2
மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
5தீமுரணிய நீரு மென்றாங்
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலு மளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
10வெண்டலைப் புணரிக் குடகடற்குளிக்கும்
யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
15ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல்புளிப்பினும் பகலிருளினும்
நாஅல்வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
20நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே..

(பி - ம்.) 20 ‘நிலையரோ’

திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ;வாழ்த்தியலுமாம்.

சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர்முடிநாகராயர் பாடியது.

(2)

(இ - ள்.) அணுச்செறிந்த நிலனும்,அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத்தடவிவரும் காற்றும், அக்காற்றின்கண் தலைப்பட்டதீயும், அத்தீயோடு மாறுபட்ட நீருமென ஐவகைப்பட்டபெரிய பூதத்தினது தன்மைபோலப் பகைவர் பிழைசெய்தால்அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்குமளவல்லவாயின்அவரை அழித்தற்கு உசாவும் உசாவினது அகலமும், அவரைஅழித்தற்கேற்ற மனவலியும் சதுரங்கவலியும், அவ்வாற்றால்அவரை அழித்தலும், அவர் வழிபட்டால் அவர்க்குச் செய்யும்அருளுமுடையோய்! நினது கடற்கட்டோன்றிய ஞாயிறுபின்னும் நினது வெளிய தலைபொருந்திய திரையையுடையமேல்கடற்கண்ணே மூழ்கும் புதுவருவாய் இடையறாத ஊர்களையுடையநல்ல நாட்டிற்குவேந்தே! வானவரம்ப! பெரும! நீ,அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர்ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்டபொற்பூந்தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும்பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்!பால் தன் இனிமையொழிந்து புளிப்பினும் ஞாயிறு தன்விளக்கமொழிந்து இருளினும், நான்குவேதத்தினது ஒழுக்கம்வேறுபடினும் வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய 1 மந்திரச்சுற்றத்தோடு ஒழியாது நெடுங்காலம் விளங்கித்துளக்கமின்றி நிற்பாயாக; அரைமலையின்கட் சிறியதலையையுடைய மறிகளையுடையவாகிய பெரிய கண்ணையுடையமான்பிணைகள் அந்திக்காலத்தே அந்தணர் செய்தற்கரியகடனாகிய ஆவுதியைப் பண்ணும் முத்தீயாகியவிளக்கின்கண்ணே துயிலும் பொற்சிகரங்களையுடையஇமயமலையும் பொதியின்மலையும் போன்று-எ-று.

குளிக்குநாடென இயையும;் குளிக்குநாடெனஇடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது.நீயோ; ஓ : அசைநிலை; அன்றி, இதனை வினாவாக்கி,ஞாயிறு குளிக்கு மென்பதனை முற்றாக்கி, வானவரம்பனென்பதனை அவ்வினாவிற்குப் பொருளாக்கி உரைப்பாருமுளர்.

முத்தீயாவன : ஆகவனீயம்,காருகபத்தியம், தென்றிசையங்கி.
ஆங்கும், அத்தையும் : அசைநிலை, வானவரம்பனை; ஐகாரம்முன்னிலையை விளக்கிநின்றது.

நிலந்தலைக்கொண்ட (14) என்பதற்குநிலங்கோடல் காரணமாகத் தலைக்கட்குடியவெனினும்அமையும்..

1 மந்திரச்சுற்றம் : கம்ப.அயோத்தி. மந்திர. 71

போற்றார்ப்பொறுத்தல் முதலியகுணங்களையுடையோய், பொருந, வரையாதுகொடுத்தோய்,வானவரம்ப, பெரும, நீ, புளிப்பினும் இருளினும் திரியினும்இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றிச் சுற்றமொடுவிளங்கி நிற்பாயாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

போற்றார்ப்பொறுத்தல் முதலாகியகுணங்களை அரசியலடைவாற் கூறுகின்றாராதலின், பூதங்களின்அடைவு கூறாராயினார்.

