125
பருத்திப் பெண்டின் பனுவ லன்ன
நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர
உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே
5நள்ளாதார் மிடல்சாய்த்த
வல்லாளநின் மகிழிருக்கையே
உழுத நோன்பக டழிதின் றாங்கு
நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே
குன்றத் தன்ன களிறு பெயரக்
10கடந்தட்டு வென்றோனு நிற்கூ றும்மே
வெலீஇயோ னிவனெனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேன் மலைய னல்ல னாயின்
15நல்லமர் கடத்த லெளிதும னமக்கெனத்
தோற்றோன் றானு நிற்கூ றும்மே
தொலைஇயோ னிவனென
ஒருநீ யாயினை பெரும பெருமழைக்
கிருக்கை சான்ற வுயர்மலைத்
2020 திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.

(பி - ம்.) 13 ‘சமரந்’

திணை - வாகை; துறை - அரசவாகை.

சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் 1துப்பாகிய தேர் வண்மலையனை வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் (பி - ம். துப்பாகிய வொருவனாம் மலையனை வடவண்ணத்தன் பேரிசாத்தன்) பாடியது.

(இ - ள்.) பருத்திநூற்கும் 2பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சு போன்ற நெருப்புத் தன்வெம்மை ஆறுதற்கு ஏதுவாகிய நிணமசைந்த கொழுவிய தடிகளைப் பெரிய உடலிடத்தையுடைய கள்வார்த்த மண்டையோடு முறை முறையாக ஒன்றற்கொன்று மாறுபட உண்பேமாக, எம்முடைய தலைவ! நின்னைக் காண்பேன் வந்தேன், பகைவரது வலியைத் தொலைத்த வலிய ஆண்மையுடையோய்! நினது மகிழ்ச்சியையுடைய இருக்கைக்கண்; உழுத வலிய பகடு பின் வைக்கோலைத் தின்றாற்போல நினது 3தாளாற்றலாற்செய்த பொருளை யாவர்க்கும் அளித்துப் பின் நீ விரும்பியுண்ணும் கள் நல்ல அமிழ்தாவதாக; மலைபோலும் யானை பட எதிர்நின்று கொன்று வென்றவனும், நம்மை வெல்வித்தோன் இவனென நின்னையே மகிழ்ந்து சொல்லும்; வீரக்கழலாகிய அணியாற்சிறந்த செய்ய அடியாலே போர்க்களத்தைக் கைக்கொள்ளவேண்டி விரைந்து வந்து போரைத் தடுக்க வலிய வேலினையுடைய மலையன் அல்லனாயின் நல்ல போரைவெல்லுதல் நமக்கு எளிதெனத் தோற்றவனும் நம்மைத் தொலைவித்தோன் இவனென நின்னையே புகழ்ந்துசொல்லும்; ஆதலால், நீ ஒருவனாயினாய், பெரும ! பெரிய மழைக்கு இருப்பிடமாதற்கு அமைந்த உயர்ந்த மலையையுடைய திருத்தக்க சேயையொப்பாய்! நின்னை நட்பாகவும் பகையாகவும் பெற்றோர்க்கு-எ - று.

பனுவலன்ன நிணமென இயையும்.

நிலங்கவர்பென்பது கவரவெனத் திரிக்கப்பட்டது. எமது நிலத்தைக் கைக்கொண்டெனினும் அமையும்.

தாளாற்றலாற் செய்தபொருளில் நல்லனவெல்லாம் பரிசிலர்க்கு வழங்கி எஞ்சியது உண்டலான்,அழிதின்றாங்கென்றார்.

காண்குவந்தென்பன ஒருசொன்னீர்மைப்பட்டு உண்குமென்பதற்கு முடிபாய் நின்றன.

உண்குமென்பது சுற்றத்தை உளப்படுத்தி நின்றமையின், பன்மை யொருமை வழுவமைதியாய் நின்றது.

மன் : கழிவின்கண் வந்தது.

பெரும ! சேஎய் ! வென்றோனும், வெலீஇயோன் இவனென நிற்கூறும்; தோற்றோனும், தொலைஇயோன் இவனென நிற்கூறும்; அதனால், நிற்பெற்றி சினோர்க்கு ஒருநீயாயினையாதலால், நின் மகிழிருக்கைக் கண்ணே உண்கும் காண்குவந்திசின்; பகடு அழிதின்றாங்கு நீ உண்ணும் நறவு நல்ல அமிழ்தாகவென மாறிக்கூட்டுக.

நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை என்பதற்கு எரியாது 1 பூத்துக்கிடக்கின்ற தழல்போலும் நிணந்தயங்கு கொழுங்குறை யெனினும் அமையும்.

பருஉக்கண்மண்டை யென்பதற்குக் கண்ணையுடைய உடலிடம் பரிய மண்டையெனினும் அமையும்.


(கு - ரை.) 1. பருத்திப்பெண்டு : புறநா.326 : 5; "ஆளில் பெண்டிர் தாளிற் செய்த, நுணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள" (நற். 353); 'நுண்ணிய பலவாய பஞ்சு நுனிகளாற் கைவன் மகடூஉத் தனது செய்கை மாண்பினால் ஓரிழைப் படுத்தலாம் உலகத்து நூல் நூற்றலென்பது' (இறை. சூ. 1, உரை); "பஞ்சிதன் சொல்லாப் பனுவலிழையாகச், செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத, கையேவாயாகக் கதிரே மதியாக, மையிலா நூன்முடியு மாறு" (நன்னூல், சூ. 23)

2. 'நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை...........என இவை இருவகை யுகரமும் ஒற்றடுத்து உரியசையாயினவாறு' (தொல். செய். சூ. 10, பேர்.)

1 - 2. புறநா. 393 : 12 - 4; "இழுதி னன்ன வானிணம்" (மலைபடு. 244)

'இன்னுமவ்விலேசானே, நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறையென்றாற் போலச் சினமில்லதனை உள்ளது போலக் கூறுவனவுங் கொள்ளாமோவெனின், உணர்வுடையனவற்றுக்கல்லது சுவைதோன்றாமையின் வெகுளியென்று ஈண்டுக் கூறப்படாவென்பது. இது பிறன்கட் டோன்றிய பொருள்பற்றி வரும்" (தொல். மெய்ப்பாடு. சூ. 10, பேர்.)

7. புறநா. 366 : 14.

‘அழி - வைக்கோல்; ஆளழி வாங்கி யதரி திரிப்ப: இது சிலப்பதி காரம்: உழுத நோன்பக டழிதின் றாங்கு : இது புறநானூறு' (தக்க. 439, உரை); (தொல். உவம. சூ. 20, பேர். மேற்.)

(125)


1. புறநா. 122 : 5, குறிப்புரை.

2. பெண்டாட்டி - பெண்; "மழையு மஞ்சும் வளியும் போலும், செலவினா ளொருபெண்டாட்டி" (தகடூர்யாத்திரை); 'ஒருபெண்டாட்டி தமரொடு கலாய்த்து' (இறை. சூ. 1, உரை)

3."தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு" (குறள், 212)

4. "நீறுமேற் பூத்த நெருப்பு" (பு. வெ.166)