26
நளிகட லிருங்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
5ஒளிறிலைய வெஃகேந்தி
அரைசுபட வமருழக்கி
உரைசெல முரசுவௌவி
முடித்தலை யடுப்பாகப்
புனற்குருதி யுலைக்கொளீஇத்
10தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிய
15வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு
மாற்றா ரென்னும் பெயர்பெற்
றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே.

திணையும் துறையும் அவை.

அவனை மாங்குடிகிழார் பாடியது.

(இ - ள்.) பெரிய கடலின்கட் பெரிய ஆழத்திடத்துக் காற்றாற் புடைக்கப்பட்ட 1 மரக்கலம் நீரைக் கிழித்து ஓடுமாறுபோலக் களிறு சென்று போர்க்களத்தை இடமகலச்செய்ய அவ்வாறு களமகலச்செய்த பரந்த இடத்தின்கண் விளங்கிய இலையையுடைய வேலையேந்தி வேந்துபடப் போரைக் கலக்கிப் புகழ் பரக்க அவர் முரசைக் கொண்டு முடித்தலையை அடுப்பாகக்கொண்டு குருதிப்புனலாகிய உலையின்கண் தசையும் மூளையுமுதலாயினவற்றைப்பெய்து வீரவளையையுடையதோளாகிய துடுப்பால் துழாவி அடப்பட்ட உணவால் அடுகளத்தின்கட் களவேள்விவேட்ட கொல்லும் போரையுடைய செழிய! அமைந்த கேள்வியையும் ஐம்புலனும் அடங்கிய விரதங்களையும் நான்கு வேதத்தையுமுடைய அந்தணர் சுற்றமாக வேந்தர் அதற்கேற்ப ஏவல் செய்ய நிலைபெற்ற வேள்வியைச் செய்து முடித்த வாய்த்த வாளினையுடைய வேந்தே! தவஞ்செய்தார், யாவர்க்குந் தெளிவாக, நின்னுடைய பகைவர்; நினக்குப் பகைவரென்னும் பெயரைப் பெற்று நின்னொடு போர்செய்தற்கு மாட்டாராயினும் அத்துறக்கத்து வாழ்வோர்-எ-று.

களனகற்றவுமென்னும் உம்மை அசைநிலை.

மன்னியவேள்வியென்றது, களவேள்வியொழிந்த வேள்விகளை.

செழிய! வேந்தே! ஆற்றாராயினும், ஆண்டுவாழ்வோராகிய நின்பகைவர் மாற்றாரென்னும் பெயர்பெற்று நோற்றாரெனக் கூட்டுக.


(கு - ரை.) 1. புறநா.20 : 1.

1-3. புறநா.13 : 5, குறிப்புரை; கலித்.132 : 5 - 8.

5. ஒளிறுதல் - விளங்குதல்; புறநா.177. 1; “ஒளிறுவாள் விழுப்புண்” (நெடுநல்.172.); “ஒளிறுவாண் மறவரும்” (மணி.1 : 68.)

6. மு. மதுரைக்.. 128.

7. புறநா.25 : 5-7, குறிப்புரை.

8-10. “ஆண்டலை யணங்கடுப்பின், வயவேந்த ரொண்குருதி, சினத்தீயிற் பெயர்புபொங்க......தொடித்தோட்கை துடுப்பாக, ஆடுற்ற வூன்சோறு” (மதுரைக்.29 - 35); “முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித்தோட் டுடுப்பிற் றுழைஇய வூன்சோறு” (சிலப்.26 : 242 - 3)

11. களம் வேட்டலென்பது, பலிகொடுத்தலென்றும் களவேள்வி செய்தலென்றும் வழங்கும்; புறநா.372, 12; “கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட்டன்றே” (முருகு. 100); “அரசுகெட....களம்வேட்ட, வடுதிறலுயர் புகழ்வேந்தே” (மதுரைக்.128 - 30); “பாண்டியன் சோழற் காய்ந்து, பெருங்கள வேள்வி செய்த பீடுடைக் காட்டு நாட்டு” (திருவால.44 : 54); “பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக், கொடித்தானை மன்னன் கொடுத்தான்-முடித்தலைத், தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக, மூளையஞ் சோற்றை முகந்து” (பு. வெ.160) அரசன் வேட்டதற்கு மேற்கோள்; தொல்.மரபு. சூ. 72, பேர்.

12. கொள்கை - விரதம்; “தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்” (முருகு.89)

13. புறநா.17 : 1-4, குறிப்புரை.

12-5. “நளிகடலிருங்குட்டத்தென்ற புறப்பாட்டில், ஆன்றகேள்வி .....வாள்வேந்தே என வரும் அடிகளில், பார்ப்பார் வேட்பித்தவாறும் அரசன் வேட்டவாறும் கண்டுகொள்க” (தொல்.புறத். சூ. 16, இளம்.); “நளிகடலிருங்குட்டத்து என்னும் புறப்பாட்டினுள் அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தது” (தொல். புறத். சூ. 20, ந.)

16. “நோற்றோர் மன்ற தோழி” (குறுந்.344)

16-8. “புண்ணியம் புரிந்தோர் புகுவது, துறக்க மென்னுமீ தருமறைப் பொருளே” (கம்ப.நகர. 5); புறங்கொடாது போரின்மாண்ட பகைவர் வீரசுவர்க்கம் பெறுவ ரென்பது இங்கே அறியத்தக்கது.
மு. அரசன் களவேள்வி வேட்டதற்கு மேற்கோள்; தொல்.புறத். சூ. 17, இளம்.“நளிகடலிருங்குட்டத்து என்னும் புறப்பாட்டுப் பலி கொடுத்தது” (தொல்.புறத். சூ. 21, ந.)

(26)


1. “வங்கம்போழ் முந்நீர்” (பு. வெ. 185)