47
வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய வென்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
5ஓம்பா துண்டு கூம்பாது வீசி
வரிகைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட
நண்ணார் நாண வண்ணாந் தேகி
ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ்
10மண்ணாள் செல்வ மெய்திய
நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே.

(பி - ம்.) 7 ‘தீங்கறிந்தன்றோ’ 9 ‘தோங்கிய’ 10 ‘மெய்தின’

திணையும் துறையும் அவை.

சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர்புகுந்த இளந்தத்த னென்னும் புலவனை (பி - ம். இளந்தத்தனை)க் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்றுவந்தா னென்று கொல்லப்புக்குழி (பி - ம். கொலைபுகுவழி)க் கோவூர்கிழார் பாடி உய்யக்கொண்டது.

(இ - ள்.) வண்மையையுடையோரை நினைத்துப் பழுமரந்தேரும் பறவைபோலப் போகி நெடியவென்றுகருதாது அரியவழி பலவற்றையுங் கழிந்து 1திருந்தாத நாவால் தாம்வல்லபடி பாடி ஆண்டுப்பெற்ற பரிசிலான் மகிழ்ந்து சுற்றத்தையூட்டித் தாமும் பொருளைப்பாதுகாவாது உண்டு உள்ளம் மலர்ந்து வழங்கித் தம்மைப் புரப்போராற்பெறும் சிறப்பு ஏதுவாக வருந்தும் இப்பரிசிலான் வாழும் வாழ்க்கை, பிறர்க்குச் செய்யும் கொடுமை யறிந்ததோவெனின், இல்லை; கூறுபடக் கல்விமுகத்தால் தம்மொடு மலைந்தோர் நாணத் தமது கல்வியான் வென்று தலையெடுத்து நடந்து அவ்விடத்து இனிதாக ஒழுகினல்லது, உயர்ந்த புகழுடைய நிலமாளும் திருப்பொருந்திய நும்மை யொக்கும் தலைமையுமுடைத்து-எ - று.

ஓங்கியவென்பதூஉம், செல்வமுமுடைத்தென்பதூஉம் பாடம்.

சுரம்பல கடந்து புள்ளிற் போகியென மாறிக் கூட்டுக.

பரிசில்வாழ்க்கை நும்மோரன்ன செம்மலுமுடைத்து; ஆதலால், நண்ணார் நாண இனிதொழுகினல்லது (பி-ம். இனிதொழுகின் நல்லது), பிறர்க்குத் தீதறிந்தன்றோ? இன்றெனக் கூட்டுக.

இக்கோவூர்கிழார் தாமும் பரிசில்வாழ்நருள் ஒருவராதலான், ‘வடியா நாவின் வல்லாங்குப் பாடி’ எனப் பணிந்துகூறினாரென்க.


(கு - ரை.) 1.புறநா. 370 : 11; “பழுமர முள்ளிய பறவையின்....புக்கு” (பொருந. 64 - 7); “பழுமரந்தேரும் பறவை போல........பாண” (பெரும்பாண். 20 - 22); “பழந்தேர் வாழ்க்கைப் பறவை போல.........துவன்றி” (மதுரைக். 576 - 80); “கனிபொழி கானங் கிளையொடுணீஇய, துனைபறை நிவக்கும் புள்ளின மான..........நன்னற் படர்ந்த கொள்கையொடு” (மலைபடு. 54 - 64)

‘படர்’ என்பது உள்ளுதலாகிய குறிப்புணர்த்துதற்கு இவ்வடிமேற்கோள்;தொல். உரி. சூ. 44, சே.; தெய்வச்; இ. வி.சூ. 232, உரை.

3. “வல்லாங்குச் செய்து” (மணி. 23 : 44)

6. மு. புறநா. 206 : 4.

6 - 7. வாழ்வாரது தொழில் வாழ்க்கைமேல் ஏற்றப்பட்டது.

குவ்வுருபு பொருட்டுப்பொருண்மைக்கண் வந்ததற்கு ‘வரிசைக்கு வருந்தும்’ என்பது மேற்கோள்; சிலப். பதி. 5, அடியார்.; நன். சூ. 297, மயிலை.

மு. துணைவஞ்சியென்னும் துறைக்குமேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 7, இளம்.); இப்பாட்டு மேற்செலவின்கண் அடங்காமையின் துணைவஞ்சியன்றென்றும், பாடாண்டிணையென்றும் கூறுவர் (தொல். புறத்திணை. சூ. 8, ந.); “வள்ளியோர்ப் படர்ந்து.......செம்மலுமுடைத்தே: இது சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர்புக்க இளந்தத்தன்என்னும் புலவனைக் காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளிஒற்றவந்தா னென்று கொல்லப்புக்குழி அவ்வரசற்கு வருகின்ற துகளினைக் கோவூர் கிழார்புலப்படாமற் செய்யுள்செய்து, தமது சொல்லை அரசன் கேட்டு அஞ்சினானென்னும் பொருளை நிறுத்துதலிற் பழிகரப்புச்செவியுறையங்கதமாயிற்று; இவ்வாறே புறத்தினுட்செவியுறைச்செய்யுட்கள் பலவும் வருவனவுள; அவ்வேறுபாடுணர்ந்து கொள்க” (தொல். செய். சூ. 128, ந.)

(47)


1. வடியாநாவென்பதற்கு இங்கே எழுதியுள்ள உரையோடு, “வடிநா” (கலித். 141 : 18) என்பதற்கு, ‘வழுவின சொற்கள் சொல்லாதபடி தெள்ளிய நா’ என நச்சினார்க்கினியர்எழுதிய உரை கருதற்குரியது.