45
இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்
நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே
5ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே
இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனாற்
குடிப்பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே.

(பி - ம்.) 1 ‘மிலைத்தோனு மல்லன்’ 7 ‘செய்கை’

திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி.

சோழன் நலங்கிள்ளி உறையூர்முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் கோவூர்கிழார் பாடியது.

(இ - ள்.) பெரிய பனையினது வெளிய தோட்டைச் சூடினோனல்லன்; கரிய கோட்டினையுடைய வேம்பினது தாரையுடையோனல்லன்; நின்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது; நின்னுடன் பொருவானுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது; ஆதலால், நும்முள், ஒருவீர் தோற்பினும் தோற்பது நுங்குடியன்றோ? இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலால், நுங்குடிக்குத்தக்கதொன்றன்று நுமது செய்கை; கொடியாற் பொலிந்த தேரையுடைய நும்மைப்போலும் வேந்தர்க்கு உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும், இம்மாறுபாடு; ஆதலான், இது தவிர்தலே நுமக்குத் தக்கது-எ - று.

நினகண்ணியுமென்பது, நின்னகண்ணியுமென விகாரமாயிற்று.

அதனாலென்பதனை ஒழித்தும் பாடமோதுப.

இது சந்துசெய்தலால் துணைவஞ்சியாயிற்று.


(கு - ரை.) 1. “தோடு என்பது புல்லுறுப்பையுணர்த்துதற்கு மேற்கோள்; தொல். மரபு. சூ. 86, பேர்.

2.புறநா. 79 : 2.

3 - 6. முன்னிலைகூடிய படர்க்கையும் முன்னிலை முடிபேற்றதற்கு மேற்கோள்; நன். சூ. 333, மயிலை.

9. மெய்ம்மலியுவகை; குறுந். 398 : 7; கலித். 40 : 32.

(45)