383
ஒண்பொறிச் சேவ லெடுப்பவேற் றெழுந்து
தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோற் சிறுகிணை சிலம்ப வொற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
தன்புக ழேத்தினெ னாக வூன்புலந்
தருங்கடி வியனகர்க் குறுகல் வேண்டிக்
கூம்புவிடு மென்பிணி யவிழ்த்த வாம்பற்
றேம்பா யுள்ள தங்கமழ் மடருளப்
பாம்புரி யன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியி னிழையணி வாரா
ஒண்பூங் கலிங்க முடீஇ நுண்பூண்
வசிந்துவாங்கு நுசுப்பி னவ்வாங் குந்திக்
கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
எற்பெயர்ந்த நோக்கி.........................
........................கற்கொண்
டழித்துப் பிறந்தன னாகி யவ்வழிப்
பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பறி யேனே
குறுமுலைக் கலமரும் பாலார் வெண்மறி
நரைமுக வூகமொ டுகளுஞ்சென....................
......................... கன்றுபல கெழீஇய
கான்கெழு நாடன் கடுந்தே ரவியனென
ஒருவனை யுடையேன் மன்னே யானே
அறானெவன் பரிகோ வெள்ளியது நிலையே.

(பி - ம்.) 5 ‘தான் புகழ்ந்து’ 6 ‘குறுங்கல்வேண்டி’ 9 ‘பாம்பு பயன நதனனவடிவினசாமபின’ 16 ‘டளித்துப்’ 17 ‘படர்பறிவோனே’ 20 ‘தன்று பலகெழீஇய காழகெழு’ 23 பரிசொவெள்ளி’

திணையும் துறையும் அவை.

.....மாறோக்கத்து நப்பசலையார் (பி - ம். நபபாலையார்)


(கு - ரை.) 1. சேவல் - ஆண்கோழி. எடுப்ப - எழுப்ப. ஏற்றெழுந்து - துயிலுணர்ந்தெழுந்து ; "தூமலர்க்க ணேற்க துயில்" (பு.வெ.197) ; "துயிலிடைக் கண்ட துணைநலத் தேவியை, இயல்புடையங்க ணேற்றபிற் காணாது" (பெருங். 4.7 : 91 - 2)

2. மு. புறநா. 374 : 4. உறைக்கும் - துளிக்கும்.

3. நுண்கோற் சிறுகிணை : புறநா. 382 : 18 - 9. சிலம்ப ஒற்றி - முழங்க அடித்து.

4. பகடு - உழும் எருது; எருமைக்கடாவுமாம்.

1 - 4. புறநா. 385 : 1 - 2. 6. குறுகல் - அடைதல்.

குறுகல்வேண்டி (6) ஏத்தினெனாக (5)

7. மு. புறநா. 209 : 3.

10 - 21. கலிங்கம் - ஒருவகை நல்லாடை. “நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந், தரவுரி யன்ன வறுவை” (பொருந. 82 - 3) ; “காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇ” (சிறுபாண். 236) ; “கண்பொரு புகூஉ மொண்பூங் கலிங்கம்” (மதுரைக். 433)

9-11. காம்பின் கழை படு சொலியின் - மூங்கிலாகிய கோலின் உட்புறத்தே பெயர்த்தெடுக்கப்படும் வெள்ளிய தோல்போல. இழையணி வாரா - நெய்யப்பட்டுள்ள இழைகளின் வரிசை கண்ணுக்குப் புலப்படாத. சொலி : கலிங்கத்திற்கு உவமை.

12. வசிந்து - தலைவனை வயமாக்கி. உந்தி - கொப்பூழ்

16. அழித்து - மீட்டும். 17. படர்பு - செல்லுதல்.

18. மறி - ஆட்டுக்குட்டி. 20. ஊகம் - ஒருவகைக் குரங்கு.

21. அவியன் - ஓர் உபகாரி ; “களிமலி கள்ளி னற்றே ரவிய,

னாடிய விளமழை சூடித் தோன்றும், பழந்தூங்கு விடரகம்” (அகநா. 271 : 12 - 4)

23. அறான் - மேற்கூறிய தலைவன் தனது நிலைமை குன்றான். வெள்ளியதுநிலை எவன்பரிகோ - சுக்கிரனுடைய நிலைமைக்குச் சிறிதும் வருந்தேன் ; புறநா. 384 : 20, 386 : 24.

(383)