151
பண்டும் பண்டும் பாடுந ருவப்ப
விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅற்
கிழவன் சேட்புலம் படரி னிழையணிந்து
புன்றலை மடப்பிடி பரிசி லாகப்
5பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோ னாகலி னன்றும்
முயங்க லான்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருக னன்றியு நீயும்
முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப்
10பாடுநர்க் கடைத்த கதவி னாடுமழை
அணங்குசா லடுக்கம் பொழியுநும்
மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே.

திணையும் துறையும் அவை.

இளங்கண்டீரக்கோவும் 1 இளவிச்சிக்கோ (பி - ம். இளவச்சிரக் கோ)வும் ஒருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச்சாத்தனார் இளங்கண்டீரக் கோவைப் புல்லி இளவிச்சிக்கோவைப் புல்லாராக, என்னை என்செயப் புல்லீராயினீரென அவர் பாடியது.

(இ - ள்.) முன்பேயும் முன்பேயும் பாடுவார் விரும்ப விசும்பைப் பொருந்திய உச்சியையுடைய சிறந்த மலைப்பக்கத்துத் தம் கணவன் நெடுந்தூரத்தே செல்லின் ஆபரணத்தை யணிந்து புல்லிய தலையையுடைய

மெல்லிய பிடியைப் பரிசிலாகக்கொண்டு அவர்பெண்டிரும் தம் தரத்திலே பரிசில் கொடுக்கும் வள்ளிய புகழையுடைய கண்டீரக்கோனாதலாலே பெரிதும் தழுவிக்கொள்ளுதலை அமைந்தேன் யான்; பொன்னாற் செய்யப்பட்ட தேரினையுடைய நன்னன் மரபினுள்ளானாதலன்றியும் நீயும் தழுவுதற்குப் பொருந்தினாயாயினும் விளங்கும் மொழியையுடைய பாடுவார்க்கு அடைத்த கதவுகாரணமாக, இயங்குமுகில் தெய்வம் அமைந்த அரை மலைக்கண்ணே சொரியும் நுமது மணநாறும் உயர்ந்த மலையைப் பாடுதலை நீக்கினார், எம்முள்ளார்; ஆதலான், முயங்கிற்றிலேன்-எ - று.

பெண்டிரும் தம்பதங்கொடுக்குமெனவே ஆடவரும் தம் தரத்தே களிறுகொடுத்தல் போந்தது.

‘கிழவன்' என்பது, ‘ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப' (தமிழ்நெறி. பொருளியல், சூ. 24. மேற்.) என்பது போலப் பன்மை சுட்டிநின்றது.

‘நன்னன்மருகனன்றியும்' என்றதற்கு, "பெண்கொலை புரிந்த நன்னன் போல, வரையா நிரயத்துச் செலியரோ வன்னை" (குறுந். 292) என்றமையின் அதுவும் வரைதற்கு ஒரு காரணமாக உரைப்பாரும் உளர்.
பதமென்றது பரிசிலை.

மன் : ஒழியிசைக்கண் வந்தது.


(கு - ரை.) 2. "மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்" (நற். 32); "மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்" (பட்டினப்.138)

3. இழை - ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலங்கள்; தொல். களவு. சூ. 4, ந.

4. "இரும்பிடிப் பரிசிலர் போல" (அகநா. 311); "பிடிக்கணஞ்சிதறும் பெயன்மழைத் தடக்கை; (சிறுபாண். 124)

5. ..."உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன், றீவார் மேனிற்கும் புகழ்" (குறள், 232)

6. கண்டீரம் - ஓரூரென்றும் உரைப்பர். இளங்கண்டீரக்கோ - கண்டீரத்தின் இளவரசன்; இவன் நள்ளியென்னும் வள்ளலுடைய தம்பியாகக் கருதப்படுவான்.

7. இசின்: புறநா.150 : 24, குறிப்புரை.

8. நன்னன்-ஒரு சிற்றரசன்; மலைபடுகடாம்என்னும் பாட்டுடைத் தலைவனுக்கும் அவன் தந்தைக்கும் நன்னன் என்னும் பெயர் அமைந்துள்ளது.

11. புறநா.158 : 10 - 11; "அணங்குடைச் சாரல்...இறும்பில்" (பெரும்பாண். 494 - 5)

11-12. புறநா. 375 : 20 - 21.

5-12. கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல்; தொல்.புறத்திணை சூ. 35.

(151)


1விச்சி - ஒருமலை; இதன் அரசன் விச்சிக்கோ (புறநா. 200 : 8); “வில்கெழு தானை விச்சியர் பெருமகன்” (குறுந், 328); “இருபெருவேந்தரும் விச்சியும் வீழ” (பதிற். 9-ஆம் பத்தின் பதிகம்)’ “விச்சி மலைச்சாரற் பட்டைகொண்டு பகடாடி” (தே. ஐயாறு.)