399
அடுமகண் முகந்த வளவா வெண்ணெற்
றொடிமா ணுலக்கைப் பரூஉக்குற் றரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் றீங்கனி நறும்புளி
5மோட்டிரு வராஅற் கோட்டுமீன் கொழுங்குறை
செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகற்
பாதிரி யூழ்முகை யவிழ்விடுத் தன்ன
மெய்களைந் தினனொடு விரைஇ.......
மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்
10அழிகளிற் படுநர் களியட வைகிற்
பழஞ்சோ றயிலு முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
கிள்ளி வளவ னுள்ளி யவற்படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர்முக நோக்கேன்
15நெடுங்கழைத் தூண்டில் விடுமீ னொடுத்துக்
கிணைமக ளட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணு முண்டியே னழிவுகொண்
டொருசிறை யிருந்தே னென்னே யினியே
அறவ ரறவன் மறவர் மறவன்
20மள்ளர் மள்ளன் றொல்லோர் மருகன்
இசையிற் கொண்டா னசையமு துண்கென
மீப்படர்ந் திறந்து வன்கோன் மண்ணி
வள்பரிந்து கிடந்த........மணக்க
விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை
25அலகின் மாலை யார்ப்ப வட்டித்துக்
கடியு முணவென்னக் கடவுட்குந் தொடேன்
கடுந்தே ரள்ளற் கசாவா நோன்சுவற்
பகடே யத்தையான் வேண்டிவந் ததுவென
ஒன்றியான் பெட்டா வளவை யன்றே
30ஆன்று விட்டன னத்தை விசும்பின்
மீன்பூத் தன்ன வுருவப் பன்னிரை
ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள
இழுமென விழிதரு மருவி
வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவே.

(பி - ம்.) 2 ‘றொடுமாண்' 6 ‘வாளைச்சிறுகொடி' 9 ‘முழுவவி நாமபபுகலரி' 10 ‘அரிகளறபடு' 11 ‘நொகனிறயருமுடங்கு' 16 ‘பாஅற புளியஙகூழ' 27 ‘கடுநதெர்பபளளறகசாவா' 30 ‘னத்தைய' 34 ‘சிமையத்'

திணை - அது; துறை - பரிசில்விடை.

தாமான் தோன்றிக்கோனை (பி - ம். தாமானதறானறிககோனை)

ஐயூர் முடவனார்.


(கு - ரை.) 2. தொடி - பூண்.

4. மாங்கனியின்புளி ; "வண்டளிர் மாஅத்துக், கிளிபோற் காயகிளைத்துணர் வடித்துப், புளிப்பத னமைத்த புதுக்குடம்" (அகநா. 37 : 7 - 9)

5. கோட்டுமீன் - சுறாமீன் ; "கோட்டுமீன் குழாத்தின் மள்ளரீண்டினர்" (சீவக.2325). குறை - குறைக்கப்பட்ட இறைச்சி.

9. மூழ்ப்ப - மூடும்படி; புறநா.336 : 5.

15. நொடுத்து - விற்று. 16. பாவல் - பரவல்.

16. பொழுதுமறுத்துண்ணல் : "பொழுதுமறுத் துண்ணுஞ் சிறு மதுகையளே" (நற். 110 : 13). உண்ணவேண்டிய காலத்தில் உண்ணுதலைத் தவிர்ந்துண்ணும் உணவையுடையேனாய் வருந்துதலை அடைந்து ; தன் வறுமையைத் தெரிவித்தபடி.

25. புறநா.398 : 13. 27. அசாவா - தளராத.

29. ஒன்று யான்பெட்டா வளவை - ஒன்றை யான் விரும்பிக் கேட்பதற்கு முன்னே ; "ஒன்றியான் பெட்டா வளவையின்" (பொருந.73)

31. நிரை - பசுக்கூட்டம் ; பசுக்களுக்கு விண்மீன்கள் உவமை ; "காயமீ னெனக் கலந்து கானிரை, மேய" (சீவக.421)

33, "இழுமென விழிதரு மருவிப், பழமுதிர் சோலை" (முருகு.316 - 7)