107
பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) பாரிபாரியென்றுசொல்லி அவன் பல புகழையும் வாழ்த்தி அவ்வொருவனையே புகழ்வர், செவ்விய நாவையுடைய அறிவுடையோர்; பாரியாகிய ஒருவனுமேயல்லன், மாரியுமுண்டு, இவ்விடத்து உலகத்தைப் பாதுகாத்தற்கு-எ - று.

உலகுபுரத்தற்கு மாரியும் உண்டாயிருக்கப் பாரியொருவனைப் புகழ்வர் செந்நாப்புலவரெனப் 1பழித்ததுபோலப் புகழ்ந்தவாறு.


(கு - ரை.) 4. 'புரப்பதற்கு' என்னும் நான்கனுருபு செய்யுள் விகாரத்தால் தொக்கது, 'ஐந்தவித்தான் ஆற்றல்' என்புழிப்போல.

மு. பாடாண்டிணைத்துறைகளுள், கொடுப்போரேத்தற்கு (தொல். புறத்திணை. சூ. 29, இளம்; சூ. 35, ந.) மேற்கோள்; 'உவமிக்கப்படும் பொருளொடு உவமை தோன்றவருதலேயன்றி உவமையது தன்மை கூறலும் உவமையாதற்குரித்துப் பயனிலை பொருந்திய வழக்கின்கண் என்றவாறு; எனவே, இவ்வாறு வருவது பயனிலையுவமைக்கணென்று கொள்க; பாரிபாரி ....... புரப்பதுவே : இது மாரிபோலும் பாரியது கொடையென்னாது இவ்வாறு கூறும் பொருண்மையும் உவமமாம் எ - று' (தொல். உவம. சூ. 36, இளம்.); "உவமத் தன்மையும்" என்னும் உவம. 34-ஆம் சூத்திரத்தில், "அது 'பாரிபாரி ..... புலவர்' என்னும் பாட்டினுள் உலகளித்தற்கு மாரியு முண்டெனப் பாரியை உவமித்துச் சிறப்பித்துக் கூறுவான் மாரியைச் சிறப்பித்துப் பாட்டுடைத் தலைவனாகிய பாரியை உயர்த்துக் கூறாதான்போல இயல்பினான் உவமை கூறினானாம்; இது மாரிக்கும் பாரிக்கும் ஓரிழி வில்லை என்னுந் தன்மைபடக் கூறவே அவன் உயர்வு கூறுதலிற் பயனிலை புரிந்த வழக்கெனப்படு மென்பது" என்றனர் பேராசிரியர்; விலக்குவமையின் பாற்படுமென்பர் தண்டியுரையாசிரியரும், இலக்கணவிளக்க வுரையாசிரியரும். (தண்டி. சூ. 38; இ. வி. சூ. 645, உரை); குறிப்புவமையின்பாற்படுமென்பர் காரிரத்ந கவிராயர்; மாறன். சூ. 100.
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட், டென்னாற்றுங் கொல்லோ வுலகு" (குறள், 211) என்பது ஈண்டு அறியத்தக்கது.

(107)


1. புறநா. 95, உரை