இதனாற் சொல்லியது, தன்கடற்பிறந்தஞாயிறுதன்கடற்குளிக்கும் நாடனாதலாற் (பி - ம். வானவரம்பனாதலாற்)செல்வமுடையையாகவென்று வாழ்த்தவேண்டுவதின்மையின்,நீடு வாழ்கவென வாழ்த்தியவாறாயிற்று.


(கு - ரை.) 1. “மண்கெழு ஞாலம்”(பதிற். 69 : 12); “மண்டிணி ஞால மாள்வோன்”(சிலப். 26 : 42); “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு”(மணி. 11 : 95)

1 - 3. “மண்டிணிந்த......வளியும்என்பது எண்” (தொல். இடை. சூ. 7, தெய்வச்,; ந.)

4 - 5. “வளித்தலைஇய.....நீருமென்றாஅங்கெனநாற்சீரடிக்கு இருசீரும் முச்சீரும் பொருந்தி ஆசிரியம்வந்தது” (தொல். செய். சூ. 115, ந.)

1 - 5. “அல்லதூஉம் நேரீற்றியற்சீர்இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை யெனப்படும்;மண்டிணிந்த....நீரும்” (தொல். செய். சூ. 26, பேர்.);“மண்டிணிந்த.....நீருமென ஈற்றுக்கண்வருதல்பெரும்பான்மையாதலின் இறுதிநில்லாவெனப் பொருள்கூறலாகாமையுணர்க” (தொல். செய். சூ. 26, ந.);“மண்டிணிந்த.....நீரும் : இவ்வஞ்சியடி யிறுதி நேரீற்றியற்சீர்சிறுபான்மை வந்தது” (யா - வி. சூ. 15)

7. குறள், 152.

2 - 7. “விசும்பி னன்ன சூழ்ச்சி”(தொல். உவம. சூ. 6, பேர். மேற்.)

8. பெரும்பாண். 422; “அவை நிகழ்ந்தபொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச்செய்ய வேண்டுதலின்” (குறள், 582, பரிமேல்.)

4 - 8. “வளிமிகின் வலியுமில்லை’‘(புறநா. 51 : 3)

3 - 8. “வளியிடைத், தீயெழுந் தன்னதிறலினர்” (முருகு. 170 - 71)

1 - 8. நிரனிறை.

10. “வெண்டலைப் புணரிநின்மான்குளம் பலைப்ப” (புறநா. 31 : 14); “வெண்டலைப்புணரியின் விளிம்புசூழ் போத” (சிலப். 26 : 81)

12. “கானக நாடனை நீயோ பெரும”(புறநா. 5 : 3); “வான வரம்பனெனப் பேரினிதுவிளக்கி” (பதிற். 6-ஆம் பத்தின் பதிகம்.)

13. “ஐவர் : குறிப்பினால் தொகைப்பொருள்அறிய வந்தது” (நன். மயிலை. சூ, 268); “ஐவரென்னுந்தொகைக்குறிப்புச்சொற் பாண்டவரைக்குறிப்பாலுணர்த்திற்று” (நன். வி. சூ. 269);“ஐவரென்னுந் தொகைச் சொல் அறமகன் முதலியஐவரையும் குறிப்பான் விளக்கியவாறு காண்க” (இ- வி. சூ. 170, உரை); “அலங்குளை....சினைஇயென்பதுதருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகதேவனென்பனகொண்டது” (நன். வி. சூ. 360)

14. பொலம்பூந்தும்பை : “பொலந்தோட்டுப்பைந்தும்பை” “பொலந்தும்பை” (புறநா. 22: 20, 97 : 15); “பொலம்பூந்தும்பை” (மதுரைக்.737)

13 - 5. செய்தெனெச்சம் வினைமுதல்வினைகொண்டுமுடிந்ததற்கு ‘ஐவரொடு.....கொண்ட’ என்பது மேற்கோள்(நன். மயிலை. சூ. 343; நன். வி. சூ. 344; இ- வி. சூ. 247, உரை); ஈரைம் பதின்மரும் பொருது களத்தவியப், பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே,ராராச் செருவினைவர்” (பெரும்பாண். 415 - 7)

16. “முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல்,பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை” (அகநா. 233 : 8 -9) ; “பெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை”(சிலப். 23 : 55); “ஓரைவ ரீரைம் பதின்மருடன்றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த,சேரன்” (சிலப். 29 : ஊசல் வரி.) பெயரின் ஈற்றயலாகாரம்ஓகாரமாக வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; நன். மயிலை.சூ. 352; நன். வி. சூ. 353.

