திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. கண்டீரக்கோப் பெருநள்ளியை (பி - ம். கண்டிற்கோப்பெருநற் கிள்ளியை) வன்பரணர் பாடியது. (இ - ள்.) உச்சிக்கணின்றும் ஆலித்து (ஒலித்து) இழிதரும் அருவி யினையுடைய உயர்ந்த மலையையுடைய நள்ளி! நினது தளர்ச்சியில்லாத வலிய முயற்சியானாய நச்சப்படும் செல்வத்தை வாழ்த்தி நாடோறும் நல்ல அணிகலத்தைக் களிற்றோடே கொண்டுவந்து நெற்கூடு விளங்கும் அகலிய நகரின்கண் இருந்து சூழ்ந்திருந்த பரிசிலர்க்கு அளித்து (ஈந்து) விடுத்தலால், 1பிறர்க்கீயும் பெருமையில்லாத அரசரைப்புகழும் புகழ்ச்சியை விரும்பி அவ்வரசர் செய்யாதனவற்றைச் சொல்லி அவர் குணங்களைக் கூறுதலை அறியாததாயிற்று, எம்முடைய சிறிய செவ்விய நா-எ - று. 2பொய்கூறாமையிற் ‘செந்நா' என்றார்; 3தற்புகழ்ந்தாராகாமற் 'சிறுசெந்நா' என்றார். அருவியவென்பது விகாரம். நள்ளி! நீ பரிசின்முற்றளித்தலான், எம் சிறுசெந்நா நின்நசைவளனேத்தி மன்னரைப் புகழ்ச்சிவேண்டிக் கிளத்தல் எய்யாதாகின்றெனக் கூட்டுக. நின் நசைவளன் ஏத்திக் கொணர்ந்து முற்றளித்தலாலெனப் பரிசிலர் மேலேற்றி உரைப்பினும் அமையும். |