135
கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் லொதுக்கின்
வளைக்கை விறலியென் பின்ன ளாகப்
5பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்க லுள்ளமொ டொருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி
10வந்தனெ னெந்தை யானே யென்றும்
மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு
கறையடி யானை யிரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவே ளாஅய்
களிறு மன்றே மாவு மன்றே
15ஒளிறுபடைப் புரவிய தேரு மன்றே
பாணர் பாடுநர் பரிசில ராங்கவர்
தமதெனத் தொடுக்குவ ராயி னெமதெனப்
பற்ற றேற்றாப் பயங்கெழு தாயமொ
டன்ன வாகநின் னூழி நின்னைக்
20காண்டல் வேண்டிய வளவை வேண்டார்
உறுமுரண் கடந்த வாற்றற்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே.

திணை - அது; துறை - பரிசிற்றுறை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) புலி இயங்கும் சிகரம்உயர்ந்த நெடிய மலையின்கண் ஏறுதற்கரியபிளப்பின்கட் சிறியவழியை யேறுதலான் வருத்தமுற்றுஉடல் வளைவைப் பொருந்திய பயில அடியிட்டு நடக்கின்றமெல்லிய நடையினையுடைய வளையையணிந்த கையையுடையவிறலி என்பின்னே வரப்பொன்னைக் கம்பியாகச்செய்தாற்போன்ற முறுக்கடங்கிய நரம்பினை யுடையவரிப்பொருண்மையோடு பயிலும் பாட்டு 1 நிலந்தோறும்மாறிமாறி யொலிப்பப் படுமலைப்பாலை நிலைபெற்றபயன்பொருந்திய சிறிய யாழைத் தளர்ந்த நெஞ்சத்துடனேஒருமருங்கிலே அணைத்துக்கொண்டு புகழ்தற்கமைந்ததலைமையையுடைய நினது நல்லபுகழை நினைந்து வந்தேன்,என்னுடைய இறைவா! யான் ; எந்நாளும் மன்றத்தின்கண்வந்த பரிசிலரைக் காணிற் கன்றுடனே 2கறைபொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச்சாய்த்துக்கொடுக்கும் மலையையுடைய நாடனே!மாவேளாகிய ஆயே! யாம் வேண்டியது யானையுமன்று;குதிரையுமன்று; விளங்கிய பொற்படையையுடைய குதிரையிற்பூட்டப்பட்ட தேருமன்று; பாணரும் புலவரும் கூத்தர்முதலாயினாருமாகிய அவர்கள் தம்முடைய பொருளெனவளைத்துக்கொள்வாராயின் அதனை எம்முடையதென்றுஅவர்பால் நின்றும் மீண்டு கைக்கொள்ளுதலைத் தெளியாதபயன்பொருந்திய உரிமையோடு கூடி மற்றும் அத்தன்மையவாக,நின்னுடைய வாழ்நாட்கள்; யான் வந்தது நின்னைக்காண்டல்வேண்டிய மாத்திரையே. பகைவரது மிக்க மாறுபாட்டைவென்ற வலியையுடைய, யாவரும் ஒப்பப் புகழும்நாட்டையுடையாய்-எ - று.

நாடுகிழவோய்! யான் வந்தது களிறுமுதலாயினவேண்டியன்று; நின்னைக் காண்டல்வேண்டிய அளவே;நின் ஊழி அன்னவாகவெனக் கூட்டுக.

அல்லதூஉம், யானைமுதலாயினவன்றிப்பிறவற்றையும் பாணர் முதலாயினார் தமதெனத் தொடுக்குவராயினெனஇயைத்துரைப்பினும் அமையும்.

கொடுவரி : பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை;ஆகுபெயருமாம்.
இனி, 'ததைமெல்லொதுக்கின்' எனவும், 'வடிநவில்பனுவல்'எனவும், 'ஒளிறுநடைப்புரவிய' எனவும் பாடமோதுவாரும்உளர்.

வடிநவில் பனுவல் புலம்பெயர்த் திசைப்பவென்றுகொண்டுவடித்தல் பயின்ற பாட்டை இசைதோறும் பெயர்த்துவாசிக்கவென்றுரைப்பாரும் உளர்.

பொதுமீக்கூற்றம், பொதியிலுமாம்.


(கு - ரை.) 1 - 4. புறநா. 139 : 3 -4; "உயர்ந்தோங்கு பெருமலை யூறின்றேறலின், மதந்தபுஞமலி நாவி னன்ன, துளங்கியன் மெலிந்த கல்பொருசீறடிக், கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ,விலங்கு மலைத் தமர்ந்த சேயரிநாட்டத், திலங்குவளைவிறலியர்" (மலைபடு. 41-6)

3. தடவென்பது வளைவுப் பொருளையுணர்த்துவதோர்உரிச்
சொல்; தொல். உரி. சூ. 23.

6. "வரியெனப் படுவது வகுக்குங்காலைப், பிறந்த நிலனும் சிறந்த தொழிலும், அறியக்கூறி யாற்றுழி வழங்கல்", " கண்கூடு காண்வரியுள்வரி புறவரி, கிளர்வரி யைந்தோ டொன்றவுரைப்பிற், காட்சி தேர்ச்சி யெடுத்துக் கோளென,மாட்சியின் வரூஉ மெண்வகை நெறித்தே" (சிலப்.8 : 77, 108 உரை, மேற்.)

7. படுமலைப்பாலை - பாலைப்பண் பன்னிரண்டனுள்ஒன்று ; அது கைக்கிளை குரலாகத் தோன்றுவது.

8. ஒல்கல் - தளர்தல்; ஒற்காவுள்ளத் தொழியா னாகி" (மணி. 15 : 18)

11. "வயிரிய மாக்கள்,,,மன்ற நண்ணி"(பதிற். 29); "மன்றில் வதியுநர் சேட்புலப்பரிசிலர்" (மலைபடு. 492)

12. புறநா. 129 : 6, குறிப்புரை ; பொருந.125 - 7.

11 - 2. "பொருநர்க், குருகெழுபெருஞ்சிறப்பின், இருபெயர்ப் பேராயமொ, டிலங்குமருப்பிற்களிறுகொடுத்தும்" (மதுரைக். 99 - 102)

22. "மீக்கூற்றென்பது புகழ்; அதுமேலாய சொல்லாற் பிறந்த புகழென்னும் மேம்பாடெனப்பொருள்தந்து நிற்றலிற்பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை" (நன். வி. சூ. 178)

(135)


1 ஐந்திணைக்கும் உரியனவாக ஐந்துயாழும் பண்களும் உண்மையின் இங்ஙனம் கூறினார்.

2 புறநா. 39 : 1 - 2, உரை.