37
நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த
வேக வெந்திற னாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பப் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப்
5புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக
கராஅங் கலித்த குண்டுகண் ணகழி
இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி
யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம்
10கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச்
செம்புறழ் புரிகைச் செம்மன் மூதூர்
வம்பணி யானை வேந்தகத் துண்மையின்
நல்ல வென்னாது சிதைத்தல்
வல்லையா னெடுந்தகை செருவத் தானே.

திணை - வாகை (பி - ம். உழிஞை); துறை - அரசவாகை; (பி - ம். குற்றுழிஞை); முதல்வஞ்சியுமாம்.

அவனை மாறோக்கத்து (பி - ம். மாறோகத்து) நப்பசலையார் பாடியது.

(37)

(இ - ள்.) நஞ்சுடைத்தாகிய வெளிய பல்லினையுடைய ஐந்துபடம் பொருந்திய தலையைச்சுமந்த 1சினம் பொருந்திய வெய்ய திறலையுடைய பாம்பு புக்கதாக வானம் தீப்பிறக்கும்பரிசு முறுகிப் பசிய கொடியினையுடைய பெரிய மலைமுழையின்கண்ணே இடியேறு எறிந்தாற்போல, புறவுற்ற துயரத்தைக் கெடுத்த வெள்வேலோடு சினம் பொருந்திய படையையுடைய செம்பியன் மரபிலுள்ளாய்! கராம்செருக்கிய குழிந்த இடத்தையுடைய அகழியினையும், இடம் கரிதாகிய ஆழத்தின்கட் சேரத் திரண்டோடி இடையாமத்து ஊர்காப்பாருடைய விளக்குநிழலைக் கவரும் கடிய மாறுபாடு பொருந்திய முதலையையுடைய நீர்மிக்க மடுவினையும், செம்பு பொருவும் மதிலையும் உடைய தலைமைபொருந்திய பழைய ஊரினுள்ளே கச்சணிந்த யானையையுடைய அரசுண்டாகலின், அவற்றை நல்லவென்று பாராது அழித்தலைவல்லையாயிருந்தாய் பெருந்தகாய்! போரின்கண் - எ-று.

இலஞ்சியையுடைய அகழியென மாறிக்கூட்டினும் அமையும்; இப்பொருட்கும் கராம் கலித்தலை அகழிக்கு அடையாக்குக.

கராம் - முதலையுள் ஒருசாதி.

செம்பியன்மருக! நெடுந்தகாய்! விடரகத்து நாகம்புக்கென உருமெறிந்தாங்கு மூதூரகத்து வேந்துண்மையின், செருவத்துச் சிதைத்தல் வல்லையென மாறிக்கூட்டுக.

புள்ளுறு புன்கண் தீர்த்த பேரருளினோன் மருகனாயும் செருவின் கண் இவற்றை நல்லவென்று பாராது அழித்தல் வல்லையாயிருந்தாயென அவன் மறம் வியந்து கூறியவாறு.

ஐந்தலையென்றதற்கு ஐந்துதலையெனினும் அமையும்.

இடங்கருங்குட்டமென்பதனுள் உம்மையை அசைநிலையாக்கி இடங்கரையுடைய குட்டமென்று உரைப்பாரும் உளர்.
இடங்கரீட்டத்தென்று பாடம் ஓதுவாருமுளர்.


(கு - ரை.) 2. புக்கென - புக; இது, செய்தென என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 4. புறநா.91 : 8; கலித்.103 : 19.

1-4. புறநா.211 : 1 - 4; “பானாட், பாம்புடை விடர வோங்குமலை மிளிர, உருமுச்சிவந் தெறியும் பொழுது” (நற்.104)

5-6. புள் - புறா; அஃதுற்றபுன்கணைத் தீர்த்தோன் சிபி; புறநா.39 : 41, 46; “எள்ளறு சிறப்பி னிமையவர் வியப்பப், புள்ளுறுபுன்கண் டீர்த்தோன்”, “அறனறி செங்கோன் மறநெறி நெடுவாட், புறவுநிறை புக்கோன்”, “புறவுநிறை புக்குப் பொன்னுலக மேத்தக், குறைவி லுடம்பரிந்த கொற்றவன்” (சிலப்.20 : 51 - 2, 23 : 57 - 8, 29 : “அம்மானைவரி”); “உடல்கலக்கற வரிந்துதசை யிட்டுமொருவ னொருதுலைப் புறவொ டொக்கநிறை புக்கபுகழும்” (கலிங்க.இராச. 13); “புக்கால், மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப், புறாநிறை புக்க புகழோன்” (இராஜராஜசோழனுலா,5 - 6.); “கொலையே றுடம்படையக் கொய்தாலுமெய்தாத், துலையேறி வீற்றிருந்த சோழன்” (குலோத்துங்கசோழனுலா,17); “உலகறியக், காக்குஞ் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து, தூக்குந் துலைபுக்க தூயோனும்” (விக்கிரமசோழனுலா,10 - 11); “புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகை”, “இவர்குலத்தோன் மேற்பறவை, மன்னுயிர்க்குத் தன்னுயிரை மாறாக வழங்கினனால்”, “பிறந்தநாட் டொடங்கி யாருந் துலைபுக்க பெரியோன் பெற்றி, மறந்தநா ளுண்டே”, “புக்கடைந்த புறவொன்றின் பொருட்டாகத்துலைபுக்க, மைக்கடங்கார் மதயானை வாள்வேந்தன்” (கம்ப.திருவவதார. 65, குலமுறை. 7, விபீடண னடைக்கல. 10, கும்பகருணன்வதை. 355); ‘என்பும் உரியராதல், தன்னகம்புக்க குறுநடைப் புறவின் றபுதியஞ்சிச் சீரைபுக்கோன் முதலாயினார்கட் காண்க’ (குறள்,72, பரிமேல்.)

7. “கராஅங் கலித்த கண்ணகன் பொய்கை” (பட்டினப்.242)

9. கலித்.142 : 32 - 3.

7 - 10. ‘முதலையும் இடங்கரும் கராமும் தம்மின் வேறெனப் படுமோவெனின், கராஅங் கலித்த.......இலஞ்சியென வேறெனக் கூறப்பட்டன வென்பது’ (தொல்.மரபு. சூ. 41 - 3, பேர்.)

11. புறநா.201 : 9; “செம்பியன் றன்ன செஞ்சுவர்” (மதுரைக்.485); “செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்” (நெடுநல்.112); “செம்புறழ் புரிசை” (அகநா.375); “செம்பைச்சே ரிஞ்சி”, “செம்படுத்த செழும்புரிசை”, “செம்புகொப் புளித்த மூன்றுமதில்” (தே); “செம்புகொண் டன்ன விஞ்சித் திருநகர்” (சீவக.439)

4 - 13. உருமெறிந்தாங்குச் சிதைத்தல் என இயைக்க. அரசனது இயல்பின் மிகுதியைக் கூறியதனால், இச்செய்யுள் அரசவாகை யாயிற்று.

மு.முரணிய புறத்தோ னணங்கிய பக்கமென்னும் துறைக்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 10, இளம்.


1. “விரிநிற நாகம் விடருள தேனும், உருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்” (நாலடி,164)