226
செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்
உற்றன் றாயினு முய்வின்று மாதோ
பாடுநர் போலக் கைதொழு தேத்தி
இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்
5மண்டமர் கடக்குந் தானைத்
திண்டேர் வளவற் கொண்ட கூற்றே.


(பி - ம்.) 5 ‘கடந்ததானைத்’ 6 ‘திண்டோள்’

திணையும் துறையும் அவை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

(இ - ள்.) தன்மனத்துள்ளே கறுவுகொண்டதாயினும் வெளிப்பட நின்று வெகுண்டதாயினும் உற்றுநின்று கையோடு மெய்தீண்டி வருத்திற் றாயினும் அதற்குப் பிழைத்தலுண்டாகாது; பாடுவாரைப்போலத் தோன்றி நின்று கையாற்றொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டதாகல் வேண்டும்; பொன்னான் இயன்ற மாலையினையும் மண்டியபோரின்கண் எதிர்நின்று வெல்லும் படையினையும் திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று-எ - று.

பொலந்தார் வளவனென இயையும்.

கூற்றம் இரந்ததாகல்வேண்டும்; இம்மூன்றினுள் ஒன்றுசெய்யினும் பிழைப்பின்றெனக் கூட்டுக.

இஃது அவனாண்மை மிகுதியினையும் வண்மையினையும் வியந்து இரங்கிக் கூறியவாறு.


(கு - ரை.) 3. “கைதொழூஉப் பரவி” (முருகு. 252)

4. புறநா. 220 : 5; “உயிரிரக்குங் கொடுங்கூற்றி னுளையச் சொன்னான்” (கம்ப. கையடை. 10)

5. கடத்தல் - வஞ்சியாது எதிர்நின்று வெல்லல். புறநா. 213:1. மு. காஞ்சித்திணைத்துறைகளுள், "கழிந்தோர் தேத்துக் கழிபட ருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை” என்பதற்கும் (தொல். புறத்திணை. சூ. 19, இளம்.), மன் அடாது வந்த மன்னைக்காஞ்சிக்கும் (தொல். புறத். சூ. 24, .) மேற்கோள்.

(226)