150
கூதிர்ப் பருந்தி னிருஞ்சிற கன்ன
பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித்
தன்னு முள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென்
உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி
5மான்கணந் தொலைச்சிய குருதியங் கழற்கால்
வான்கதிர்த் திருமணி விளங்குஞ் சென்னிச்
செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன்
தொழுதன னெழுவேற் கைகவித் திரீஇ
இழுதி னன்ன வானிணக் கொழுங்குறை
10கானதர் மயங்கிய விளையர் வல்லே
தாம்வந் தெய்தா வளவை யொய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின்
இரும்பே ரொக்கலொடு தின்மெனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி
15நன்மர னளிய நறுந்தண் சாரற்
கன்மிசை யருவி தண்ணெனப் பருகி
விடுத்த றொடங்கினே னாக வல்லே
பெறுதற் கரிய வீறுசா னன்கலம்
பிறிதொன் றில்லைக் காட்டுநாட் டேமென
20மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம்
மடைசெறி முன்கைக் கடகமோ டீத்தனன்
எந்நா டோவென நாடுஞ் சொல்லான்
யாரீ ரோவெனப் பேருஞ் சொல்லான்
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே
25இரும்புபுனைந் தியற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கு மணிநெடுங் குன்றிற்
பளிங்குவகுத் தன்ன தீநீர்
நளிமலை நாட னள்ளியவ னெனவே.

(பி - ம்.) 12 ‘விரைவினன்’ 16 ‘கண்முகை’ 23 ‘பெயருஞ்’

திணை - அது; துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) கூதிர்க்காலத்துப் பருந்தினது கரிய சிறகையொத்த துணியாகிய சீரையையுடையேனாய்ப் பலாவடியைப் பொருந்தி, தன்னையும் நினையேனாய் வேற்றுநாட்டின்கட்சென்ற எனது ஓய்ந்த செலவானுளதாகிய வருத்தத்தினையும் மிடியையும் பார்த்து மானினது திரளைத் தொலைத்த, குருதிதோய்ந்த அழகிய வீரக்கழலினையுடைய காலினையும் வாலிய ஒளியையுடைய அழகிய நீலமணிவிளங்கும் உச்சியையுமுடைய செல்வத்தையுடைய தலைவனாகிய ஒரு வலிய வில்லினையுடைய வேட்டுவன், தன்னை அஞ்சலி பண்ணினேனாய் எழுந்திருப்பேனைக் கைகவித்து இருத்தி நெய்யிழுதுபோன்ற வெள்ளிய நிணத்தையுடைய கொழுவிய தடியைக் காட்டுவழியின்கண் வழிமயங்கிப்போகிய இளையர் தாம் விரையவந்து பொருந்துவதற்குமுன்னே கடிதாகத் தான்கடைந்த தீயான் விரைந்து கூட்டு நினது மிகப்பெரிய சுற்றத்துடனே தின்மினென்று தருதலான் அதனை யாங்கள் அமிழ்துபோலத் தின்று சுடுகின்ற பசி தீர்ந்ததாக, நல்ல மரச்செறிவையுடைய நறிய குளிர்ந்த மலைச்சாரற் கண் மலையுச்சியினின்றும் வீழ்ந்த அருவிநீரைக் குளிரக் குடித்து விடை கொள்ளத் தொடங்கினேனாக, விரைய வந்து பெறுதற்கரிய பெருமை யமைந்த நல்ல அணிகலங்கள் தருதற்கு வேறோன்றில்லை, யாம் காட்டு நாட்டின்கண்ணே மெனச்சொல்லித் தனது மார்பிற் பூணப்பட்ட விளங்கிய முத்துவடங்களையுடைய ஆரத்தைக் கொளுத்துச் செறிந்த முன்கைக்கு அணிந்த கடகத்துடனே தந்தனன்; நும்முடைய நாடு எந்நாடோவென்று கேட்ப நாடும் சொல்லிற்றிலன்; நீர் யாரெனக் கேட்பப் பெயரும் சொல்லிற்றிலன்; அவன்நாடும் பெயரும் பிறர்பிறர் வழியின் கண்ணே சொல்லக்கேட்டேன் யான்; இரும்பாற் புனைந்து செய்யப்படாத மிக்க புகழையுடைய தோட்டியாகிய அம்மலையைக் காக்கும், அழகிய பெரிய பக்கமலையினையும் பளிங்கை வகுத்தாற்போன்ற வெளிய நிறத்தையுடைய இனிய நீரையுமுடைய பெரிய மலைநாட்டையுடைய நள்ளி அவனென-எ - று.

நீங்கி : நீங்க.

பலவுமுதற்பொருந்தித் தொழுதனனெனவும், மலைகாக்கும் நள்ளியெனவும் இயையும்.

அவன் நள்ளியெனப் பிறர்பிறர் கூற வழிக்கேட்டிசினெனக் கூட்டுக.


(கு - ரை.) 2. சிதார் - கந்தை. இரவலர் பலவின்கீழ்த் தங்குதல் : புறநா. 128 : 1 - 2.

1-2. "நீர்ப்படு பருந்தி னிருஞ்சிற கன்ன, நிலந்தின் சிதாஅர்" (பதிற். 12 : 19 - 20)

6. "முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி, மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப" (முருகு. 84 - 5)

7. வல்வில் வேட்டுவன்: ஒரேகாலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி அம்பையெய்யும் விற்றொழிலையுடைய வீரனை வல்வில்லி யென்றல் மரபு; இதனை, புறநா. 152 : 1 - 6-ஆம் அடிகளாலும் அவற்றின் குறிப்புரையாலுமுணர்க.

8. "கைகவியாச் சென்று' (அகநா. 9 : 21)

9. "இழுதி னன்ன வானிணஞ் செருக்கி" (மலைபடு. 244)

12. ஞெலிதீ : புறநா. 247 : 2.

13. புறநா. 320 : 14, 378 : 23, 391 : 19, 393 : 10.

15. புறநா. 136 : 12.

19. காட்டுநாடு: "வன்புலக் காட்டுநாட் டதுவே" (நற். 59); பாண்டிநாட்டின் உள்நாடொன்றற்குக் காட்டுநாடென்று பெயர் வழங்கியதாகத் தெரிகின்றது; திருவால. 44 : 54.

21. "மடைசெறி கடகத் தோளான் (சூடாமணி.9 : 10)

24. இசின்: தன்மைக்கண் வந்தது ; புறநா. 22 : 36, 151 : 7; “கேட்டிசி னல்லனோ" (நற். 115)

25. "உயர்சிமைய வுழாஅ நாஞ்சிற் பொருந" (புறநா. 139 : 8) என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது.

27. புறநா.137 : 11; "பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி" (குறிஞ்சிப். 57, குறிப்புரை)

28. "நளிமலை நாட னள்ளியும்" (சிறுபாண். 107)

‘நளி' என்னும் உரிச்சொல் பெருமையையுணர்த்தியதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 24, சே.; சூ. 26, தெய்வச்.; சூ. 22, ந.; இ. வி. சூ. 284, உரை.

இப்பாட்டில் நள்ளியென்னும் வள்ளலுடைய கம்பீரமும் குறிப்பறிந்தீதல் முதலிய நற்குணங்களும் தெள்ளிதிற் புலப்பட நின்ற அழகு மிகப் பாராட்டற் பாலது.

(150)