373
உருமிசை முழக்கென முரச மிசைப்பச்
செருநவில் வேழங் கொண்மூ வாகத்
தேர்மா வழிதுளி தலைஇ நாமுறக்
கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை
இழிதரு குருதியொ டேந்திய வொள்வாட்
பிழிவது போலப் பிட்டையூ றுவப்ப
மைந்த ராடிய மயங்குபெருந் தானைக்
கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே
...........................................தண்ட மாப்பொறி
மடக்கண் மயிலியன் மறலி யாங்கு
நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
மென்றோண் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ.....................................................
.....................யணியப் புரவி வாழ்கெனச்
சொன்னிழ லின்மையி னன்னிழற் சேர
நுண்பூண் மார்பிற் புன்றலைச் சிறாஅர்
அம்பழி பொழுதிற் றமர்முகங் காணா
...........................................ற் றொக்கான
வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
மாட மயங்கெரி மண்டிக் கோடிறு
புருமெறி மலையி னிருநிலஞ் சேரச்
சென்றோன் மன்ற சொெ..................
...........ண்ணறிநர் கண்டுகண் ணலைப்ப
வஞ்சி முற்றம் வயக்கள னாக
அஞ்சா மறவ ராட்போர் பழித்துக்
கொண்டனை பெரும குடபுலத் ததரி
பொலிக வத்தைநின் பணைதனற.......ளம்
விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று
புகர்முக முகவை பொலிகென் றேத்திக்
கொண்டன ரென்ப பெரியோர் யானும்
அங்கண் மாக்கிணை யதிர வொற்ற
....................லெனாயினுங் காதலி னேத்தி
நின்னோ ரன்னோர் பிறரிவ ணின்மையின்
மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும
பகைவர் புகழ்ந்த வாண்மை நகைவர்க்குத்
தாவின் றுதவும் பண்பிற் பேயொடு
கணநரி திரிதரு மாங்க ணிணனருந்து
செஞ்செவி யெருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே.

(பி - ம்.) 1 ‘முழககெயிசைய’ 6 ‘பிட்டயூறுவப்ப’, ‘பிட்டயூடவப்ப’ 17 ‘அமபாழிலொழிதிறறமா’ 27 ‘பணைதனமவிளங்கு’ 30 ‘தொண்டரெனப்’ 33 ‘பிறரிவர்’ 34 ‘மின்னெயில்’ 35 ‘நசைவாக்குத்’ 37 ‘திரிதரூஉமாங்கண’

திணை - அது; துறை - மறக்களவழி; ஏர்க்கள உருவகமுமாம்.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரெறிந்தானைக் கோவூர்கிழார்.


(கு - ரை.) 1. உருமிசை முழக்கு - மேகமுழக்கு ; மேககர்ச்சனை முரச ஒலிக்கு உவமை ; "படுமழை யுருமி னிரங்கு முரசு" (புறநா. 350 : 4) ; "தாழிரு டுமிய மின்னித் தண்ணென, வீழுறை யினிய சிதறி யூழியிற், கடிப்பிகு முரசின் முழங்கி" (குறுந். 270 : 1 - 3) ; "முரசதிர் பவைபோன் முழங்கிடி பயிற்றி" (பரி.22 : 4) ; "கொண்மூ, இருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப், போர்ப்புறு முரசி னிரங்கி", "இடியுமிழ் முரசம்

பொருகளத் தியம்ப" (அகநா. 188 : 1 - 3, 354 : 2) ; "உருமிடி முரசமொடு" (முருகு. 121) ; "மூரிவான முழங்கிவாய் விட்ட தொப்ப, அதிர்குரன் முரசம்", "இடியுமிழ் முரசம்" (சீவக. 543, 2900) ; "உருமி னிடிமுரசார்ப்ப" (முத்.) ; "இடியார் பணைதுவைப்ப", (பு. வெ. 121) ; "முழங்கின முகிலென முரசமே" (தக்க. 530)

2. “கருங்கை யானை கொண்மூ வாக” (புறநா. 369 : 2)

3 - 4. “மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக், காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோல், மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி, கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கி னானே” (சீவக. 451, ந.) என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள்.

7. ஆடிய - வென்ற. 8. கொங்கு - கொங்கநாட்டு வீரர்களை.

11. புலம்ப - தனித்து வருந்த.

12. மன்றம் - பொதுவிடம். 16. புன்றலை - சிவந்த தலை.

16 - 7. “புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி” (புறநா. 46 : 6)

20. இறுபு - ஒடிந்து.

20 - 21. புறநா. 211 : 1 - 4 ; கலித். 45 : 3 - 5.

24. வஞ்சி - சேரர் இராசதானி ; “வஞ்சி முற்ற நீங்கிச் செல்வோன்” (சிலப். 25 : 6)

25. ஆள் போர்பு அழித்து - வீரர்களுடைய பிணங்களாலாகிய போரை அழித்து ; புறநா. 371 : 14.

26. குடபுலம் - குடநாடு. அதரி கொண்டனை - கடாவிட்டனை.

28. திணை - குலம்.

29. புகர்முக முகவை - யானைப்பரிசில் ; புறநா. 371 : 20.

31. கிணை - தடாரிப்பறை.

33. நின்னோர் அன்னோர் - உன்னைப்போன்றோர்.

34. சீவக. 323, ந. மேற்.

33 - 4. தொல். உவம. சூ. 24, இளம். மேற்.

35. நகைவர்க்கு - நட்பினர்க்கு ; “நகைவர்க் கரண மாகிப் பகைவர்க்குச், சூர்நிகழ்ந் தற்றுநின் றானை” (பதிற்.31 : 33 - 4) ; “நகைவ ரார நன்கலஞ் சிதறி” (பதிற். 37 : 4, 43 : 20)

38 - 9. “செஞ்செவி யெருவை திரிதரும், அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே” (புறநா. 370 : 26 - 7)

(373)