28
சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளு மூமுஞ் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்
கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்
5பேதைமை யல்ல தூதிய மில்லென
முன்னு மறிந்தோர் கூறின ரின்னும்
அதன்றிற மத்தையா னுரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போ ருணர்த்திய கூஉம்
10கானத் தோர்நின் றெவ்வர் நீயே
புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே
15அதனால், அறனும் பொருளு மின்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றா மைந்நிற் போற்றா மையே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) மக்கட்பிறப்பிற் சிறப்பில்லாத குருடும், வடிவில்லாத தசைத்திரளும், கூனும், குறளும், ஊமும், செவிடும், மாவும், மருளும், உளப்பட உலகத்து உயிர்வாழ்வார்க்கு எட்டுவகைப்பட்ட பெரிய எச்சமென்று சொல்லப்பட்ட இவையெல்லாம் பேதைத்தன்மையையுடைய பிறப்பாவதல்லது இவற்றாற் பயனில்லையென முற்காலத்தும் அறிந்தோர் சொன்னார்; இன்னமும் அவ்வூதியத்தின் பாகுபாட்டை யான் சொல்ல வந்தது, வட்டமாகிய வரியையுடைத்தாகிய செம்பொறியையுடைய காட்டுக்கோழிச்சேவல் தினைப்புனம் காப்போரைத் துயிலுணர்த்துவதாகக் கூவும் காட்டின்கண் உள்ளோர், நின்னுடைய பகைவர்; நீதான் வேலிப்புறத்து நின்று வேண்டிய மாக்கட்கு அறத்தைக் கருதி, அகத்துள்ளோர்தாம் பிடுங்கியெறியும் கரும்பாகிய போகடப்பட்ட கழை வாவியகத்துத் தாமரையினது பொலிந்த பூச் சிதற வீழ்ந்ததாக, அது கூத்தர் ஆடுகளத்தையொக்கும் உள்ளாகிய நாட்டையுடையை; ஆதலான், அறனும் பொருளும் இன்பமும் என்னப்பட்ட மூன்றும் செய்வதற் குதவும் பெரும! நினது செல்வம் உதவாதொழிதல் நின்னைப் பாதுகாவாமை-எ - று.

பிண்டமென்பது, மணைபோலப் பிறக்குமது, மாவென்பது, விலங்கு வடிவாகப் பிறக்குமது. மருளென்பது, அறிவின்றியே மயங்கி யிருக்குமது. ஊதியமென்பது, அறம்பொருளின்பங்களை; அன்றி அறமென்பாரும் உளர்.

நிற்போற்றாமையென்ற கருத்து, சிதடுமுதல் அறிவின்மை பிறப்பொடு கூடாதவாறு போல நின்செல்வமும் அறமுதலியன செய்தற்கேற்றிருப்பச் செய்யாமையாகிய அறிவின்மை, மக்கள் யாக்கையிற் பிறந்தும் பயனில்பிறப்பாகப் பண்ணுதலால் நினக்கு வரும் பொல்லாங்கைப் போற்றாமையென்பதாம்.

கானத்தோர் நின்பகைவரென்றவதனாற் பகையின்மை தோற்றி நின்றது.

மாவும் மருளும் உளப்படச் சிதடுமுதலாகப் பிறப்பொடுகூட்டப்படாத பெரிய எச்சமெனப்பட்ட எட்டுமெனக் கூட்டியுரைப்பினும் அமையும்.

இஃது அறஞ்செய்யாதானை அறஞ்செய்கவெனக் கூறியவாறு.

அதன்திறமென்பதற்கு அப்பேதைமையென்றாக்கி, அஃது உண்டானால் வரும் பொல்லாங்கும், அதுபோனால் வரும் நன்மையுமென்றுரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 2. மு. சிலப்.5 : 118; மணி.12 : 97.

1-4. “கூனொடு வெதிரே பங்கு குருடுபே ரூமை யானோர், ஊனமதடைந்த புன்மை யாக்கையோ டொழியு மம்மா” (கந்த.பானுகோபன் வதை. 24); “குறளொடு செவிடு மூங்கை கூன்மருள் குருடு மாவே, உறுமுறுப் பில்லாப் பிண்ட மோதிய வெண்மெய் யெச்சம்” (சூடாமணி நிகண்டு,12 : 94)

10. “சூழிருஞ் சடைக டாங்கிச் சுடர்முடி துறந்து கான்போய், வீழ்சரு கருந்தி நீவிர் மெய்த்தவம் புரிதல் வேண்டும்” (நைடதம்,போர் புரி. 3)

12. புய்த்தல் : “புய்ந்துகால் போகி” (களவழி.39);“கோடுபுய்க்கல்லா துழக்கு நாடகேள்” (கலித்.38); “கோட்டினிற் குத்திக்குடர்புய்த் துறுத்து” (மணி.13 : 47)

13. பூ என்பது பொலிவினை உணர்த்தலால், ‘பூம்போது’ பண்புத் தொகையுள் அடங்குமென்பர்; நன்.சூ. 397, மயிலை.

12-4. “நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும், வெள்ளி யன்ன வொள்வீ யுதிர்ந்து, சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய், மணிமரு ணெய்த லுறழக் காமர், துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர, வல்லோன் றைஇய வெறிக்களங் கடுப்ப” (மதுரைக்.279 - 84); “பல்லிதழ் தாஅய், வெறிக்களங் கடுக்கும் வியலறை” (மலைபடு.149 - 50)

17. ஆற்றாமை - உதவாமை. ‘அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும்பெரும நின்செல்வம்’ என்று உறுதிப்பொருள் மூன்றையும் அறிவித்தமையின், இச்செய்யுளும் முதுமொழிக்காஞ்சியாயிற்று.

(28)