292
வேந்தற் கேந்திய தீந்தண் ணறவம்
யாந்தனக் குறுமுறை வளாவ விலக்கி
வாய்வாள் பற்றி நின்றனெ னென்று
சினவ லோம்புமின் சிறுபுல் லாளர்
5ஈண்டே போல வேண்டுவ னாயின்
என்முறை வருக வென்னான் கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி
ஆண்டு நிற்கு மாண்டகை யன்னே.

(பி - ம்.) 1. ‘வேந்தர்க்கு’ 3‘வாளமற்றி நின்றனன்’.

திணை - வஞ்சி; துறை -பெருஞ்சோற்றுநிலை.

விரிச்சியூர் நன்னகனார்.


(கு - ரை.) 1. தீந்தண் நறவம் -இனிய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை ; “தண்கமழ்தேறல்” (புறநா. 56 : 18)

2. உறுமுறை வளாவ - உற்ற முறையாற்கலந்து கொடுக்க.

3. வாய்வாள் - தப்பாத வாள்.

1 - 3. “ஆளமர் வெள்ளம் பெருகினதுவிலக்கி, வாளொடு வைகுவேன் யானாக - நாளும், கழிமகிழ்வென்றிக் கழல்வெய்யோ யீயப், பிழிமகிழுண்பார் பிறர்” (பு. வெ. 32) என்பது இவ்வடிகளின்பொருளை ஒருவாறு தழுவியது.

4. சினவல் ஓம்புமின் - கோபித்தலைஒழிமின். சிறுபுல்லாளர் : விளி.

5. இவ்விடத்திற் செய்ததுபோலப்போர்செய்ய வேண்டுவனாயின்.

6. என் முறைவருக என்னான் - யான்போர்செய்ய வேண்டியமுறை வருகவென்று நினையானாகி;போரில் முறையுண்டென்பதை, “விருந்தாயினை யெறிநீயெனவிரைமார்பகங் கொடுத்தாற், கரும்பூணற வெறித்தாங்கவ னினதூழினியெனவே, எரிந்தாரயிலிடைபோழ்ந்தமை யுணரா தவனின்றான், சொரிந்தார்மலரரமங்கையர் தொழுதார்விசும் படைந்தான்” (சீவக.2265), “உணராநெடி துயிராவுரை யுதவாவெரி யுமிழா, இணையாருமிலவனேர்வர வெய்தாவலி செய்தாய், அணையாயினி யெனதூழென வடராவெளி படராப், பணையார்புய முடையானிடைசிலவிம் மொழி பகர்ந்தான்” (கம்ப. முதற்போர்.180) என்பவற்றால் உணர்க. கம்மென - விரைய; தேய வழக்கென்பர்;அகந. 11, உரை.

(292)