133
மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற்
கேட்பி னல்லது காண்பறி யலையே
காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக்
5கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி

(பி - ம்.) 3 ‘காண்டல் சால வேண்டினையாயின்’ 6 ‘வண்கை’

திணை - அது; துறை - விறலியாற்றுப்படை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) மெல்லிய இயல்பினையுடையவிறலி! நீ நல்லபுகழைச் செவியாற் கேட்பினல்லதுஅவன்வடிவைக் காண்டலறியாய்; காண்டலைவிரும்பினாயாயின், மாட்சிமைப்பட்ட நினது மணம்வளரும்கூந்தலிலே வரையிடத்துக் காற்று வந்தசைப்பப் பீலியையுடையமயில்போலக் காட்சி உண்டாக நடந்து மழைபோன்றவண்மையையுடைய தேரினையுடைய வேள் ஆயைக் காணச்செல்வாயாக-எ - று.

'விரைவளர் கூந்தல் வரைவளி யுளர'என்றது, 'கொண்டைமேற் காற்றடிக்க' என்பதொரு வழக்குப்பற்றிநின்றது,

என்றதனாற் பயன் : பிறிதொன்றால்இடையூறில்லையென்பதாம்.

ஆய் மாரியன்ன வண்மையனாதலின்,விறலியை அம்மாரியைக் கண்ட மயில்போலக்களித்துச் செல்லென்றவாறாம்.
யாழநின்னென்று பாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 4. "உரைத்த சந்தினூர லிருங்கதுப், பைதுவர லசைவளி யாற்றக் கைபெயரா,ஒலியல் வார்மயி ருளரினள் கொடிச்சி" (அகநா.102 : 3 - 5)

5. "மயில்கண் டன்ன மடநடை மகளிர்"(முருகு. 205); "நன்மா மயிலின் மென்மெல வியலி"(மதுரைக். 608)

4 - 5. "அணிகிளர் கலாவமைதுவிரித் தியலும், மணிபுரையெருத்தின் மஞ்ஞைபோலநின், வீபெய் கூந்தல் வீசுவளி யுளர, ஏகுதி மடந்தை"(நற். 264 : 3 - 6)

6. புறநா. 54 : 6 - 7, குறிப்புரை; 55: 15, குறிப்புரை; "மாரிமழை வள்ளல்" (சீவக.500) ; " மழையொன்று வண்டடக்கை வள்ளியோற்பாடி", "எழிலி வான மெள்ளினன் றரூஉம், கவிகைவண்கைக் கடுமான் றோன்றல்", "மழைவிழை தடக்கைவாய்வா ளெவ்வி", "கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி"(தொல். உவம. சூ, 11, 14, பேர். மேற்.)
'அன்ன' என்பது பயனுவமத்தின்கண் வந்ததற்கு மேற்கோள்;தொல். உவம. சூ. 13, இளம்; இ. வி. 642, உரை.

6 - 7. 'மாரியன்ன வண்மைத், தேர்வேளாயைக் காணிய சென்மே; என்பது பயனுவமம்; என்னை?மாரியான் விளைக்கப்படும் பொருளும் வண்மையாற்பெறும் பொருளும் ஒக்குமென்றவாறு' (தொல். உவம.சூ. 1, பேர்,; இ. வி. சூ. 639, உரை); உவமையினதுஉயர்ச்சியாற் பொருட்கு உயர்ச்சியாயிற்று என்பதற்கும்,தொன்றுதொட்டு வரும் உவமைக்கும் மேற்கோள் (மாறன்.92, 95, உரை); 'ஈன்றவென்' என்னும் கல்லாடச் செய்யுளில்,‘மறிதிரை......மேனியை' (அடி. 12-8) என்பதன் விசேடவுரையில் இவ்வடியைப் பயனுவமத்தின் வகையென்று மேற்கோள்காட்டுவர் மயிலேறும் பெருமாள்பிள்ளை.

மு. பாடாண்டிணைத்துறைகளுள் விறலியாற்றுப்படைக்குமேற்கோள்; தொல். புறத்திணை சூ. 30, இளம்; சூ. 36, ந.