21
புலவரை யிறந்த புகழ்சா றோன்றல்
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி
வான்றோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற்
5கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்பு ணீரினு மீட்டற் கரிதென
வேங்கை மார்ப னிரங்க வைகலும்
10ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுந ரிசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே.

திணையும் துறையும் அவை.

1கானப்பேரெயில் (பி - ம். தானப்பேரெயில்) கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது.

(இ - ள்.) நின்னைப் பாடுவாரது அறிவின் எல்லையைக் கடந்த புகழமைந்த தலைவ! நிலவெல்லையைக் கடந்த பாதலத்தேயுற ஆழ்ந்த இடத்தையுடைய அகழியினையும் உயர்ச்சியான் வானைப்பொருந்துவது போன்ற மதிலையும் அவ்வானிடத்து மீனைப்பூத்தாற்போன்ற வடிவையுடைய சூட்டினையும் வெயிற்கதிர் நுழையாத மரஞ்செறிந்த காவற்காட்டினையும் உடைத்தாய் அணைதற்கரிய சிற்றரண்களாற் சூழப்பட்ட கானப்பேரென்னும் அரண், வலிய கையையுடைய கொல்லனாற் செந்தீயின் கண்ணே மாட்டப்பட்ட இரும்புண்ட நீரினும் மீட்டற்கரிதெனக்கருதி வேங்கை மார்பன் வருந்த நாடோறும் வென்றிகொளத் தழைத்த தும்பையையுடைய, புலவர் பாடப்படுந் துறைகளை முடித்த வெற்றியினையுடைய வேந்தே! நின்னை மதியாத பகைவர் தம்முடைய புகழுடனே பொன்ற வெற்றிப் புகழுடனே விளங்கிப் பொலிவதாக நின் வேல்- எ - று.

கானப்பேரெயில் மீட்டற்கரிதென வேங்கைமார்பன் இரங்கப் பாடுதுறை முற்றிய கொற்றவேந்தே! நின்வேல் பூக்கவெனக் கூட்டி வினை முடிவுசெய்க.

குழைத்தவென்பது குழைந்தவென மெலிந்து நின்றது.


(கு - ரை.) 1. புலவரை - அறிவின் எல்லை; “புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்” (சிலப்.28 : 174); “புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி” (மணி. 5 : 109)

2. “மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்” (மதுரைக்.351)

4. ஞாயில் - சூட்டு; என்பது மதிலின்மீதுள்ள ஒரு சிற்றுறுப்பு; ஏப்புழைக்கு நடுவாய் எய்துமறையும் சூட்டென்பர்; சீவக. 105, ந.

5. “வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்” (பெரும்பாண்.374; மணி.4 : 5); “வெயிலொளி யறியாத விரிமலர்த் தண்காவில்” (கலித்.30 : 7)

2-6. மதுரைக்.64 - 7; பதிற்.20 : 17 - 9.

7. புறநா.36 : 6 “கருங்கைக் கொல்லர்” (சிலப்.5 : 29) என்பதையும் அதனுரைகளையும் பார்க்க.

7-8. “கனலிரும் புண்ட நீரின் விடாது” (பெருங்.3. 25 : 71); “இரும்புண்டநீர் மீள்கினு மென்னுழையிற், கரும்புண்டசொன் மீள்கிலள் காணுதியால்” (கம்ப.சடாயு. 104)

12-3. “பிறந்தி றந்துபோய்ப் பெறுவது மிழப்பதும் புகழே” (கம்ப.மந்தரை. 66)(21)


1 இப்பாட்டின் 5-6-ஆம் அடிகளில் கானப்பேரென்னும் பெயர்க்காரணம் வந்திருத்தல் காண்க.