198
அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பிற் றண்டாக்
கடவுள் சான்ற கற்பிற் சேயிழை
மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க்
5கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தித்
திண்டே ரண்ண னிற்பா ராட்டிக்
காதல் பெருமையிற் கனவினு மரற்றுமென்
காமர் நெஞ்ச மேமாந் துவப்ப
ஆலமர் கடவு ளன்னநின் செல்வம்
10வேல்கெழு குருசில் கண்டே னாதலின்
விடுத்தனென் வாழ்கநின் கண்ணி தொடுத்த
தண்டமிழ் வரைப்பகங் கொண்டி யாகப்
பணித்துக்கூட் டுண்ணுந் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோ ரன்னநின் புதல்வ ரென்றும்
15ஒன்னார் வாட வருங்கலந் தந்துநும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்கிவர் பெருங்கண் ணோட்டம்
யாண்டு நாளும் பெருகி யீண்டுதிரைப்
பெருங்கட னீரினு மக்கடன் மணலினும்
20நீண்டுயர் வானத் துறையினு நன்றும்
இவர்பெறும் புதல்வர்க் காண்டொறு நீயும்
புகன்ற செல்வமொடு புகழினிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை யானும்
கேளில் சேஎய் நாட்டினெந் நாளும்
25துளிநசைப் புள்ளினின் னளிநசைக் கிரங்கிநின்
அடிநிழற் பழகிய வடியுறை
கடுமான் மாற மறவா தீமே.

திணையும் துறையும் அவை.

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் (பி - ம். பெரிய சாத்தன்) பாடியது.

(இ - ள்.) அருவிதாழ்ந்த பெரியமலைபோல ஆரத்தோடு பொலிந்த மார்பின்கண் வேட்கை தணியாத தெய்வத்தன்மையமைந்த கற்பினையும் செய்ய ஆபரணத்தையுமுடைய உன்னுடைய மடவோள் பெறப்பட்ட பவழமணி போன்ற அழகிய வாயையும் கிண்கிணியையுமுடைய புதல்வர் பொலிகவென்று வாழ்த்தித் திண்ணிய தேரையுடைய வேந்தே! நின்னைப் புகழ்ந்து பரிசின்மேல் அன்புபெரிதாகலிற் கனவின்கண்ணும் நின் புகழையே கூறும் எனது விருப்பத்தையுடைய நெஞ்சம் இன்புற்று மகிழ ஆலிலையின் கண் மேவிய திருமால்போலும் நின்னுடைய செல்வத்தையெல்லாம் வேலையுடைய தலைவ! கண்டேன்; ஆதலால் விடைகொண்டேன்: வாழ்க, நினது கண்ணி! தொடர்புபட்ட குளிர்ந்த தமிழ் நாடெல்லை முழுதும் கொள்ளையாகக் கொண்டு நின்பகைவரைத் தாழ்த்து அவர்கள் பொருள்களையும் வாங்கிக்கொண்டுண்ணும் தணித்தற்கரிய மிக்க வலியையுடைய நின்னையொக்கும் வலியையுடைய நின்னுடைய மைந்தர் எந்நாளும் பகைவர் தேய அவருடைய பெறுதற்கரிய அணிகலத்தைக் கொண்டுவந்து நும்முடைய பொன்னுடைய நெடிய நகரின் கண் பொலிய வைத்த நின்னுடைய முன்னுள்ளோரைப்போல்க, இவருடைய பெரிய கண்ணோட்டம்; யாண்டும் நாளும் மிக்குச் செறிந்த திரையையுடைய பெரிய கடல்நீரினும் அக்கடல் கொழித்திடப்பட்ட மணலினும் நீண்டுயர்ந்த மழையிற்றுளியினும் பெரிதும் இவர் பெறும்பிள்ளைகளைக் காணுந்தோறும் நீயும் விரும்பிய செல்வத்துடனே புகழும் இனிதாக விளங்கி நெடுங்காலம் வாழ்க! பெருந்தகாய்! யானும், உறவில்லாத தூரிய நாட்டின்கண்ணே நாடோறும் துளியை நச்சுதலையுடைய வானம்பாடியென்னும் புட்போல நின்னுடைய வண்மைநசையான் இரங்கி நினது அடி நிழற்கட் பழகிய அடியின் வாழ்வேன்; விரைந்த செலவையுடைய குதிரையையுடைய மாறனே! நீ செய்த செயலை மறவா தொழிவாயாக-எ - று.

