27
சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
5உரையும் பாட்டு முடையோர் சிலரே
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
10கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
15வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக

கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே.

(பி - ம்.) 3 ‘விழுக்குடி’ 6 ‘போன்மாய்ந்திசினோர்’ 7 ‘பாடுபுகழ்’ 17 ‘அருளி’

திணை-பொதுவியல்; துறை - முதுமொழிக்காஞ்சி.

1சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

(இ - ள்.) சேற்றின்கண்ணே வளரும் தாமரைபூத்த ஒள்ளிய நிறத்தை உடைத்தாகிய நூறாகிய இதழையுடைய மலரினது நிரையைக் கண்டாற் போன்ற ஏற்றத் தாழ்வில்லாத, சிறந்த குடியின்கட்பிறந்து 2வீற்றிருந்த வேந்தரை எண்ணுங்காலத்துப் புகழும் பாட்டும் உடையோர் சிலர்; தாமரையினது இலையையொப்பப் பயன்படாது மாய்ந்தோர் பலர்; புலவராற் பாடப்படும் புகழையுடையோர் ஆகாயத்தின்கண் பாகனாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவாரென்று சொல்லுவார் அறிவுடையோர், தாம் செய்யும் நல்வினையைமுடித்தென்று சொல்லக் கேட்பேன்; என்னுடைய இறைவ! சேட்சென்னி! நலங்கிள்ளி! வளர்ந்ததொன்று பின் குறைதலுண்டாதலும், குறைந்ததொன்று பின் வளர்தலுண்டாதலும், பிறந்ததொன்று பின் இறத்தலுண்டாதலும், இறந்ததொன்று பின் பிறத்தலுண்டாதலும் கல்விமுகத்தான் அறியாத மடவோரையும் அறியக்காட்டித் திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற தேயத்தின்கண் ஒன்றை மாட்டாராயினும் வல்லாராயினும் வறுமையான் வருத்தமுற்று வந்தோரது உண்ணாத மருங்கைப் பார்த்து அவர்க்கருளி வழங்கவல்லையாகுக; அருளிலராய்க் கொடாமையை வல்லராகுக, கெடாத வலியையுடைய நினக்குப் பகையாய் மாறுபட்டோர் - எ - று.

நூற்றிதழலரின் நிரைகண்டன்ன உரையும் பாட்டும் உடையோர் சிலரென இயையும். நிரைகண்டன்ன விழுத்திணையென்றுரைப்பினும் அமையும்.

அருளிலர் கொடாமைவல்லராகுக என்றதனாற் பயன், அவையுடை யோர் தத்தம் பகைவரை வெல்வராதலால், பகையெதிர்ந்தோர் அவை இலராக வென்பதாம்.

செய்வினைமுடித்து வானவூர்தி எய்துபவென இயையும்.


(கு - ரை.) 2. நூற்றிதழ்: வி. பா.சம்பவச். 81.

3. ‘விழுமம்’ சிறப்பாகிய குறிப்பையுணர்த்துதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 57, சே; தொல்.உரி. சூ. 55, ந.; இ. வி.சூ. 282, உரை.

1-4. சாதிக்கேற்ற உவமையென்பர்; தண்டி.சூ. 88, உரை.; இ. வி.சூ. 639, உரை.

5. புறநா.165 : 1 - 3; “நல்லிசை நிலைஇ”, “நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்து” (பதிற்.14, 18); “தொலையா நல்லிசை யுலகமொடு நிற்ப”, “செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட” (மலைபடு. 70, 388); “மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும்......சாவா வுடம்பெய்தினார்” (திரி.16); “ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த, உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து, மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை, திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்குமன்றே”, “பொன்று மிவ்வுட் லின்பொருட், டென்று நிற்கு மிரும்புக, ழின்றி நீர்கழிந் தீர்களாற், குன்றின் மேற்குடை வேந்திர்காள்” (சூளா.சீயவதை. 204, அரசியல் 226). இவ்வடியை, “புகழ்தான் உரையும் பாட்டுமென இருவகைப்படும்; அவற்றுள், உரைப்பார் உரைப்பவையென எல்லோர்க்குமுரிய வழக்கினையே எடுத்தாராயினும் இனம்பற்றிப் புலவர்க்கேயுரிய செய்யுளும் கொள்ளப்படும்; படவே, பாடுவார் பாடுவனவெல்லாம் புகழாமென்பதூஉம் பெற்றாம்” (குறள், 232) என உரைநடையாக அமைத்தருளினர் பரிமேலழகர்.

6. “மரையிலையின் மாய்ந்தார் பலர்” (நாலடி.359)

8. “ஊரா நற்றேர்” (மணி.6 : 39)

7-9. புறநா.50 : 14 - 5; “புகழுடம்பான் இவ்வுலகும் புத்தேளுடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், ‘புலவரைப் போற்றாது’ என்றார்; அவன் இரண்டுலகும் ஒருங்கெய்துதல், ‘புலவர் பாடும்.....முடித்து’ எனப் பிறராலுஞ் சொல்லப்பட்டது”; “புலவர் பாடும் புகழுடையோர்......எய்துவராதலின் துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று” (குறள், 234, 970, பரிமேல்.)

11-4. புறநா.8-ஆம் செய்யுளின் குறிப்புரையைப் பார்க்க.

“அங்கண்மா ஞாலத்தை விளக்கு மாய்கதிர்த், திங்களு மொருமுறை வளருந் தேயுமால்” (கம்ப.சடாயுவுயிர். 196)
15. புறநா. 57 : 1.

17-8. அருளும் கொடையுமுடையோர் தம்பகையை வெல்வாரென்பதை, “திருமகற் பெற்றெனச் செம்பொற் குன்றெனப், பெருநல நிதிதலை திறந்து பீடுடை, இருநிலத் திரவலர்க் கார்த்தி யின்னணம், செருநிலம் பயப்புறச் செல்வன் செல்லுமே” (சீவக.331) என்னுஞ்செய்யுளாலும், அதனுரையில், நச்சினார்க்கினியர்‘அருளிலர், கொடாமை வல்லராகுக’ என மேற்கோள்காட்டியிருத்தலாலும் அறிக. இது ககரவீற்று வியங்கோள் பலர்பாலில் (நன்.சூ. 337, மயிலை.) வருதற்கும், வியங்கோள் வாழ்த்துதற்பொருளில் (இ. வி.சூ. 239, உரை) வருதற்கும் மேற்கோள்.

18-9. கலித்.11 : 1-4.

(27)


1 இப்பாட்டின் 10ஆம் அடியில், தலைவன் பெயர் அமைந்திருத்தல் காண்க,

2 வீற்றிருத்தல் - கவலையின்றி யிருத்தல்; “வீற்றிருந் தவருங் கற்றார்” (சீவக,1676); “தமிழ்ப்புலவ, ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்” (திருவள்ளுவ மாலை,16)