39
புறவி னல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோனிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதனின் புகழு மன்றே சார்தல்
5 ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற்
றூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின்
அடுதனின் புகழு மன்றே கெடுவின்று
மறங்கெழு சோழ ருறந்தை யவையத்
தறநின்று நிலையிற் றாகலி னதனால்
10 முறைமைநின் புகழு மன்றே மறமிக்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்கன மொழிகோ யானே யோங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்
15 டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய
வாடா வஞ்சி வாட்டுநின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே.

திணையும் துறையும் அவை.

அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

(இ - ள்.) புறவினது வருத்தத்தைக் களையவேண்டிக் கறைபொருந்திய அடியினையுடைய யானையினது வெளிய கோட்டாற் கடைந்து செறிக்கப்பட்ட வெளிய கடையினையுடைய கோலாகிய நிறுக்கப்படும் துலாத்தின்கண்ணே துலைபுக்க செம்பியனது மரபினுள்ளாயாதலான், இரந்தோர்க்குக் கொடுத்தல் நினக்கு இயல்பாவதல்லது புகழுமல்லவே; அசுரர்க்குப் பகைவராகிய தேவர்கள் கிட்டுதற்கு வெருவும் அணுகுதற்கரிய மிக்க வலியையுடைய ஆகாயத்துத் தூங்கெயிலை அழித்த நின்னுடைய முன்னுள்ளோரை நினைப்பின், ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதல் நினது புகழுமல்லவே; கேடின்றி, மறம்பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து அறம்நின்று நிலைபெற்றதாதலால், முறைமை செய்தல் நினக்குப் புகழுமல்லவே; அதனால், மறம் மிக்கெழுந்திருந்த போரை வென்ற கணையமரத்தோடு மாறுபடும் தசைசெறிந்த தோளினையும், கண்ணிற்கு ஆர்ந்த கண்ணியையும், மனஞ் செருக்கிய குதிரையையுமுடைய வளவ! எவ்வாறு கூறுவேனோ யான்? உயர்ந்த எல்லை அளந்தறியப் படாத பொன்படுகின்ற நெடிய சிகரங்களையுடைய இமயமலையின்கட் சூட்டப்பட்ட காவலாகிய விற்பொறியையும், மாட்சிமைப்பட்ட தொழில் பொருந்திய நெடிய தேரையுமுடைய சேரன் அழிய அவனது அழிவில்லாத கருவூரை அழிக்கும் நினது பெருமைபொருந்திய வலிய தாளைப் பாடுங்காலத்து - எ - று.

நின்னைப்பாடுங்காலென்பார், அவனது சிறப்புத்தோன்றத் தாள் பாடுங்காலென்றார்; தாளை முயற்சியெனினும் அமையும்.

நிறைதுலாம் புக்கோன் மருக! நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழுமன்று; தூங்கெயிலெறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின்புகழுமன்று; உறந்தை அவையத்து அறம் நின்றுநிலையிற்றாதலின், முறைமை நின் புகழுமன்று; அதனால், கலிமான்வளவ! நின் தாள் பாடுங்கால், யான் யாங்கனம் மொழிகோவெனக் கூட்டுக.

அதனால், யாங்கனம் மொழிகோவென இயையும்.

மருகவென்புழி, ஆதலானென்பது ஆற்றலாற் போந்தபொருளெனக் கொள்க.

1கறையடியென்பதற்கு உரல்போலும் அடியென்பாருமுளர்.


(கு - ரை.) 1. சொல்லிய - களைய; புறநா. 90 : 7; “துணைவனுக் குற்ற துன்பஞ் சொல்லிய தொடங்கி னாளே” (சீவக. 1146)

1 - 3. புறநா. 37 : 5 - 6, குறிப்புரை.

5 - 6. செம்பியன் பகைவருடைய தூங்கெயிலெறிந்தமை பின் வருவனவற்றாலும் விளங்கும் : - “ஒன்னா, ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியும், தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை, நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்” (சிறுபாண். 79 - 82); “வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற், றூங்கு மெயிலுந் தொலைத்தலால்” (பழ. 49); “வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில்மூன்றெறிந்த விகல்வேற் கொற்றமும்”, “தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை” (சிலப். 27 : 164 - 5, 29 : “வீங்குநீர்”); ”தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்” (மணி. 1 : 4); “திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த, விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்” (தொல். களவு. சூ. 11, ந. “கண்ணே”); “தேங்கு தூங்கெயி லெறிந்த வவனும்” (கலிங்க. இராச. 17); “வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத், தூங்கும் புரிசை துணித்தகோன்” (இராசராச. 13); “கூடார்தந், தூங்குமெயிலெறிந்த சோழனும்” (விக்கிரம. 8 - 9)

8 - 9. புறநா. 58 : 9; “மறங்கெழு சோழ ருறந்தை யவையத், தறங்கெட வறியா தாங்கு” (நற். 400); “ஆரங் கண்ணி யடுபோர்ச் சோழர், அறங்கெழு நல்லவை யுறந்தை” (அகநா. 93)

12. “கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்” (பொருந. 148)

15. “விடர்ச்சிலை பொறித்த வேந்தன்” (சிலப். 23 : 82; மணி. 28 : 104); “விடர்ச்சிலை பொறித்த விறலோன்” (சிலப். 28 : 136)

14 - 5. புறநா. 2 : 24, குறிப்புரை.
தலைவன் செய்தியையும் அவன் குலத்தோர் செய்தியையும் மொழிந்த மையால் இச்செய்யுள் இயன்மொழியாயிற்று.

(39)


1. பெரும்பாண். 351, ந.