10
வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி யத்தக வொறுத்தி
5வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற்
றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே
அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்த லல்லது மள்ளர்
10மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கான னெடியோய்
எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே.

திணையும் துறையும் அவை.

சோழன் நெய்தலங்கானல் (பி - ம்.நெய்தலங்காலை) இளஞ் சேட சென்னியை ஊன்பொதிபசுங் 1 குடையார் பாடியது.

(இ - ள்.) நின்னைவழிபட்டொழுகுவோரை விரையஅறிவை; பிறருடையகுற்றஞ்சொல்லுவாரது வார்த்தையைத் தெளிவாய்; நீமெய்யாக

மனத்தான் ஆராய்ந்துஅறுதியிடப்பட்ட கொடுமையை ஒருவன் பாற் காணின்,அதனை நீதிநூற்குத் தக ஆராய்ந்து அத்தீமைக்குத்தகத் தண்டஞ்செய்வை; வந்து நின்பாதத்தை யடைந்துமுன்னே நிற்பாராயின், அவர் பிழைசெய்வதற்குமுன்நீ செய்யும் அருளினும் அருள் பெரிதாகஅவரைச்செய்யுந் தண்டமும் தணிவை; அமிழ்தத்தைத்தன் சுவையால் வென்று உண்ண உண்ண அமையாதமணங்கமழும் தாளிப்பையுடைய அடிசிலைவிருந்தினர்க்கு மிகுதி குறைபடாமல் வழங்கும்பழிதீர்ந்த மனைவாழ்க்கையையுடைய பெண்டிர்முயக்கத்தால் மாறுபடுத்தலல்லது வீரர் போரால்மாறுபடுத்தலொழிந்த இந்திரவிற்போலும்மாலையையுடைய மார்ப! ஒரு தொழிலைச் செய்து பின்பிழைக்கச்செய்தே மென்று கருதாத செய்கையையும்சேய்மைக்கண்ணே விளங்கும் புகழினையுமுடையநெய்தலங்கானலென்னும் ஊரையுடைய நெடியோய்!அணுகவந்தேம் யாம்; நின் பலகுணங்களையும்புகழ்வேமாக. - எ - று.

வழிபடுவோரை வல்லறிதியென்றது,

2அறிந்து அவர்களுக்கு அருள்செய்வையென்பதாம்.

பெரிது (6) என்பது வினையெச்சக்குறிப்பாகலின், ஆகவென ஒரு சொல் வருவித்துஉரைக்கப்பட்டது. பண்டையிற்பெரிதுதணிதியென்பதற்கு நீ பண்டு செய்த கோபத்தினும்பெரிதாகத் தணிதியென்றுரைப்பினும் அமையும்.அடப்பட்டமையாக அமிழ்துபோலும் அடிசில் (7)என்றுரைப்பினும் அமையும்.

நெடியோய்! பல ஏத்துவேமாகஎய்தவந்தனமெனக்கூட்டுக.


(கு - ரை.) 3 - 4. “முறையெனப்படுவது கண்ணோடா துயிர்வௌவல்” (கலித். 133 :13); “எங்க ணினைய ரெனக்கருதி னேதமால், தங்கண்ணராயினுந் தகவில தண்டக்கால், வன்கண்ண னாகியொறுக்க வொறுக்கல்லா, மென்கண்ணா னாளா னரசு”(பழமொழி. 322); “தண்டமாவதுஅவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும்வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற்பொருட்டு ஒப்பநாடி அதற்குத் தகவொறுத்தல்” (குறள்,பரிமேல். உரைப்பாயிரம்)
5 - 6. “அஞ்சினர்க் களித்தலும்” (சிறுபாண்.210)

8. வாழ்க்கை : ஐங்குறுநூற்றின்முதற்பத்தால் விளங்கும்.

10. போகிய : “மக்கள் போகியவணிலாடு முன்றில்” (குறுந். 41)

9 - 10. “சிலைத்தா ரகல மலைக்குநருளரெனிற், றாமறி குவர்தமக் குறுதி யாமவன்,எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர், வாழக்கண்டன்று மிலமே”, “மலைப்பரு மகல மதியார்சிலைத்தெழுந்து” (புறநா. 61 : 14 - 7, 78 : 4); “வணங்குசிலைபொருதநின் மணங்கமழகல, மகளிர்க் கல்லதுமலைப்பறி யலையே” (பதிற். 63 : 4 - 5) “இளையோர்க்குமலர்ந்த மார்பினை” (சிறுபாண். 232, ந.)என்பதற்கும், “சோலைமயி லார்கடுணை வெம்முலைகடுஞ்சும், கோலவரைமார்பு” (சீவக. 283, ந.)என்பதற்கும் இவ்வடிகள் மேற்கோள்; “மள்ளர்.........மார்ப;இது தாரடுத்தது” (தொல். புறத். சூ. 31, ந.)

11. செய்திரங்காவினை: “செய்துபின்னிரங்கா வினையொடு” (அகநா. 268 : 13); “எற்றென்றிரங்குவ செய்யற்க” (குறள், 655) “கற்றார்முற்றோன்றா கழிவிரக்கம்” (நான்மணிக். 10).“செய்திரங்கா வினையென இரங்கல்இசையேயன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பும்உணர்த்திற்று” (தொல். உரி. சூ. 63, சே.); “இரங்கல்,இசையேயன்றி ஒரு பொருளது கழிவாற் பிறந்தவருத்தமாகிய குறிப்பும் உணர்த்தும்; ‘செய்திரங்கா......புகழ்’எனவரும்” (தொல். உரி. சூ. 61, ந.); “செய்து.......புகழெனஇரங்கலென்னுமுரிச்சொல்.....ஒருபொருளதுகழிவாற்பிறந்த வருத்தமாகிய குறிப்புப்பொருளுணர்த்தலும் பொருந்தும்” (இ. வி. சூ. 286,உரை). சேண்விளங்கும்புகழ் : “விண்பொருபுகழ் (புறநா.11 : 6); “சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ” (பதிற்.88 : 36); “கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்குநல்லிசை” (மதுரைக். 209)

12. நெய்தலங்கானனெடியோய்:அரசன் பெயர்க் காரணம் இதுவே. (10)


1. குடை - பனை ஓலையால் செய்யப்படுகிறது.

2. ‘அறிதி’ என்றதற்கு இங்கேஎழுதிய உரைநயம், “ஒருவாரண மழைப்ப நீயோவந்தேனென்றாய்” (கம்ப. விராதன். 49), “எங்கைமீரேனென்கிலீர்” (தக்க. 298), “என்னென்றானெங்கட்கிறை” (நள. காப்பு) என்பவற்றிலுள்ள‘ஏனென்றாய்’, ‘ஏனென்கிலீர்,’ ‘என்னென்றான்’என்பவற்றிற்கு இன்னவாறுபொருள்செய்யவேண்டுமென்பதை நன்குபுலப்படுத்துகின்றது.