திணையும் துறையும் அவை. வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது. (இ - ள்.) பொய்யாகுக; பொய்யாகுக; பரந்த அடியினையுடைய யானையைப் பரிசிலர்க்குக் குறைவறக் கொடுக்கும் சீர்மைபொருந்திய வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உளதாகிய பொன்னாற் செய்யப்பட்ட ஆழிபோலப் பொய்யாகுக; பெரிய பாண்சுற்றத்திற்கு முதல்வன், பேரணிகலத்தினையுடைய, போரின்கட் கொல்லும் படையினையுடைய எவ்வியது மார்பின்கண் வேல் தைத்த சிறந்தபுண் பலவென வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை-எ - று. பெரும்பூண் மார்பென இயையும். திகிரியென்றது திகிரி தைத்ததென்று பிறந்த வார்த்தையை. பொன் : ஈண்டு இரும்பு. அடுக்கு விரைவின்கண் வந்தது. இயம்பிய குரல் பொய்யாகியரெனக்கூட்டுக. |
(கு - ரை.) 3. அகுதை : புறநா. 347 : 5; “இன்கடுங் கள்ளி னகுதை” (குறுந். 298; அகநா. 76); “நன்மா வீசும் வண்மகி ழகுதை”, “வயங்குபெருந் தானை யகுதை” (அகநா. 112, 208) 5. “பாண ரொக்கல்” (திருச்சிற். 400) 6. எவ்வி: புறநா. 24: 18, 202: 14; “எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்” (குறுந். 19); “வாய்வாள், எவ்வி வீழ்ந்த செருவிற் பாணர், கைதொழு மரபின் முறித்திடூஉப் பழிச்சிய”, “பயங்கெழு வைப்பிற் பல்வே லெவ்வி”, “நீடூர் கிழவோன், வாய்வாளெவ்வி யேவன் மேவார், நெடுமிடல் சாய்த்த பசும்பூட் பொருந்தில்... ...கள்ளுடைப் பெருஞ்சோற் றெல்லிமி ழன்ன, கவ்வையா கின்றாற் பெரிதே”, “நரைமூ தாளர் கைபிணி விடுத்து, நனைமுதிர் தேற னுளையர்க் கீயும், பொலம்பூ ணெவ்வி” (அகநா. 115, 126, 266, 366) 7. “விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள், வைக்குந்தன் னாளை யெடுத்து” (குறள், 776) (233)
|