378
தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாளோட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
5நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென்
அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
10எமக்கென வகுத்த வல்ல மிகப்பல
மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்
டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
15செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின வரைக்கியாக் குநரும்
கடுந்தெற லிராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
20நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்
கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை யெய்தி
அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே.

(பி - ம்.) 3 ‘தொடையமைக்கண்ணி’ 4 ‘குடைஇய’, ‘வடிம்பின றறைக்கிளளிசொழர்’ 10 ‘வகுதகுவல்ல’ 11 ‘னழுங்கல வெறுக்கை’ 15 ‘விரறசெறிகுநருஞ’ 16 ‘மனக்கமைமரபினமிடறு’ 18 ‘கடுந்தேர்’ 19 - 20 ‘ஞான்றுநிலஞ்’ 21 ‘மிழைப்பொலிந்’ 22 ‘வருநதை’ 23 ‘கிணைத்தலைமை’

திணை - அது; துறை - இயன்மொழி.

சோழன் செருப்பாழி யெறிந்த இளங்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் (பி - ம். மொழி......திபசுங்குடையநர்)


(கு - ரை.) 1. மிடல் - வலி.

2. வடுகர் - வடுகவீரர்; இவர் வடநாட்டினருள் ஒருவகையார்; "கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்" (நற். 212 : 5),

"குல்லைக் கண்ணி வடுகர்" (குறுந். 11 : 5), "கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்", "வானிணப் புகவின் வடுகர்", "முரண்மிகு வடுகர்", "தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்", "வம்ப வடுகர் பைந்தலை சவட்டி", " கதநாய் வடுகர்" (அகநா. 107 : 11, 213 : 8, 281 : 8, 295 : 15, 375 : 14, 381 : 7). ஓட்டிய - ஓட்ட.

1 - 2. "பரதவர் - தென்றிசைக்கட் குறுநில மன்னர்; அது, ‘தென்பரதவர்...................வாளோட்டிய’ என்னும் புறப்பாட்டானும் உணர்க" (மதுரைக். 144, ந.)

3. தொடை அமை கண்ணி - கட்டுதலமைந்த தலைமாலை. வேலுக்கு மாலைசூட்டல் மரபு; புறநா. 332 : 1 - 5.

4. கடைஇய - செலுத்திய. வடிம்பு - இங்கே காலின் விளிம்பு; "மாவுடற்றிய வடிம்பு" (பதிற். 70 : 2)

5. கோயில் - அரண்மனை.

6. சுதை - சுண்ணச்சாந்து; "வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து" (மணி. 6 : 43); "திங்களுங் கரிதென வெண்மை தீட்டிய, சங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை" (கம்ப.நகரப். 133); "வெண்சுதை தீற்றிய மாடம்" (நைடதம், நகர. 5)

7. பனிக்கயம் - குளிர்ந்த நீரையுடைய குளம் ; நகருக்குக் குளம் உவமை ; "கயங்கண் டன்ன வயங்குடை நகரத்து" (மதுரைக். 484) ; "நிழற்கயத் தன்ன நீணகர்" (அகநா. 105 : 7)

8. அரிக்கூடுமாக்கிணை - அரித்தெழும் ஓசையையுடைய பெரிய தடாரிப்பறை ; "அரிக்கூ டின்னியம்" (மதுரைக். 612)

9. வஞ்சி - பகைமேற் செலவு ; புறநா. 15 : 24, 33 : 10

11. அருங்கல வெறுக்கை - பெறுதற்கரிய ஆபரணமும் செல்வமும் ;புறநா. 146 : 1.

13. இலம்பாடு - இல்லாமை உண்டாதல்; ஒக்கல் - சுற்றம் ; "இலம்படு காலை யாயினும், புலம்பல் போயின்று பூத்தவென் கடும்பே", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்" (புறநா. 380 : 15 - 6, 390 : 19, 394 : 16)

14 - 5. விரலிற் செறித்தற்குரிய மோதிரமுதலியவற்றைக் காதிலும், காதிற் செறித்தற்குரிய குழை முதலியவற்றை விரலிலும் செறித்துக்கொண்டாரென்றபடி.

16. அரை - இடை. யாக்குநர் - கட்டுகின்றவர். மிடறு - கழுத்து.

18. வடசொற் சிதைந்து பொருத்தமுடையனவாகச் சான்றோர் செய்யுளில் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; தொல் எச்ச. சூ. 6, ந. ; இ. வி. சூ. 175, உரை.

19. அரக்கன் - இராவணன். ஞான்றை - சமயம் ; ஐ : சாரியை.

20. மதரணி - கதிர்த்த ஆபரணங்கள்.

20 - 21. குரங்கின் செம்முகப் பெருங்கிளை - செவ்விய முகத்தையுடைய பெரிய குரங்கின் குழு ; சுக்கிரீவனைச் சேர்ந்த குரங்குகள் ; "செம்முக மந்தி" (நற்.151 : 8) ; "துய்த்தலைச், செம்முக மந்தியாடும்" (அகநா.241 : 14 - 5). இழை - ஆபரணம் ; இழைக்கப்படுதலான் வந்த பெயர். 22. அறாஅ - நீங்காத. பெற்றிகும் - பெற்றோம்.

24. அரும்படரெவ்வம் - நினைவாலுண்டாகும் நோயின் வருத்தம் ; புறநா. 145 : 10.

மு. பாடாண்டிணைத் துறைகளுள், ‘பெற்ற பின்னரும் பெருவளனேத்தி, நடைவயிற் றோன்றிய விருவகை விடை’ (தொல்.புறத்திணை. சூ. 30, இளம்.; சூ. 36, ந.) என்பதற்கு இது மேற்கோள்.

(378)