154
திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்த ரதுபோல்
அரச ருழைய ராகவும் புரைதபு
5வள்ளியோர்ப் படர்குவர் புலவ ரதனால்
யானும், பெற்ற தூதியம் பேறியா தென்னேன்
உற்றனெ னாதலி னுள்ளிவந் தனனே
ஈயென விரத்தலோ வரிதே நீயது
நல்கினு நல்கா யாயினும் வெல்போர்
10எறிபடைக் கோடா வாண்மை யறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல விழிதரு மருவிநின்
கொண்பெருங் கானம் பாடலெனக் கெளிதே.

திணை - அது; துறை - பரிசிற்றுறை.

கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது.

(இ - ள்.) திரையலைக்கும் கடலினது கரைக்கண் அணியவிடத்தே போகினும் அறிவாரைக் காணின் நீர்வேட்கையினைத் தணிக்கும் சிறிய நீரைக் கேட்பர், உலகத்துமக்கள்; அதுபோல, வேந்தரிடத்தராகவும், குற்றந்தீர்ந்த வள்ளியோரை நினைத்துச் செல்வர், அறிவுடையோர்; அதனால், யானும் பெற்றதனைப் பயனாகக்கொண்டு பெற்றபொருள் சிறிதாயினும் இவன்செய்தது என்னென்று இகழேன், வறுமையுற்றேனாதலின்; நின்னை நினைத்து வந்தேன்;

பலநாளாகக் கற்ற கல்வியைப் புதிதாகப் பெற்ற செல்வம் மறப்பிக்குமென்று கூறுமுகத்தால், வல்விலோரியின் கொடைச்சிறப்பை இங்கே கூறிய வன்பரணரே இந்நூல், 149-ஆம் பாடலில் நள்ளியென்னும் வள்ளலின் கொடைச்சிறப்பையும் இங்ஙனமே பாராட்டினர்.

எனக்கு 1ஈயாயென்று இரத்தல் அரிது; நீ அப்பரிசிலைத் தரினும் தாராயாயினும் பூசலிடத்து எறியும் படைக்கலத்துக்குப் புறத்து அடியிடா ஆண்மையையும், துகிலினது தூயவிரியையொப்ப நெருங்கி உச்சியினின்றும் பலவாய் இழியும் குளிர்ந்த அருவியையுடைய நினது கொண்கானத்தையும் பாடல் எனக்கு எளிது-எ - று.

புரைதப வென்று பாடமோதிப் புரைதபப் படர்குவரெனினும் அமையும்.
நீ அது நல்கினும் நல்காயாயினும் ஈயெனவிரத்தல் எனக்கு அரிது; நினது ஆண்மையையும் கொண்பெருங்கானத்தையும் பாடல் எனக்கு எளிதெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.


(கு - ரை.) 1. நணி: "துறைநணி யூரனை" (ஐங்குறு. 20); "நணிநணித் தாயினும் சேஎய்ச் சேய்த்து" (பரி.17 : 25); "நீர்நணிப் பிரம்பின்" (பெரும்பாண். 288)

1-3. புறநா.204 : 5 - 9; "கடல்சார்ந்து மின்னீர் பிறக்கும் மலை சார்ந்து, முப்பீண் டுவரி பிறத்தலால்" (நாலடி. 245); "கடல் பெரிது, மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல், உண்ணீரு மாகிவிடும்" (மூதுரை, 12)

5. புறநா.47 : 1.

‘படர்' என்னும் உரிச்சொல் நினைத்தலும் செல்லுதலுமாகிய குறிப்பை யுணர்த்துமென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 42, ந.
8. புறநா.204 : 1; "நல்லா றெனினுங் கொளறீது" (குறள், 222); "கொள்ளுத றீது கொடுப்பது நன்றால்" (கம்ப. வேள்வி. 29)
ஈயென்கிளவி இழிந்தோன் கூற்றென்பதற்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 49, .

10. புறநா.165 : 15; "ஓடாப் பூட்கை ... அறுவையர்", "ஓடாப் பூட்கை மறவர்" (பதிற். 34 : 2 - 3, 57); "ஓடா பூட்கை வேந்தன்", (அகநா. 100 : 8); "ஓடாப் பூட்கைப் பிணிமுகம்" (முருகு. 247); "ஓடாப் பூட்கை யுறந்தையும் வறிதே" (சிறுபாண். 83); "விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி, னோட்டன்றோ வன்க ணவர்க்கு" (குறள், 775)

11. மீமிசை : "நவிரத்து மீமிசை" (மலைபடு. 579)

10-12. துகில் அருவிக்குவமம்; "வேறுபஃ றுகிலி னுடங்கி... இழிதருமருவி" (முருகு. 296 - 316); "அவிர்துகில் புரையு மவ்வெள்ளருவி" (குறிஞ்சிப். 55, குறிப்புரை); "மாநீல மாண்ட துகிலுமிழ்வ தொத்தருவி, மாநீல மால்வரை நாடகேள்" (திணைமாலை.6)

13. கொண்பெருங்கானம் : புறநா.155: 7, 156 : 2; "பொன்படு கொண்கான நன்னன்" (நற். 191 : 6). கொண்கானம் - கொங்கணமென்பர் (154)


1 "ஈயா யெனக்கென் றிரப்பானே லந்நிலையே, மாயானோ மாற்றிவிடின்" (நாலடி.308)