50
மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார்
பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்
5குருதி வேட்கை யுருகெழு முரசம்
மண்ணி வாரா வளவை யெண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியா தேறிய வென்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை
10அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல்
அதனொடு மமையா தணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென
வீசியோயே வியலிடங் கமழ
இவணிசை யுடையோர்க் கல்ல தவண
15துயர்நிலை யுலகத் துறையு ளின்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசினீ யீங்கிது செயலே.

(பி - ம்.) 1 ‘வளப்பின்’, ‘வள்ளின்’

திணை - அது; துறை - இயன்மொழி.

சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை முரசுகட்டில் அறியாதேறிய மோசிகீரனை (பி - ம். மோசிகீரனாரை)த் தவறு செய்யாது அவன் துயிலெழுந்துணையும் கவரிகொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.

(இ - ள்.) குற்றந்தீர வலித்துப் பிணித்த வாரப்பட்ட வாரை யுடைய கருமரத்தாற் செய்தலான் இருட்சிபொருந்திய பக்கம் பொலிவு பெற மயிலினது தழைத்த நெடிய பீலியால் தொடுக்கப்பட்ட ஒள்ளிய பொறியை யுடைத்தாகிய நீலமணிபோலும் நிறத்தையுடைய தாரைப் பொற்றளிரையுடைய உழிஞையுடனே பொலியச் சூட்டப்பட்டுக் குருதிப் பலிகொள்ளும் விருப்பத்தையுடைய உட்குப்பொருந்திய வீரமுரசம் நீராடிவருவதன் முன்னே எண்ணெயினது நுரையை முகந்தாற் போன்ற மெல்லிய பூவையுடைய கட்டிற்கண்ணே இதனை முரசுகட்டி லென்பதறியாது ஏறிக்கிடந்த என்னை வெகுட்சிதோன்ற இருகூறாக்கும் நின்னுடைய வாளை வாயை மாற்றியதாகிய அதுவும் அமையும், நல்ல தமிழ்முழுதும் அறிந்தமைக்கு; அவ்வெகுட்சி யொழிந்து அதனாலும் அமையாதே குறுக வந்து நினது வலியையுடைய முழவுபோலும் தோளையெடுத்துச் சாமரத்தாற் குளிர வீசினாய்; இவ்வகன்ற உலகத்தின்கண்ணே பரக்கும்பரிசு இவ்வுலகத்துப் புகழுடையோர்க்கல்லது, அவ்விடத்ததாகிய உயர்ந்த நிலைமையையுடைய உலகத்தின்கண் உறைதலில்லாமையைத் தெரியக்கேட்ட பரிசாலேயோ வெற்றி பொருந்தப்பட்ட தலைவா! நீ இவ்விடத்து இச்சாமரையை வீசுதல்? அதற்குக் காரணம் சொல்லுவாயாக-எ - று.

சூட்டியென்பதனைச் சூட்டவென்று திரிப்பினும் அமையும்.

உழிஞை - கொற்றான்; அது குடநாட்டார் வழக்கு.

முழவுத்தோளோச்சியெனவும், தண்ணெனவீசியோயெனவும் கூறிய வாற்றால், சாமரையென்பது பெற்றாம்.

கமழ்தல் ஈண்டுப் பரத்தற்பொருட்டாய் நின்றது.

1தமிழென்பதற்குத் தமிழ்நாடெனினும் அமையும்.

குருசில்! நீ இதுசெய்தல், இசையுடையோர்க்கல்லது உறையுளின்மை கேட்ட மாறுகொலெனக் கூட்டுக.

எண்ணென்பது கருதெனவுமாம்.

எண்ணியென்று பாடமாயின், கருதியென்க.


(கு - ரை.) 1. விசித்த - கட்டிய. வார்பு - வாருதல். வள்பு - வார்.

3.புறநா. 274 : 2.

4. உழிஞை - கொத்தானென்னும் கொடி; பகைவருடைய மதிலை வளைத்துக் கொள்வோர் அதற்கு அறிகுறியாக அணிதற்குரியது. அடை யாளப்பூக்கள் தலைவர்களுக்கேயன்றி அவர்களுடைய ஆயுதங்களுக்கும் அவர்களுடைய வாத்தியங்களுக்கும் சூட்டப்படுதல் மரபு; “வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகம்” (நெடுநல். 176) என்று பாண்டியனுடைய வேல் கூறப்பட்டிருத்தல் காண்க.

5. “குருதி வேட்ட, மயிர்புதை மாக்கண் கடிய கழற” (பதிற். 29); “கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை, முரசு” (மணி. 1 : 30 - 31)

1 - 5. “விரவிய சந்தமென் சேறு மட்டித்துப், பிரவியந் தழையொடு பிணையல் வேய்ந்தன, பரவிய பலிபெறு முரசம் பன்மையில், அரவியங் கதிர்கொள வதிர்ந்த றைந்ததே” (சூளா. சுயம். 210); பெருங். 2. 2 : 26 - 30.

7. மு. அகநா. 93 : 13.

14 - 5. புறநா. 27 : 7 - 9, குறிப்புரை; “புகழ்வெய் யோர்க்குப் புத்தேணாடெளிது” (முதுமொழிக். 71)

14 - 6. ‘ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு இன்பத்தைத் தந்து பூமியுள்ளளவும் நிற்பது புகழெனலுமாம்;

ஒன்றாவுலகத்.........தொன்றிலெனவும்,

இவணிசையுடையோர்க்..................மாறுகொலெனவும் கூறினாராகலின்’ (சிலப். 11 : 112 - 7, அடியார்.)

15. உயர்நிலையுலகம் : மதுரைக். 197; கலித். 139 : 36.

16. மாறு, ஏதுப்பொருள் படுவதோரிடைச் சொல். தலைவனது உத்தம குணங்களைக் கூறினமையின், இஃது இயன்மொழியாயிற்று.

மு. முரசுநாட்கோடலுக்கும் (சிலப். 5 : 89 - 94, அடியார்.), இயன்மொழிக்கும் (தொல். புறத்திணை. சூ. 35, ந.) மேற்கோள்.

(50)


1. “மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்”, “தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்” (புறநா. 35 : 3, 51 : 5)