126
ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை யுரவோன் மருக
5வல்லே மல்லே மாயினும் வல்லே
நின்வயிற் கிளக்குவ மாயிற் கங்குல்
துயின்மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பிற்
பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந
தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய
10நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற வந்த ணாளன்
இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப்
பரந்திசை நிற்கப் பாடின னதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடற்
15பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப்
பிறகலஞ் செல்கலா தனையே மத்தை
இன்மை துரப்ப விசைதர வந்துநின்
வண்மையிற் றொடுத்தனம் யாமே முள்ளெயிற்
றரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப
20அண்ணல் யானையொடு வேந்துகளத் தொழிய
அருஞ்சமந் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே.

(பி - ம்.) 10 ‘நிலமிசைப் பிறந்த’ 15 - 6 ‘வழிப்பிறர் கலஞ்’

திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை.

மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து (பி - ம். மாறோக்கத்து) நப்பசலையார் பாடியது.

(இ - ள்.) பகைவருடைய யானையினது பட்டத்திற் பொன்னைக் கொண்டு பாணரது தலை பொலியும்படி செய்து வாடாத பொற்றாமரையைச் சூட்டிய சிறந்த தலைமையினையும் புறக்கொடாத மேற்கோளினையும் உடைய பெரியோன்மரபினுள்ளாய்! ஒன்றைக் கற்றறிவேமாயினும் அறியேமாயினும் விரைய நின்னிடத்துப் புகழைச் சொல்லுவேமாயின், இராப்பொழுதுதான் ஓரிடத்தே உறங்குவதுபோன்ற செறிந்த இருளையுடைய சிறுகாட்டையும் பறையொலிபோலும் ஒலிபொருந்திய அருவியையுமுடைய முள்ளூர்க்கு வேந்தே! அழித்தற்கரிய தன்மையையுடைய நின்சுற்றத்துடனே பெருக நிலத்தின்மேல் மிக்க மாந்தரெல்லாரினும் அறிவின்கண் மாசற்ற 1அந்தணாளனாகிய கபிலன் இரந்துசெல்லும் புலவர்க்கு இனிப் புகழ்தற்கு இடனில்லையாகப்பரந்து புகழ்நிற்பப் பாடினான்; அதனைக் கொண்டு சினமிக்க சேனையையுடைய 2சேரன் மேல்கடலின்கட் பொன்னைத்தரும் நாவாய் செலுத்திய அவ்விடத்து வேறு சில மரக்கலம் போகமாட்டாத அத்தன்மையையுடையேமாயும் எமது மிடி துரக்க நின்புகழ் கொடுவர வந்து நினது வண்மையிலே சில சொல்லத் தொடுத்தனம், யாங்கள்; முட்போலும் பல்லினையுடைய பாம்பை எறியும் இடியேறுபோல முரசு கிளர்ந்தொலிப்பத் தலைமையையுடைய யானையுடனே அரசு போர்க்களத்தின்கட்படப் பொறுத்தற்கரிய பூசலைச் சிதற வெட்டிப் பெரிதும் பொருந்தாத பகைவரைத் தடுக்கும் பெண்ணையாற்றுப்பக்கத்தை யுடைய நாட்டையுடையோய்!-எ - று.

உரவோன்மருக! பொருந! நாடுகிழவோய்! நின்வயிற் கிளக்குவமாயின், அந்தணாளன் கிளையொடும் பொலிய இசைநிற்பப் பாடினன்; அதற்கொண்டு பிறகலம் செல்லாத அனையேமாயும், இன்மை துரத்தலால் இசைதர வந்து நின்வண்மையிற் சில தொடுத்தேம் யாமெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

மக்கட்கெல்லாமென்பது ஐந்தாவதன்மயக்கம். மக்கட்கெல்லாம் ஒக்கவெனினும் அமையும்.

வண்மையிற்றொடுத்தனமென்பதற்கு நின் வண்மையால் வளைப் புண்டனமெனினும் அமையும்.


(கு - ரை.) 2 - 3. பாணருக்குப் பொற்றாமரை அளித்தல் : புறநா. 11 : 11 - 7, குறிப்புரை.

4. புறநா. 139 : 7; "ஓடாப் பூட்கை" (முருகு. 247)

6 - 7. "கார்வண்டு, தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப், புக்கிருந்தா லன்ன பொழில்" (நள. சுயம். 22)

8. புறநா. 229 : 4; "பறைக்குர லருவி" (பதிற். 70); "பறையிசை யருவி" (சிலப். 25 : 28)

'இசை' என்னும் உரிச்சொல் ஒலித்தற் றொழிற்பண்பில் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 458, மயிலை.; நன். வி. சூ. 459.

19. அரவெறியுரும்: புறநா. 58 : 6 - 7, குறிப்புரை. முரசுக்கு இடி : புறநா. 17 : 39, குறிப்புரை.

(126)


1. "நீறுமேற் பூத்த நெருப்பு" (பு. வெ.166)

2. இச்சேரன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்.