297
பெருநீர் மேவற் றண்ணடை யெருமை
இருமருப் புறழு நெடுமா ணெற்றின்
பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக்
கன்றுடை மரையாத் துஞ்சுஞ் சீறூர்க்
5கோளிவண் வேண்டேம் புரவே நாரரி
நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநனி கெழீஇக் கம்பு ளீனும்
தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
10மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே.

(பி - ம்.) 2 ‘நெடுமா நெற்றின்’3 ‘கோலனைக் குன்றுடை......துஞ்சூர்க் கோளி’ 5 ‘நாரிநிறைமுதிராடிநறபின’7 ‘துறைநனிக்கொதந்ண்’ 8 ‘வைந்நுனை’

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு.
........................................................


(கு - ரை.) 1. மிக்க நீர் பொருந்துதலையுடையமருதநிலத்தூரிலுள்ள எருமையின்.

2. இருமை - கருமை. மருப்பு - கொம்பு.நெற்றின் - நெற்றினுடைய.

3. கோது - சக்கை. கோலணை - வளைந்தபடுக்கையில்.

1 - 3. பயற்றின் நெற்றினுக்குஎருமைக்கொம்பு உவமை.

4. மரையா - ஒருவகை விலங்கு; “பெற்றமுமெருமையு மரையுமாவே” (தொல். மரபு. சூ. 60) என்பதனால்,‘மரையா’ என்றார்; “மரையா மரல்கவர” (கலித்.6 : 1). துஞ்சுதல் - கிடத்தல்.

5. கோள் - கொள்ளுதலை. புரவு - இறையிலிநிலம்; புறநா. 290 : 9. நார் - பன்னாடை.

4 - 5. சிறிய ஊரைப் புரவாகக் கொள்ளுதலைஇப்பொழுது விரும்பேம்.

6. நறவின் வாழ்த்தி - கள்ளைவாழ்த்தி; புறநா. 316 : 1.

5 - 6. நாராலரிக்கப்பட்டதும் பூவாலாக்கியதும்விளைந்ததும் சாடியிலுள்ளதுமாகிய மது; “நார்பிழிக்கொண்ட வெங்கட் டேறல்” (புறநா. 170 : 1 - 2) என்பதையும்அதன் அடிக்குறிப்பையும், “நாரரி சிறுகலத்துகுப்பவும்”, “நனைக்கள்ளின் மனைக்கோசர், தீந்தேறனறவு மகிழ்ந்து” (புறநா. 232 : 3-4, 396 : 7 - 8), “தூம்பகம்பழுநிய தீம்பிழி” (பதிற். 81 : 21), “நெடுங்கணாடமைப் பழுநிய கடுந்திறற், பாப்புக்கடுப் பன்னதோப்பி”, “அம்பணை விளைந்த தேக்கட் டேறல்” (அகநா.348 : 6 - 7, 368 : 14), “நீடமை விளைந்த தேக்கட் டேறல்”(முருகு. 195), “வல்வாய்ச் சாடியின் வழைச்சறவிளைந்த, வெந்நீ ரரியல் விரலலை நறும்பிழி” (பெரும்பாண்.280 - 81), “தேம்பிழி தேறன் மாந்தி” (குறிஞ்சிப்.155), “வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்”, “திருந்தமைவிளைந்த தேக்கட் டேறல்” (மலைபடு. 171, 522) என்பனவற்றையும்பார்க்க.

7. கம்புள் - நீர்வாழ்பறவையுள்ஒருசாதி; “கதிர்த்ததண் பூணிக் கம்புடாழ் பீலிக்கனைகுரனாரை வண்டான, மெதிர்த்ததண் புனல்சூழிந்நதிக்கரை” (சீவக. 2108) என்பதனுரையில், ‘கம்புளென்பதுஇறந்த கால வழக்கு’ என்பர் நச்சினார்க்கினியர்.

8. தண்ணடை - மருதநிலத்தூர்;நாடுமாம்; புறநா. 287 : 10.

10. தன்வடிவு முழுதும் கருக்குமட்டைகளையுடையவலிய பனை, தம்மார்பில் வேல்கள் ஊடுருவி நிற்பத்தோன்றும்வீரர்க்கு உவமை. நிற்குமோர் - நிற்போர்.

9 - 10. ஒரு வீரன் உடம்பில் வேல்கள்மொய்த்து நின்றதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 16, ந.

மு. ‘பெருநீர்......நிற்குமோர்க்கே: மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழி தன்னொடுபுணர்த்தவாறு காண்க; சீறூர்புரவாகக் கொள்ளேன்;‘தண்ணடை கொள்வேனெனத் தன்னுறு தொழில் கூறினான்’(தொல். புறத்திணை. சூ. 5, ந.)

(297)