260
வளரத் தொடினும் வௌவுபு திரிந்து
விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத்
தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
உளருங் கூந்த னோக்கிக் களர
5கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக்
காணலென் கொல்லென வினவினை வரூஉம்
பாண கேண்மதி யாணரது நிலையே
புரவத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந்
10தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டும்
கையுள போலுங் கடிதண் மையவே
முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தந் துடிபுணை யாக
15வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வையெயிற் றுய்ந்த மதியின் மறவர்
கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த வுரைய னாகி
20உரிகளை யரவ மானத் தானே
அரிதுசெல் லுலகிற் சென்றன னுடம்பே
கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக்
கம்பமொடு துளங்கிய விலக்கம் போல
அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே
25உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே.

(பி - ம்.) 13 ‘நெடுவெறி’ 22 ‘காலுறக்’ 23 ‘விலங்கு’

திணை - அது (பி- ம். பாடாண்டிணை); துறை - கையறுநிலை (பி - ம். செருவிடை வீழ்தல்; கையறுநிலையுமாம்); பாண்பாட்டுமாம் (பி - ம். பாடாண்பாட்டுமாம்)

.......................................................1வடமோதங்கிழார் பாடியது.

(இ - ள்.) ஓசைமிகவேண்டுமென்று எறியினும் (பி - ம். அறையினும்) ஓசையை உள்வாங்கி வேறுபட்டு இரங்கற்பண்ணாகிய விளரியைச் சென்று உறுகின்ற இனிய நரப்புத்தொடையினது தீங்கை நினைந்து நடுங்கும் நெஞ்சத்தைத் தலைப்பட்டுப் புறப்பட்டவளவின் நிமித்தவழியாக ஒரு மனைவி விரித்துவருகின்ற மயிரைப்பார்த்துக் களர்நிலத்துள்ள கள்ளிமரத்தின் நிழற்கண் உண்டாகிய தெய்வத்தை ஏத்திப் பசிதங்கிய வயிற்றையுடையையாய் இரங்கிக் கையாற்றொழுது நம் குருசிலைக் காண மாட்டேன் கொல்லோவென்று எதிர் வருவாரைப் பார்த்துக் கேட்டுவருகின்ற பாண! கேட்பாயாக, நமது செல்வம் பட்ட நிலைமை: இனி நீ அவன் நமக்கு விட்ட விளைநிலங்களைக் கைப்பற்றி உண்பாயாயினும் அன்றி அவனோடுகூடி இன்புற்றிருந்த விடத்து அவனையின்றி உயிர் வாழ்தற்பொருட்டு இரக்கக்கடவோமென்றெழுந்திருந்து வருத்தங்கொள் வாயாயினும் இரண்டும் நினது கையகத்துள்ளன; மிக்க அணுமையையுடைய ஊர்முன்னாகச் செய்யப்பட்ட பூசலின்கட்டோன்றித் தன்னுடைய ஊரின்கண் மிக்க நிரையைக் கொண்ட மறத்தினையுடைய வீரர் எய்யப்பட்ட அம்பு (பி -ம். அப்பு) வெள்ளத்தைத் தன்துடியே புணையாகவென்று பகைவரைக் கொன்று அவர் கொண்ட நிரையை மீட்டு உலகம் தனிப்பச் சூழ்ந்துகொண்ட பாம்பினது கூரிய பல்லினின்றும் பிழைத்துப்போந்த திங்களைப்போல மறவருடைய கையினின்றும் பிழைத்துப்போந்த கன்றையுடைய பலவாகிய ஆனிரையுடனே வந்த சொல்லையுடையனாய்த் தோலுரித்த பாம்புபோலத் தான் ஒருவனுமேயாக அரிதாகச் செல்லப்படும் தேவருலகத்தின்கட் போயினான்; அவனது உடம்பு, காட்டுட் சிற்றியாற்றினது அரிய கரையிடத்துக் காலுற நின்று நடுக்கத்தோடு சாய்ந்த இலக்கத்தையொப்ப அம்பாற் சலித்து அவ்விடத்து வீழ்ந்தது; உயர்ந்த கீர்த்தி மிகவுந் தோன்றிய மறவன் பெயர் மென்மையமைந்த மயிலினது அழகிய மயிராகிய பீலியைச் சூட்டப் பிறர் இடங்கொள்ளப்படாத சிறிய விடத்துப் புடைவையாற் செய்யப்பட்ட பந்தர்க்கீழ் நட்ட கன்மேலது-எ - று.

சூட்டியென்பது, சூட்டவெனத் திரிக்கப்பட்டது; சூட்டப்பட்டெனினும் அமையும்.

‘மனையோள் கூந்தனோக்கி’ என்பதற்கு, ‘பாண! என் மனைவியது சரியும் மயிரை நோக்கி’ எனவும், ‘புரவுத்தொடுத்து’ என்பதற்கு ‘அன்று உம்மைப் புரந்த பரிசைப் பாடி’ எனவும் உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 2. விளரி, நெய்தற்குரித்தாகலின், இரங்கற்பண்ணாயிற்று.

15 - 9. "வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக், கோள்வாய் மதிய நெடியான்விடுத் தாங்கு மைந்தன், தோள்வாய் சிலையினொலியாற்றொறு மீட்டு மீள்வான், நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான்” (சீவக.454)

20 - 21. "படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து”, ‘’பாம்புரிபோன் முற்றத் துறந்து” (சீவக. 1546, 3039)

23. புறநா. 4: 6, 169: 10 - 11.

25 - 8.புறநா. 249: 12- 4; 264: 1 - 4.

மு.ஆபெயர்த்துத்தருதலென்னும் துறைக்கு மேற்கோள்காட்டி, ‘இதனுள் தன்னூரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப் பட்ட நிலையைப் பாணர் கையற்றுக்கூறியது’ என்பர்; தொல். புறத்திணை. சூ. 5, ந.

(260)


1. அகநானூறு, 317.