பேர்.;இ. வி. சூ. 578, உரை; கலித். 55: 17.

மு. வாகைத்திணைத்துறைகளுள், ‘நாலிரு வழக்கிற்றாபதப் பக்கம்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 16, இளம்.

(252)