71
மடங்கலிற் சினைஇய மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
தென்னொடு பொருது மென்ப வவரை
ஆரம ரலறத் தாக்கித் தேரொ
5டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக
அறனிலை திரியா வன்பி னவையத்துத்
திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்
10வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனு மன்னெயி லாந்தையு முரைசால்
அந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறரும்
15கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ
மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே.

(பி - ம்.) 6 ‘பிரிகு’ 13 ‘னிழிச்சியும்’17 ‘குடிப்புறந்த’

திணை - காஞ்சி; துறை - வஞ்சினக்காஞ்சி.

1 ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் ( பி - ம்,பூதபாண்டியன்) பாட்டு.

(இ - ள்.) சிங்கம்போலச் சினந்துமீளாத மேற்கோள் பொருந்திய உள்ளத்தினையும் மிகைத்துச்செல்லும் படையையுமுடைய வேந்தர் தம்மில் ஒப்பக்கூடிவந்து என்னொடு பொருவேமென்று சொல்லுவர்; அவ்வேந்தரைப்பொறுத்தற்கரிய போரின்கண்ணே அலறப்பொருதுதேருடனே அவர் உடைந்தோடும் புறக்கொடையைக் கண்டிலேனாயின்,எனக்குச் சிறந்த பெரியவாய் முகத்தோடு பொருந்தினமையுண்ட கண்ணினையுடைய 2 இவளினும் நீங்குவேனாக;அறமானது நிலைகலங்காத அன்பினையுடைய அவைக்களத்துஅறத்தின் திறப்பாடில்லாத ஒருவனை வைத்து முறைகலங்கிக்கொடுங்கோல் செய்தேனாகுக; மிக்க புகழையுடையவையையாற் சூழப்பட்ட செல்வம் பொருந்திய ஊர்களிற்பொய்யாத புதுவருவாயையுடைய மையலென்னும் ஊர்க்குத்தலைவனாகியமாவனும், நிலைபெற்ற எயிலென்னும் ஊரையுடைய ஆந்தையும்,புகழமைந்த அந்துவஞ்சாத்தனும், ஆதனழிசியும், வெள்ளசினத்தையுடைய இயக்கனுமென இவருட்படப் பிறரும் எனதுகண்போலும் நண்பினையுடைய நட்டாரோடு கூடிய இனியசெருக்கையுடைய மகிழ்நகையைத் தப்பியவனாகிப்பலவுயிரையும் பாதுகாக்கும் அரசர்குலத்திற் சிறந்தபாண்டிநாடு காக்கும் காவலின் நீங்கிப் பிறருடையவன்புலங்களைக் காக்கும் காவற்கண்ணே இக்குடிப்பிறப்பின்நீங்கி யான் பிறப்பேனாகுக-எ - று.

‘மெலிகோல் செய்தேனாகுக’ என்பதனுள்ஆகுகவென்பது எங்கும் தந்துரைக்கப்பட்டது.

3 ஒன்றோவென்பது எண்ணின்கண்வருவதோரிடைச்சொல்;அதனை முன்னும் பின்னுங் கூட்டுக.


(கு - ரை.) 1. மடங்கல் - சிங்கம்;கூற்றுமாம்; “மடங்கல்போற்சினைஇ” (கலித்.2)

2. புறநா. 68 : 11 - 3.

3-5. பொருதும் : தன்மைப்பன்மைவினை; புறநா. 72 : 7 - 9.

6. “மெல்லிய லரிவைநின் னல்லகம்புலம்ப, நிற்றுறந் தமைகுவெனாயி னெற்றுறந், திரவலர்வாரா வைகல், பலவா குகயான் செலவுறுதகவே” (குறுந்.137); “கருந்தடங்கண் மங்கையரை நோக்குற்ற பெய்யேனேல்வந்திரந்தார் துன்பம், களையாது மாற்றுகவென் கை”(வீர. பொருள். 17, மேற்.)

பேரமருண்கண் : நற். 29 : 9, 44 : 2;குறள், 1083.