புதல்வர்மார்பிற் பொலிகெனக் கூட்டினும் அமையும்.

1‘ஆலமர் கடவு ளன்னநின்’ என்றதற்கு ஆலின்கீழ் அமர்ந்த முக்கட் செல்வனாகிய கடவுளையொப்ப என்றும் நிலைபெற்றிருப்பேனென்றிருக்கின்ற நின்னென்றுரைப்பினும் அமையும்.

‘நின்முன்னோர் போல்கிவர் பெருங்கண்ணோட்டம்’ என்றது, அவரும் வழங்காதுவைத்தலிற் கண்ணோட்டமிலர்; இவரும் அவரையொக்கக் கண்ணோட்டமிலராகவென்பதாயிற்று.

‘முன்னோர்போல்கிவர்பெருங்கண்ணோட்டம்’ எனவும், ‘வாழ்கநின்கண்ணி’ எனவும், ‘நீடுவாழிய’ எனவும் நின்றவை குறிப்புமொழி; 2அன்றி, என்னிடத்து நீ செய்த கொடுமையால் நினக்குத் தீங்குவரும்; அது வாராதொழிகவென வாழ்த்தியதூஉமாம்.

மறவாதீமேயென்றது, என்னளவில் நீ செய்த செய்தியை மறவாதொழி யென்பதாயிற்று.

‘யாண்டுநாளும் பெருகி’ என்பதற்கு 3நின்னாளே திங்களனையவாக; அத்திங்கள் யாண்டோரனையவாக; யாண்டே ஊழியனைய வரம்பினவாக வென்பது கருத்தாகக் கொள்க.


(கு - ரை.) 1-2. “மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை, அணி முலைத் துயல்வரூஉ மாரம் போலச், செல்புன லுழந்த சேய்வரற்கான்யாறு” (சிறுபாண். 1 - 3); “அலைநீ ராடை மலைமுலை யாகத், தாரப் பேரியாற்று மாரிக் கூந்தற், கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை” (சிலப். 5 : 1 - 3)

3. “கடவுட் கற்பின் மடவோள்” (அகநா. 314 : 5)

4. “மணிபுரை செவ்வாய்” (கலித். 79, 81; அகநா. 16, 66)

3-6. “கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய, புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பி, னன்ன ராட்டிக் கன்றியு மெனக்கு, மினிதா கின்றாற் சிறக்கநின் னாயுள்” (அகநா. 184 : 1 - 4)

7. கனவினரற்றல் : கலித்.24 : 7 - 12.

8. ஏமாத்தல் : புறநா. 101 : 9, குறிப்புரை; கலித். 80 : 14.

11. கண்ணியை வாழ்த்தல் : “வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி” (மணி. 5 : 28); “வாழ்கநுங் கண்ணி மாதோ” (சீவக. 1890)

14. கலித். 80 : 14 - 5. தொல். கற்பு. சூ. 6

18-22. பன்மைக்கு மணலையும் நீர்த்துளிகளையும் உவமம் கூறுதலை, “எத்துணை யாற்று ளிடுமண னீர்த்துளி, புற்பனி யுக்க மரத்திலை நுண்மயி, ரத்துணை யும்பிற ரஞ்சொல்லி னார்மனம், புக்கன மென்று பொதியறைப் பட்டார்” (வளையாபதி) என்னுமிடத்தும் காண்க.

23. புறநா. 55 : 17, குறிப்புரை.

25. “தற்பாடிய தளியுணவிற், புள்” (பட்டினப்.3-4.); (கலித். 46 : 20 - 21, 146 : 52 - 3); “மலையுறை பகைத்து வானுறைக் கணங்கும், புட்குலஞ் சூழ்ந்த பொருப்பு”, “அளிகார்ப் பாடுங் குரனீர் வறந்த, மலைப்புட் போல” (கல். 53 : 10 - 11, 95 : 11 - 2)

26. ‘அடியுறை’ என்பது அடியேன் என்னும் பொருளில் அக்காலத்து வழங்கியது என்று தெரிகிறது; (புறநா. 67 : 12, குறிப்புரை; கலி. 56 : 4)

(198)


1.புறநா. 91 : 5 - 6; “ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல்”; “ஆலமர்செல்வன்” (கலித். 81, 83); “ஆல்கெழு கடவுள்” (முருகு. 256) “ஆலமர் செல்வன்” (சிலப். 24); மணி.3 : 144; சிறுபாண். 97.

2. புறநா. 196 : 10, உரை.

3. பதிற். (90) : 51 - 3.