17. இயற்சீர் வெள்ளடியல்லது பிறவடிஆசிரியத்துள் மயங்குமென்பதற்கு இவ்வடி மேற்கோள;்தொல். செய். சூ. 62, பேர்.

17 - 8. “பால்புளித்துப் பகலிருண்டுமாறுபடினும் எக்காலத்தினுந் தப்பா சான்றோர் மெய்ம்மொழி”(பு - வெ. 167, உரை.)

19. ஈரசைச்சீர் நின்று வேற்றுச்சீரோடுஒன்றிய சிறப்பில் ஆசிரியத்தளைக்கு இவ்வடி மேற்கோள்;யா. வி. சூ. 19.

20. ரகரமெய்யீற்று வியங்கோள்முற்றிக்குஇவ்வடி மேற்கோள்; நன். மயிலை. சூ. 337; நன்.வி. சூ. 338; இ - வி. சூ. 239, உரை.

21 - 3. நெருப்பிற்கு அஞ்சிப் புலிவாராமையின் கவலையின்றி மான்கள் தூங்குமென்பர்;“கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து, மடமான்பெருநிரை வைகுதுயில்” (புறநா. 247 : 2 - 3); “ஞெலிகழைமுழங்கழல் வயமா வெரூஉம்” (ஐங்குறு. 307)

22 - 3. “ஒன்றுபிரிந் தடங்கியவிருபிறப் பாளர், முத்தீப் புரைய” (புறநா. 367: 12 - 3); “மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்,திருபிறப் பாளர்” (முருகு. 181 - 2)

24. இமயம் பொற்கோட்டதென்பது : (புறநா.39 : 14 - 5, 369; 24; நற். 356; யா. கா. அவை. 2). இனமில்லாதபொருள் அடையடுத்த மொழிக்கு இவ்வடி மேற்கோள்; நன்.மயிலை. சூ. 400; நன். வி. சூ. 401; இ. வி. சூ. 312,உரை.

20 - 24. இமயம்போலத் துளக்கமின்றிநெடுங்காலம் நிற்பாயாகவென்றல் மரபு; “மின்னுமிழ்வைரக் கோட்டு விளங்கொளி யிமய மென்னும்,பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமே னிலவி வையம்,நின்னடி நிழலின் வைக நேமியஞ் செல்வ னாகி, மன்னுவாய்திருவோ டென்று வாழ்த்திநெய் யேற்றி னாரே” (சீவக.2417); “துளக்க லாகா நிலையுந் தோற்றமும்.....மலைக்கே”(நன். பாயிரம்)

மு. இச்செய்யுள், ‘பால்புளிப்பினும்பகலிருளினும்....நடுக்கின்றி நிலியரோ’ என்றதனாற்செவியறிவுறூஉவும், ‘இமயம் போன்று....நடுக்கின்றிநிலியரோ’ என்றதனால் வாழ்த்தியலுமாயிற்று; இது,“பகைநிலத்தரசர்க்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த்திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பாயெனஅச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின் “ஓம்படைவாழ்த்தாயிற்று”என்பர்; தொல். புறத்திணை. சூ. 36, ந.

இதன் 16 - ஆம் அடியால் பாட்டுடைத்தலைவன்பெயர்க்காரணம் புலப்பட்டவாறு அறிதற்பாலது; “நாடுகண்ணகற்றிய வுதியஞ் சேரற், பாடிச் சென்ற பரிசிலர்போல, உவவினி வாழிய தோழி”, “கொடைக்கட னேன்றகோடா நெஞ்சி, னுதியஞ் சேரல னட்டில் போல,வொலியெழுந்து” (அகநா. 65, 168) என்பவற்றால்இத்தலைவன் குணங்கள் விளங்கும். (2)