120
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப்
பூழி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்
5களைகால் கழாலிற் றோடொலிபு நந்தி
மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி யொருங்குபீள் விரிந்து
கீழு மேலு மெஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவர கரியத்
10தினைகொய்யக் கவ்வை கறுப்ப வவரைக்
கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக
நிலம்புதைப் பழுனிய மட்டின் றேறல்
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப்
15பெருந்தோ டாலம் பூசன் மேவர
வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தன் மடந்தையர் தந்தை
ஆடுகழை நரலுஞ் சேட்சிமைப் புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
20ஓடுகழற் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிற னாடே.

(பி - ம்.) 7 ‘போக்கி’ 13 ‘குடிறொறும்’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) வெம்மை முதிர்ந்த வேங்கைமரத்தையுடைய சிவந்த மேட்டுநிலத்துக் கார்காலத்து மழையான் மிகுந்த 1 பெரிய செவ்வியையுடைய ஈரத்தின்கட் புழுதி கலக்கப் பலசால்பட உழுது வித்தித் தாளியடிக்கப்பட்ட பல கிளையையுடைய செவ்வியின்கட் களையை அடியினின்றும் களைதலான் இலை தழைத்துப் பெருகி மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையையொப்ப ஓங்கிக் கரிய தண்டு நீண்டு எல்லாம் ஒருங்கு சூல்விரிந்து கதிரினது அடியும் தலையும் ஒழியாமல் மிகக் காய்த்துச் சீரிதாக விளைந்த புதிய வரகையறுக்கத் தினையை யரிய எள்ளிளங்காய் கறுப்ப அவரையினது கொழுவிய கொடியின்கண் வெள்ளைக்காய் அறுக்கும் செவ்வியாக நிலத்தின்கட் புதைக்கப்பட்டு முற்றிய மதுவாகிய தேறலைப் புல்லாலே வேயப்பட்ட சிறியமனையின்கட் குடியுள்ள இடந்தோறும் நுகரக்கொடுக்க நறியநெய்யிலே கடலை துள்ள அதனோடு சோற்றையட்டு ஊட்டுதற்குப் பெரியதோளை யுடைய மனையாள் கலம் பூசுதலைப் பொருந்த வருந்தவேண்டாத புதுவருவாயை யுடைத்து, முன்பு; இனி அது கெடும்போலும்! கரிய பலவாகிய கூந்தலையுடைய மடந்தையர்க்குத் தந்தையாகிய அசைந்த மூங்கில் இழைந்து ஒலிக்கும் உயர்ந்த உச்சியையுடைய, புலவர் பாடப்பட்டு அமையாத தன்மையையுடைய பகைவரது 2 புறக்கொடுத்தோடும் வீரக்கழலினது ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டுநின்ற போரை விரும்பிய சேயையொக்கும் பெரிய வென்றியையுடையவனது நாடு-எ - று.

வித்தி ஆடிய செவ்வியென இயையும்.

நந்தியென்பது முதலாய வினையெச்சங்கள் விளைந்தவென்னும் பெய ரெச்சவினையோடும், அரியவென்பது முதலாக மேவரவென்பதீறாக நின்ற வினையெச்சங்கள் யாணர்த்தென்னும் குறிப்புவினையோடும் முடிந்தன.

பகர்ந்தென்பது பகரவெனத் திரிக்கப்பட்டது.

விசைப்பச் சோறட்டு மேவரவென இயையும்.

செருவெஞ்சேஎய் பெருவிறலது சேட்சிமையையுடைய நாடு யாணர்த்து; அது நந்துங்கொல்லோவெனக் கூட்டுக.
பெருந்தோளென்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.

வெப்புளென வெம்மைக்கு அதுவும் ஒரு வாய்பாடாய் நின்றது; வெம்மையை உள்ளும் முதிர்ந்தவெனினும் அமையும்.


(கு - ரை.) 4. பல்லியாடுதல், தாளியடித்தல், ஊடடித்தலென்பன ஒரு பொருட் சொற்கள்; அது நெருங்கி முளைத்த பயிர்களை விலக்குதற்கும் வருத்தமின்றிக் களை பிடுங்குதற்குமாகக் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையின் இரண்டுபக்கத்தும் மேற்புறத்திலுள்ள வளையங்களிற் கட்டிய கயிறுகளைச் சேர்த்துப் பூட்டிய நுகத்தை வாய் கட்டப்பட்டுள்ள எருதுகளின் பிடரியில் வைத்துப் பூட்டி உழச்செய்தல்.

10. "சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்ப" (மதுரைக். 271)

(120)


1. "மாவீரம் போகுதென்று விதைகொண் டோட" (தனிப்.)

2."அழிகுநர் புறக்கொடை யயில்வா ளோச்சாக், கழிதறு கண்மை" ('பு. வெ. 55)