30
செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
5சென்றளந் தறிந்தார் போல வென்றும்
இனைத்தென் போரு முளரே யனைத்தும்
அறிவறி வாகாச் செறிவினை யாகிக்
களிறுகவு ளடுத்த வெறிகற் போல
ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட
10யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே.

(பி - ம்.) 10 ‘யாங்கனம்’ 11 ‘மிசைப்பாய்’

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) செஞ்ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்தறிந்தவர்களைப்போல நாளும் இத்துணையளவை உடையனவென்று சொல்லும் கல்வியையுடையோருமுளர்; அப்பெரியோர் அச்செலவுமுதலாயின அறியும் அறிவாலும் அறியாத அடக்கத்தை யுடையையாகி யானைதன் கதுப்பின்கண் அடக்கிய எறியுங் கல்லைப்போல மறைத்த வலியையுடையையாதலான், நின்னை விளங்க எப்பரிசு பாடுவர் புலவர்? கூம்புடனே மேற்பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல் அதன் மேற்பாரத்தையும் பறியாமல் ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தைப் பரதவரும் அளவருமுதலாகிய தகுதியில்லாதோர் தம்புலத்திற்கு இடையாகிய பெருவழிக்கண்ணே சொரியும் கடலால் வரும் பலபண்டத்தையுடைய நாட்டையுடையோய்! - எ - று.

செலவென்றது செல்லப்படும் வீதியை.

பரிப்பென்றது இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லுமென்னும் இயக்கத்தை.

பாய் களையாது பரந்தோண்டாதென்பதனால், துறைநன்மைகூறிய வாறாம்.

பெருங்கலத்தினின்றென ஐந்தாவதாக உரைப்பினும் அமையும்.

துப்பினையாதலிற் புலவர் யாங்கனம் பாடுவரெனக் கூட்டுக.


(கு - ரை.) 1. செஞ்ஞாயிறு : செம்மை, இனச்சுட்டில்லாப் பண்படை.

4. ஆகாயமென்பது முதற்குறைந்தமைக்கு மேற்கோள்; நன்.சூ. 268, மயிலை.

1-6. புறநா.20 : 1 - 5; “நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின், அளப்பரி யையே” (பதிற்.14 : 1 - 2)

8-9. “காய்ந்தெறி கடுங்கற் றன்னைக் கவுட்கொண்ட களிறுபோல, ஆய்ந்தறி வுடைய ராகி யருளொடு வெகுளி மாற்றி, வேந்தர் தாம் விழைப வெல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்” (சீவக.2910) என்பதும், ‘களிறுகவு ளடுத்த வெறிகற் போல, ஒளித்த துப்பினை என்றார் பிறரும்’ என இவ்வடிகளை நச்சினார்க்கினியர்அச்செய்யுளின் உரையில் மேற்கோள் காட்டியிருத்தலும், “வேற்றுவ னெறிந்த கல்லைக், காந்திய கந்ததாகக் கவுட்கொண்ட களிறு போலச், சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து, நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்தனானான்” (சூளா.சீயவதை. 94) என்பதும் இங்கே அறியத்தக்கவை.

11. மீ முன் வலிமிக்கதற்கு மேற்கோள்; நன்.சூ. 177, மயிலை.

“அறிவறிவாகாச் செறிவினையாகி.......ஒளித்த துப்பினை” எனத் தலைவன் இயல்பை எடுத்துக் கூறினமையால், இச்செய்யுள் இயன்மொழியாயிற்று.

(30)