174
அணங்குடை யவுணர் கணங்கொண் டொளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணா
திருள்கண் கெடுத்த பருதி ஞாலத்
திடும்பைகொள் பருவர றீரக் கடுந்திறல்
5அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங்
கரசிழந் திருந்த வல்லற் காலை
முரசெழுந் திரங்கு முற்றமொடு கரைபொரு
திரங்குபுன னெரிதரு மிகுபெருங் காவிரி
மல்ல னன்னாட் டல்ல றீரப்
10பொய்யா நாவிற் கபிலன் பாடிய
மையணி நெடுவரை யாங்க ணொய்யெனச்
செருப்புகன் மறவர் செல்புறங் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அருவழி யிருந்த பெருவிறல் வளவன்
15மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை
புதுமையி னிறுத்த புகழ்மேம் படுந
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூட்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணீஇயர்
20உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தன னாகலின்
ஆறுகொன் மருங்கின் மாதிரந் துழவும்
கவலை நெஞ்சத் தவலந் தீர
நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல்
கல்கண் பொடியக் கானம் வெம்ப
25மல்குநீர் வரைப்பிற் கயம்பல வுணங்கக்
கோடை நீடிய பைதறு காலை
இருநில நெளிய வீண்டி
உருமுரறு கருவிய மழைபொழிந் தாங்கே.

(பி - ம்.) 5 ‘அஞ்சன வண்ணன்’

திணை - வாகை; துறை - அரசவாகை.

மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணனை (பி - ம்.திருக்கிள்ளியை) மாறோக்கத்து நப்பசலையார்பாடியது.

(இ - ள்.) பிறரை வருத்தும் அச்சத்தினையுடையஅசுரர்திரள் கொண்டுபோய் மறைத்தார்களாக, சேய்மைக்கண்ணேவிளங்காநின்ற தலைமையினையுடைய ஞாயிற்றைக்காணாமையால் இருளானது உலகத்தாரது கண்ணை மறைத்தவட்டமாகிய உலகத்தினது நோய்கொண்ட துன்பம் நீங்கும்பரிசுமிக்கவலியையுடைய அஞ்சனம்போலும் நிறத்தையுடையதிருமேனியையுடைய கண்ணன் அந்த ஞாயிற்றைக்கொண்டுவந்து இவ்வுலகத்தின்கண் அந்தகாரம் நீங்கும்பரிசுஆகாயத்தின் கண்ணே நிறுத்தினாற்போலப் பகைவேந்தரொடுபொருது உடைந்து போதலால் தம் வேந்தனை இழந்துழலும்இன்னாமையையுடைய பொழுதின்கண் முரசு கிளர்ந்து முழங்கும்செண்டுவெளியையுடைய கோயிலுடனே கரையைப் பொருதுமுழங்கும் நீராலே உடைந்து ஆழ்ந்தோடுகின்ற மிக்கபெரிய காவிரியையுடைய வளவிய நல்ல நாட்டினது துயரங்கெடப்பொய்யாத நாவினையுடைய கபிலனாற் பாடப்பட்ட முகிலணிந்தபெரிய மலையிடத்து விரையப் போரை விரும்புமறவர்ஓடும்புறங்கண்ட இகழ்ச்சியற்ற தலைமையினையுடையமுள்ளூரின் மலையுச்சியின்கண் பிறராற் காண்டற்குஅரிய இடத்தின்கண் இருந்த பெரிய வென்றியையுடையசோழனது திங்கள் போலும் வெண்குடையைத் தோற்றுவித்துஅக்குடையைப் புதுமையுண்டாக நிலைபெறுவித்த புகழ் மேம்படுந!வரைமுழைஞ்சில் வாழும் புலியை யெழுதப்பட்ட இலாஞ்சனையையுடையகோட்டையையும் விளங்குதலையுடைய அணிகலத்தினையும்வண்டார்க்கப் பட்ட கண்ணியையும் பெரிய புகழினையுமுடையநும்முன்னாகிய தந்தை இவ்வுலகத்துச் செய்யப்பட்டநல்ல அறத்தின் பயனை ஆண்டாகிய தெய்வலோகத்துப்போய் நுகரவேண்டிப் போனானாதலின், நல்ல நெறியைக்கொன்ற பக்கத்தினையுடைய திசையெங்குஞ் சூழ்வரும்கவலையுற்ற மனத்தின்கண் வருத்தங்கெட நீ வந்துதோன்றினாய்; இணைந்த மாலையையுடைய தலைவ ! மலையிடம்பொடியக்காடு தீமிக மிக்க நீரெல்லையையுடைய நீர்நிலைகள்பலவும் முளிய இவ்வாறு கோடை நீடப்பட்ட பசுமையற்றகாலத்துப் பெரிய நிலங்குழியும்பரிசு திரண்டு உருமேறுமுழங்கும் மின் முதலாயின தொகுதியையுடைய மழை சொரிந்தாற்போல-எ- று.

