36
அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற்
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்
5தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
10நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
ஆங்கினி திருந்த வேந்தனொ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே.

திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி.

அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர்கிழார் பாடியது.

(இ - ள்.) கொல்வாயாயினும் கொல்லாது ஒழிவாயாயினும் அவற்றால் நினக்கு வரும் உயர்ச்சி யாம் சொல்லவேண்டா; நீயே எண்ணியறிவை; செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும் நீண்ட கோற்றொழிலாற் செய்யப்பட்ட குறிய வளையையுமுடைய மகளிர் பொன்னாற் செய்யப்பட்ட கழலான் வேதிகை போல உயர்ந்த எக்கர்க்கண்ணே இருந்து விளையாடும் அணுமையையுடைய குளிர்ந்த ஆன்பொருந்தத்தினது வெளிய மணல் சிதற வலிய கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மைசெய்யப்பட்ட அழகிய வாயினையுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி வெட்டுதலான் நின்றநிலைகலங்கி வீழும் பூ நாறுகின்ற நெடிய கொம்புகள் தனிப்பக் காக்கள்தோறும் காவன்மரங்களை வெட்டுமோசை தன்னுடைய ஊரின்கண் நெடியமதிலெல்லையில் தனது காவலையுடைய கோயிற்கண்ணே சென்றொலிப்ப அவ்விடத்து மானமின்றி இனிதாகவிருந்த வேந்தனுடன் இவ்விடத்து நினது இந்திரவிற்போலும் மாலையையுடைய முரசொலிப்பப் பொருதாயென்பது கேட்டார்க்கு நாணும் தகுதியை யுடைத்து; ஆதலால், அப்போரை ஒழியத்தகும்-எ - று.

வார்கோற் குறுந்தொடியென மாறியுரைக்கப்பட்டது.

இனிதிருந்தவென்றது, குறிப்புமொழி.

கடிமரந்தடியுமோசை தன்மனையியம்ப இனிதிருந்த வேந்தனொடு மலைத்தனையென்பது நாணுத்தகவுடைத்து; அதனால் அடுநையாயினும் விடுநையாயினும் நின் புரைமை நீ அளந்தறிதியென மாறிக்கூட்டி வினை முடிவு செய்க.

மகளிர் தெற்றியாடும் பொருநை யென்ற கருத்து: இங்ஙனம் இளமகளிர் கழங்காடும் அணுமையதாயினும் புறப்பட்டுப் போர் செய்யாத அவன் வலியின்மை தோற்றிநின்றது.

மகளிர் தெற்றியாடும் தன்னூரென இயைப்பினும் அமையும்.

மேற்சென்றோனைச் சந்து செய்து மீட்டலின், இதுதுணைவஞ்சியாயிற்று.


(கு - ரை.) 1-2. அடுநை விடுநை என்பவற்றிலுள்ள நகரம் எதிர்கால இடைநிலை. “ஒல்வை யாயினுங் கொல்வை யாயினு, நீயளந் தறிவைநின் புரைமை” (குறுந்.259)

3-4. “மகளிர்....முத்த வார்மணற் பொற்கழங் காடும்” (பெரும்பாண்.327 - 35)

5. புறநா.11 : 5, குறிப்புரை.

6. வாய் : “வலம்படு திகிரி வாய்நீ வுதியே” (கலித்.7)

9. ‘கடி’ என்னும் உரிச்சொல் காப்பு என்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; தொல்.உரி. சூ. 85, ந. ‘கடி’ என்னும் உரிச்சொல் காவலென்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; இ. வி.சூ. 282, உரை.

6-9. புறநா.23 : 8 - 9, குறிப்புரை.

9-10. இயம்பலென்னும் உரிச்சொல் இசைப்பொருளுணர்த்தற்கு மேற்கோள்; தொல்.உரி. சூ. 62, சே.;சூ. 60, ந.; இ - வி.சூ. 285, உரை.

12. சிலைத்தார் : புறநா.10 : 10; “அகலிரு வானத்துக் குறைவிலேய்ப்ப, அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி, முரட்பூ மலிந்த முதுநீர்” (பெரும்பாண்.292 - 4)

‘சிலை’ என்னும் உரிச்சொல் ஒலித்தற்றொழிற் பண்பில் வந்ததற்கு மேற்கோள்; நன். மயிலை.சூ. 458; நன். வி.சூ. 459.

13. “நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்தே” (மணி.23 : 16)

மு. ‘உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்’ என்னுந் துறைக்கு மேற்கோள் (தொல்.புறத்திணை. சூ. 10, இளம்.) “அடுநையாயினும்..... நாணுத்தகவுடைத்தே : இது புறத்துழிஞையோன்கண் தூதன் அவன் சிறப்பு எடுத்துரைத்தது” (தொல்.புறத்திணை. சூ. 12, ந.)

(36)