149
நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தன ரதுநீ
5புரவுக்கடன் பூண்ட வண்மை யானே.

திணை - அது; துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) நள்ளி! வாழ்வாயாக; நள்ளி! நள்ளென்னும் ஓசையையுடைய மாலைப்பொழுதின்கண்ணே மருதமென்கின்ற பண்ணை வாசித்துக் காலைப் பொழுதின்கண் கைவழியாகிய யாழின்கட் செவ்வழியென்னும் பண்ணை வாசித்து வரலாற்றுமுறைமையை எம்முடைய பாணர் சாதியிலுள்ளோர் மறந்தார்; அவ்வாறு மறந்தது, நீ கொடுத்து ஓம்புதலைக் கடனாக மேற்கொண்ட வண்மையான்-எ - று.

கையகத்து எப்பொழுதும் இருத்தலான், யாழைக் கைவழியென்றார், ஆகுபெயரான்.

'வரவவர் மறந்தனர்' என்பதூஉம் பாடம்.


(கு - ரை.) 2-3. மாலையிற் செவ்வழிப்பண்ணும் காலையில் மருதப்பண்ணும் வாசித்தல் வேண்டுமென்பது இசைநூன்மரபு; இதனை, "சாய வெண்கிளவிபோற் செவ்வழியா ழிசைநிற்ப ...... மாலையும் வந்தன்றினி" (கலித். 143 : 38 - 41), " திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி", "யாழோர் மருதம் பண்ண" (மதுரைக்.604, 658) என்று மாலைக்கும் காலைக்கும் உரியனவாக அப்பண்கள் கூறப்பெற்றிருத்தலால் அறிக.

2-5. புறநா.153 : 7 - 12.

(149)