முற்றமென்றது, அதனையுடையகோயிலை.

வெளிமுற்றமொடு வெண்குடை காட்டியெனஇயைப்பினும் அமையும்.

கோட்டைவெளியாகிய சுடர்ப்பூணென்றுமாம்.

ஞாயிற்றை அஞ்சனவுருவன் தந்து நிறுத்தாங்குமுற்றமொடு நாட்டு அல்லல் தீர வளவன் வெண்குடைகாட்டி அக்குடை நிறுத்த புகழ் மேம்படுந! நிரைத்தாரண்ணல்!நும்முன் பெயர்ந்தனனாகலின், நெஞ்சத்து அவலந்தீரப் பைதறு காலை மழைபொழிந்தாங்கு நீதோன்றினை; ஆதலால், இவ்வுலகத்திற்குக் குறை என்னையெனக்கூட்டி வினைமுடிவு செய்க.

அவுணர் கணங்கொண்டொளித்தெனஞாயிறு காணாத பருவரல்தீர அஞ்சனவுருவன் தந்து நிறுத்தாங்கென்பது,தேவர்களும் அசுரர்களும் பொருவழிப் பகலும் இராப்போலஇயங்கித் தாம் போர்செய்தற்பொருட்டு அசுரர்ஞாயிற்றைக் கரந்தார்கள்; ஞாலம் அதனால் உள்ளபருவரல் தீரத் திருமால் அதைக் கொண்டுவந்துவிட்டதொருகதை.

‘விடர்ப்புலி பொறித்தகோட்டை’ என்றதனால், சோழனொடு தொடர்புபட்டு 1அவனுக்குத் துப்பாதல் தோன்றிநின்றது.

‘ஆறுகொண் மருங்கின்’ என்றுபாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 6. “அரசுகெடுத் தலம்வருமல்லற் காலை” (சிலப். 4 : 8, 27 : 132)

7. “வள்வார் முரசங் கறங்கும்மணிமுன்றில் வேந்தன்” (நைடதம், அன்னத்தைத்தூது.64)

10. “பொய்யாச் செந்நா” (புறநா.168 : 19); “மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவி,னுவலை கூராக் கவலையி னெஞ்சி, னனவிற் பாடிய நல்லிசைக்கபிலன்” (பதிற். 85)

11. “மைபடு மால்வரை” (நற்.373); “மைபடு மாமலை” (அகநா. 153)

12. செருப்புகன் மறவர் : புறநா.31 : 9, குறிப்புரை.; “செருவேட்டுச் சிலைக்குஞ் செங்கணாடவர்” (அகநா. 157); “ஒன்னா ரோட்டியசெருப்புகன் மறவர்” (மதுரைக். 726)

10 - 13. முள்ளூர்மலை மலையனுடையதென்பதும்அதனைக் கபிலர் பாடியதும் இந்நூல் 123-ஆம் பாடல்முதலியவற்றாலும் விளங்கும்.

15. புறநா. 3 : 1; “மதிமருள்வெண்குடை மன்னவன்”, “மதிமருள் வெண்குடை மன்ன”(மணி. 4 : 27, 22 : 194); மலைமிசைத்தோன்று மதியம்போல்யானைத், தலைமிசைக் கொண்ட குடையர்” (நாலடி.21)

19 - 20. புறநா. 38 : 12 - 6; “ஈண்டுச்செய்வினை யாண்டுநுகர்ந் திருத்தல், காண்டகு சிறப்பினுங்கடவுள ரல்லது” (மணி. 14 : 38 - 9); “புண்ணியம்புரிந்தோர் புகுவது துறக்க மென்னுமீ தருமறைப் பொருளே”(கம்ப. நகர. 5)

20 - 23. “சுடர்வழக் கற்றுத் தடுமாறுகாலையோ, ரிளவள ஞாயிறு தோன்றிய தென்ன, நீயோதோன்றினை” (மணி. 10 : 10 - 12)

25 - 6. “உருகெழு மண்டிலங், கயங்கண்வறப்பப் பாஅய் நன்னிலம், பயங்கெடத் திருகியபைதறு காலை” (அகநா. 263)

28. புறநா. 161 : 4.

23 - 8. புறநா. 160 : 1 - 3.

ஏனாதி : கலித். 81 : 18.

(174)


1 “மூவரு ளொருவன் றுப்பா கியரென,ஏத்தினர் தரூஉங் கூழே” (புறநா. 122 : 5 - 6)