229
ஆடிய லழற்குட்டத்
தாரிரு ளரையிரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
5பங்குனியுய ரழுவத்துத்
தலைநாண்மீ னிலைதிரிய
நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்
தொன்னாண்மீன் றுறைபடியப்
பாசிச் செல்லா தூசி முன்னா
10தளக்கர்த்திணை விளக்காகக்
கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்
பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்
15நோயில னாயி னன்றுமற் றில்லென
அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப
அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே
மைந்துடை யானை கைவைத் துறங்கவும்
திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்
20காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்
காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்
மேலோ ருலக மெய்தின னாகலின்
ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்
தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ
25பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்
களந்துகொடை யறியா வீகை
மணிவரை யன்ன மாஅ யோனே.
திணையும் துறையும் அவை.

1கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்னநாளிற்றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துக் கூடலூர் கிழார் பாடியது.

(இ - ள்.) மேடவிராசிபொருந்திய கார்த்திகைநாளின் முதற்காலின் கண் நிறைந்த இருளையுடைய பாதியிரவின்கண் முடப்பனைபோலும் வடிவை யுடைய அனுடநாளின் அடியின்வெள்ளி (முதல் நட்சத்திரம்) முதலாகக் கயமாகிய 2குளவடிவுபோலும் வடிவையுடைய புனர்பூசத்துக் கடையின் வெள்ளி எல்லையாக விளங்கப் பங்குனிமாதத்தினது முதற்பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய அதற்கு எட்டாமீனாகிய மூலம் அதற்கெதிரே எழாநிற்க அந்த உத்தரத்திற்கு முன்செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய நக்கத்திரம் (நக்ஷத்திரம்) துறையிடத்தே தாழக் கீழ்த்திசையிற் போகாது வடதிசையிற் போகாது கடலாற் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக முழங்காநின்ற தீப்பரக்கக் காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து ஒருமீன் வீழ்ந்தது வானத்தினின்றும்; அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர் எம்முடைய பறையொலி போலும் ஒலியை யுடைய அருவியையுடைய நல்ல மலைநாட்டுக்கு வேந்தனாகியவன் நோயையுடையனல்லனாகப் பெறின் அழகிதென இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்தவுள்ளம் பரப்ப யாம் அஞ்சினேம்; அஞ்சினபடியே ஏழாம் நாள் வந்ததாகலின் இன்று, வலியையுடைய யானை கையை நிலத்தே யிட்டு வைத்துத் துஞ்சவும், திண்ணிய வாராற் பிணிக்கப்பட்ட முரசம் கண்கிழிந்து உருளவும், உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக்குடை கால் துணிந்து உலறவும், காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக் கிடக்கவும் இப்படிக்கிடக்கத் தேவருலகத்தை அடைந்தான்; ஆகையாலே, ஒள்ளிய வளையையுடைய மகளிர்க்கு மேவப்பட்ட துணையாகித் தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான்கொல்லோ? பகைவரைப் பிணித்துக்கொள்ளும் வலியையும் நச்சியோர்க்கு அளந்து கொடுத்தலறியாத வண்மையையுமுடைய நீலமலை போலும் மாயோன்-எ-று.

மன்னும், தில்லும் : அசை.

கயத்துக் குளக்கடையென்க.

3நற்றிசையாகிய கிழக்கும் வடக்கும் செல்லாது தீத்திசையாகிய தெற்கும் மேற்குமாகிய இரண்டனுள் ஒருதிசைக்கண் வீழ்ந்ததென்றும் ஆம்; அன்றி வடக்குங்கிழக்குஞ் செல்லாதெனவே வடகிழக்கே வீழ்ந்ததென்றுமாம்.

படவென்றல் இன்னாமையிற் கைவைத்துறங்கவும் கண்கிழிந்துருளவும் கால்பரிந்துலறவும் கதியின்றி வைகவுமெனத் தகுதிபற்றிக் கூறப்பட்டன.

மாயோன் மகளிர்க்குறுதுணையாகித் தன்றுணையாயம் மறந்தனனோ? இல்லையோ? யாம் மறவா நிலைமையமாயினமென இரங்கிக் கூறியவாறு.

‘அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றென’ என்பதூஉம் பாடம்.


(கு - ரை.) 1. அழற்குட்டம் : “அழல்சேர் குட்டத் தட்டமி (சிலப். 23 : 134) ; ஆடு - மேடராசி; அக்கினியை அதிதேவதையாகவுடைமையின் கார்த்திகைக்கு அழலென்பது பெயராயிற்று. அசுவதியின் நான்கு கால்களும், பரணியின் நான்குகால்களும், கார்த்திகையின் முதற்காலும் மேடராசிக் குரியன. பங்குனி மாதத்திற் கார்த்திகை நட்சத்திரம் உள்ள தினம் பூர்வ ஷஷ்டி அல்லது ஸப்தமி யென்பது கணிதநூற்றுணிபாதலால், அத்தினத்தின் பாதியிரவு நிறைந்த இருளையுடையதாயிற்று.

3. அனுடத்தின் வடிவமாகிய ஆறு நட்சத்திரங்களின் தொகுதி வளைந்த பனைமரம்போன்ற தோற்றமுடைமையின் அது முடப்பனை யெனப்பட்டது; ‘அனுட மாறு முடப்பனை போலும்’ என்பர்.

9. ‘பாசி, ஊசியென்பன முறையே பிராசி, உதீசி யென்னும் வடமொழிச்சிதைவுகள்; உச்சிமீனுக்கு முன் எட்டாவது மீன் அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு; ‘உச்சி மீனுக்கெட்டாமீனுதயமீன் என்பர்.

5 - 12. புறநா. 24 : 24 - 5; பங்குனிமாதத்தில் நட்சத்திரம் வீழின், இராசபீடை என்பர்; “ஆடு கயறே டனுச்சிங்கத் தெழுமீன் விழுமே லரசழிவாம்” என்பது சோதிடநூல்.

14. புறநா. 126 : 8, குறிப்புரை.

19. புறநா. 93 : 1.

22. புறநா. 213 : 10, 228 : 11, 249 : 11.

மு. பாடாண்டிணைத்துறைகளுள், ‘அச்சமு முவகையு மெச்ச மின்றி, நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும், காலங் கண்ணிய ஓம்படை’ என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 30 இளம்.); ‘ஆடிய லழற்குட்டத்து... ...மாஅயோனே : இதனுள், பாடாண்டலைவனது நாண்மீனை வீழ்மீன் நலிந்தமைபற்றிக் கூறியது’ (தொல். புறத்திணை. சூ. 36, .)

(229)


1.புறநா, 22 குறிப்புரை,

2. புனர்பூசம் கயமாகிய குளவடிவமுடையது; அதனால், அது கயமென்றும், குளமென்றும், ஏரியென்றும் பெயர்பெறும்; “அதிதி நாள்கழை யாவண மேரி, புனர்தங் கரும்பிவை புனர்பூச மாகும்” (பிங்கலந்தை)

3.இனி மங்கலமரபிற் காரியஞ்செய்வார் வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந்தித்தும் நற்கருமங்கள் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசையை முற்கூறினார்’ (தொல். பாயிரம், .); தண்டி. சூ, 108, மேற்.