(கு - ரை.) 1. உறை - துளி. 2. மொக்குள் - சேற்றிலெழுந்த கொப்புளம். 3. "நெடுஞ்செவிக் குறுமுயல்" (புறநா.334 : 2, 339 ; 4 ; பெரும்பாண்.115) 1 - 3. "சிறியிலை நெல்லிக் காழ்கண் டன்ன, குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்" (அகநா.284 : 1 - 2) ; சீவக. 3042. 4. புதல் - புதரில். 5. தொள்ளை - துவாரம். மன்றம் - இரவலர் தங்குதற்குரியது. 6. உயவு - வருத்தம். 7. சென்மோ - செல்லும்; செல்லுமென்னும் ஏவற்பன்மை உயிர்மெய் கெட்டு ஓகாரம் பெற்றுவந்தது; "வருங்குலங் கேண்மோ" (மணி.13 ; 93) என்றாற்போல. 8. மனையோள் - தலைவி ; புறநா.331 ; 8, 334 : 5. சென்றதற் கொண்டு - வந்ததனால். 10. தீர்ந்தென - தீர்ந்தனவாக. குறித்துமாறெதிர்ப்பை - குறியெதிர்ப்பை ; ‘குறியெதிர்ப்பையாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது' என்பர் (குறள்,221, பரிமேல்.) ; "கூற்றுங் குறியெதிர்ப்பை கொள்ளுந் தகைமைத்தே....களிறு" (முத்தொள்ளாயிரம்) 9 - 10. "வரகுந் தினையு முள்ளவை யெல்லாம், இரவன் மாக்க ளுக்கீயத் தொலைந்தன" (புறநா.328 ; 3 - 4) 8 - 13. "இல்லது படைக்கவும் வல்ல னுள்ளது, தவச்சிறி தாயினு மிகப்பல ரென்னாள், நீணெடும் பந்த ரூண்முறை யூட்டும், இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில, வரிசையி னளிக்கவும் வல்லன்", "மனையோள், பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கைதூவாளே" (புறநா. 331 : 6 - 10, 334 ; 5 - 7) 14. வேட்டக்குடி - வேட்டுவர் வீடு. 15 - 6. உடும்புசெய் பாணி - உடும்புத் தோலாற் செய்த கைச்சரடு. 17. வம்பு - கச்சு. 19. கொண்டது பரிசில் - பகைவரோடு போர்செய்ததற்காக அரசரிடம் பெற்ற பொருளே பாணர் முதலியோர்க்கு அவன் கொடுக்கும் பரிசிலாகும். (333)
|