155
வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக்
கிளக்கும் பாண கேளினி நயத்திற்
பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
5ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங்
கிலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்டா ரகல நோக்கின மலர்ந்தே.

திணை - அது; துறை - பாணாற்றுப்படை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) வளைந்த கோட்டையுடைய சிறிய யாழை உலர்ந்த மருங் கிலே தழுவிக்கொண்டு அறிவோர்யார்தான் எனது துன்பத்தைத் தீர்க்கவென்று நயத்திற் சொல்லும் பாண! யான் சொல்லுகின்றதனை இப்பொழுது கேட்பாயாக; பாழூரின்கண் நெருஞ்சியினது பொன்னிறத்தையுடைய வாலியபூ எழுகின்ற ஞாயிற்றை எதிர்கொண்டாற்போல, வறுமையுற்ற யாழ்ப்புலவரது ஏற்குமண்டை, விளங்கிய புகழையுடைய கொண்பெருங்கானங்கிழானது குளிர்ந்த தாரையுடைய மார்பத்தை மலர்ந்து நோக்கின-எ - று.

‘ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாங்கு' என்புழி, இன்: சாரியை; அது, 1தோற்றம்வேண்டாத் தொகுதிக்கண் வந்தது; அன்றி, ஐகாரம் விகாரத்தால் தொக்கதெனினும் அமையும்.

நயத்திற்கிளக்கும் பாணவென இயையும்; நயத்தின் அகலம் நோக்கினவென இயைப்பினும் அமையும்.
மண்டை அகலநோக்கி மலர்ந்தவென்ற கருத்து : கொடுக்கும் பொருள் மார்பின் வலியான் உளதாமாகலின், அகலநோக்கின வென்றதாகக் கொள்க.


(கு - ரை.) 1. "வணரமை நல்யாழ்" (பதிற். 41 : 2)

4. "பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சி" (பதிற்.26 : 10)

5. "வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு" (முருகு. 1-2)

4-5. நெருஞ்சிப்பூக்கள் சூரியனையே நோக்குதல் இயல்பு; "ஓங்கு மலைநாடன், ஞாயி றனையனென் றோழி, நெருஞ்சி யனையவென் பெரும் பணைத் தோளே" (குறுந். 315); " வானிடைச், சுடரொடு திரிதரு நெருஞ்சி போல" (அகநா.336); "வெஞ்சுடர் நோக்கு நெருஞ்சியில்" (இறை.சூ. 47, உரை, மேற், 296); "நீள்சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப்

பூப்போல்" (சீவக. 461); "அருந்தவர்க் காயினுந் திருந்துமுக மிறைஞ்சாது, செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப,் பொன்புனைமலர்" (பெருங்.2. 4 : 13 - 5); "ஏழுளைப் புரவியொ டெழுகதிர் நோக்கிய, சிற்றிலை நெருஞ்சிப் பொற்பூவென்ன" (கல்லாடம்,65 : 14 - 5)

6. "இலம்படு புலவ ரேற்றகை ஞெமர" (பரி.10 : 126); "இலம்படு புலவ ரேற்றகை நிறைய" (மலைபடு. 576). மண்டை : புறநா.103 ; 3, குறிப்புரை.

7. புறநா.154 : 13.

6-8. மண்டைமலர்தல் : புறநா.103. 3, 179 : 2 - 3, 393 : 4 - 5.

(155)


1 "தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்" (தொல். புணரியல், சூ. 30)