4-6. இவளென்றது தன் தேவியை; அவள்கற்பிற் சிறந்தவள். இந்நூல் 246 -ஆம் செய்யுளின்கருத்தில், ‘பூதப்பாண்டியன் தேவிபெருங்கோப்பெண்டுதீப்பாய்வாள் சொல்லியது’ என்று இருத்தலின்அவள் கல்வியிற் சிறப்புற்றுச் செய்யுள் செய்யும்ஆற்றலையுடையளாயிருந்தாளென்பதும் இவன் அவளிடத்தேமிக்க அன்புடையவனாயிருந்தது போலவே அவளும் இவனிடத்துப்பேரன்புடையவளாயிருந்து இல்லறத்தை இனிது நடத்திஇவன் இறந்தவுடன் தீப்பாய்ந்து தானும் இறந்தாளென்பதும்வெளியாகின்றன; தன்னுடைய குற்றமற்ற மனைவியை மனத்தால்அங்கீகரியாது விட்டவன் மிக்கபாவியாய்ப்பிணிவாய்ப்பட்டு வருந்துவானென்று நீதிநூல்கள்கூறுதலின் ‘இவளினும் பிரிக’ என்றான்; “குழற்சிகைக்கோதை சூட்டிக் கொண்டவ னிருப்ப மற்றோர், நிழற்றிகழ்வேலி னானை நேடிய நெடுங்க ணாளும், பிழைப்பிலாட்புறந்தந்தானுங் குரவரைப்பேணல் செய்யா,திழுக்கினாரிவர்கள் கண்டா யிடும்பைநோய்க் கிரைகளாவார்” (சீவக. 252) என்னுஞ் செய்யுள் இதனைநன்கு புலப்படுத்தும்.

“கடிசொலில்லைக் காலத்துப்படினே’‘என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள்; தொல். எச்ச.சூ. 50, தெய்வச்.

7. அறனிலைதிரியா அவையம் -தருமசபை; “சிறந்த, அவைநல மன்பின் விளங்கும்”(நான்மணிக். 26)

8-9. கலித். 10 : 5 - 7.

7-9. புறநா. 72 : 10 - 12; “நடுவிகந்தொரீஇ நயனில்லான் வினைவாங்கக், கொடிதோர்த்தமன்னவன்” (கலித். 8); “உடைப்பெருஞ் செல்வத்துயர்ந்த பெருமை, அடக்கமி லுள்ளத்த னாகி-நடக்கையின்,ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்,கொள்ளி கொடுத்துவிடல்”, “முறைதெரிந்து செல்வர்க்குநல்கூர்ந் தவர்க்கும், இறைதிரியா னேரொக்கல் வேண்டும்-முறைதிரிந்து,நேரொழுகா னாயினதுவா மொருபக்கம், நீரொழுகப் பாலொழுகுமாறு” (பழ. 200, 206)

15. “கரவா துவந்தீயுங் கண்ணன்னார்கண்ணும் இரவாமை கோடியுறும்” (குறள், 1061); பெருங்.2. 10 : 101, 11 : 166, 17 : 161, 4. 3 : 61.

10-16. “கலந்தாரைக் கைவிடுதல்கானக நாட, விலங்கிற்கும் விள்ள லரிது” (நாலடி.76)

17-8. “மன்பதை காக்குந் தென்புலங்காவல், என்முதற் பிழைத்தது” (சிலப். 20 : 76 -7) என்பவையும் இவ்வடிகள்போலவே பாண்டியருடைய குலப்பெருமையைப்புலப்படுத்துகின்றன.

19. பிறக்கு : தன்மையொருமை வினைமுற்று.தலைவன் சபதம் செய்ததைக் கூறினமையால் இது வஞ்சினக்காஞ்சியாயிற்று.

மு. காஞ்சித்திணைத்துறைகளுள்“இன்னதுபிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ்சிறப்பின் வஞ்சினத்தானும்” என்பதன்விசேடவுரையில், ‘நகுதக்கனரே (72), மடங்கலிற் சினைஇய’(71) என்னும் புறப்பாட்டுக்கள் உயிரும் செல்வமும்போல்வன நிலையும் பொருளென நிலையாது வஞ்சினஞ்செய்தன என்பர்; தொல். புறத்திணை. சூ. 24, ந.

(71)


1 சோழநாட்டிலுள்ள ஒலியமங்கலமென்னும்ஊர் இதுவென்று தெரிகிறது; திருமெய்யத்துக்குப் பக்கத்தில்இப்பெயரோடு ஊர் உள்ளது.

2 தன் தேவியை இவளென்றது தன்கருத்துக்கள் அணிமையாக இருத்தலின்; புறநா. 72 :2, உரையைப் பார்க்க.

3 புறநா. 32 : 2, உரை.