224
அருப்பம் பேணா தமர்கடந் ததூஉம்
துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி
இரும்பா ணொக்கற் கடும்பு புரந்ததூஉம்
அறமறக் கண்ட நெறிமா ணவையத்து
5முறைநற் கறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி யுருவிற் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம்
10அறிந்தோன் மன்ற வறிவுடை யாளன்
இறந்தோன் றானே யளித்திவ் வுலகம்
அருவி மாறி யஞ்சுவரக் கடுகிப்
பெருவறங் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த வாயத்துப் பயனிரை தருமார்
15பூவாட் கோவலர் பூவுட னுதிரக்
கொய்துகட் டழித்த வேங்கையின்
மெல்லியன் மகளிரு மிழைகளைந் தனரே.

திணையும் துறையும் அவை.

சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

(இ - ள்.) அரிய அரண்களைப் பாதுகாவாது போரைச்செய்து அழித் ததுவும், துணையாய்க்கூடிய இனத்துடனேயுங்கூட மதுக்குடங்களைச் சேர நுகர்ந்து தொலைத்துப் பெரிய பாண்சுற்றமாகிய சுற்றத்தைப் பாதுகாத்ததுவும், அறத்தைத் தெளியவுணர்ந்த ஒழுக்கம் மாட்சிமைப்பட்ட அந்தணரது அவைக்களத்தின்கண் வேள்விக்குரிய முறைமையை நன்றாக அறியும் 1சடங்கவிகள் அம்முறைமையை முன்னின்று காட்டப் பலரானும் புகழப்பட்ட தூய இயல்பையுடைத்தாகிய கற்பொழுக்கமாகிய கொள்கையையுடைய குற்றந்தீர்ந்த குலமகளிரோடு வட்டமாகிய வடிவினையுடைத்தாகிய பலபடை யாகச் செய்யப்பட்ட மதிலாற் சூழப்பட்ட வேள்விச்சாலையுட் 2 பருந்து விழுங்குவதாகச் செய்யப்பட்டவிடத்து நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து வேதத்தாற் சொல்லப்பட்ட வேள்வியினைச் செய்து முடித்ததுவுமாகிய இவற்றானாய பயனை நிச்சயமாக அறிந்த அறிவினையுடையோன்; அவன்றான் துஞ்சினன்; ஆதலால், இனி இவ்வுலகம் இரங்கத்தக்கது; அருவி நீர் மறுத்து உலகத்தார் அஞ்சும்பரிசு வெம்மையுற்றுப் பெரிய வற்கடம் (பஞ்சகாலம்) மிக்க வேனிற்காலத்துப்பசித்த ஆயமாகிய பயன்படும் ஆனிரையை இரக்கித்தல் (ரக்ஷித்தல் - காத்தல்) செய்வாராகக் கூர்மை பொருந்திய கொடுவாளாற் கோவலரானவர்கள் பூக்களுடனே உதிரக் கொம்புகளைக் கழித்து அதன் தழைச்செறிவையழித்த வேங்கையினையொப்ப மெல்லிய இயல்பினையுடைய உரிமைமகளிரும் அருங்கலவணி முதலவாகிய அணிகளை யொழித்தார்-எ - று.

முறை நற்கறியுநர் முன்னுற வேள்வித்தொழின் முடித்ததூஉமென இயையும்.

எருவையென்றது பருந்தாகச் செய்யப்பட்ட வடிவினை.

அறிவுடையாளன் இறந்தான்; மகளிரும் இழை களைந்தனர்; இவனை இழந்த உலகம் அளித்தெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

‘எருவை நுவற்சி’ என்று பாடமோதுவாரும் உளர்.

‘ஆயத்துப் பயனிரை’ என்பதற்கு ஆயத்திற்குப் பயனாகிய இரையெனினும் அமையும்.


(கு - ரை.) 1.“அரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய” (மலைபடு. 378); கலித். 146 : 48.

3. ஒக்கற்கடும்பு - இருபெயரொட்டு. 4. அற - தெளிய.

7. “படையார் புரிசைப் பட்டினம்”, “படையுடை நெடுமதில்” (தேவாரம்) படை - மதிலின் உறுப்பு.

8. ‘பொய்ப்பருந்துகா லொடுபறந்துபோய், மெய்ப்பருந்துடன் விண்ணிலாடவோ” (தக்க. 507) என்பதையும்,

‘பொய்ப்பருந்தாவது யாகத்துக்குச் செய்தபருந்து’ என்னும் அதன் உரையையும் பார்க்க. “சுடுமனற்கலுழ னாகச் சுருதியின் படியே கோட்டி” (வி. பா. இராசசூய : 91)

12-3. “அருவி மாமலை நிழத்தவு மற்றக், கருவி வானங் கடற்கோண் மறப்பவும், பெருவற னாகிய பண்பில் காலையும்” (பொருந. 235-7)

15. பூ - கூர்மை; “பூநின்ற வேன்மன்னன்” (இறை. சூ. 17, மேற்.); “பூவெழு மழுவினாற் பொருது போக்கிய” (கம்ப.அயோத்தி. மந்திரப். 77); “அடைவாம்வை நிசிதம் பூவள் ளயில்வசி யாறுங்கூர்மை” (சூடாமணி. 7 : 16)

(224)


1.சடங்கவிகள்-ஷடங்கவித்துக்கள் ஆறங்கங்களையும் அறிந்தோர;் “புத்தூர்ச் சடங்கவி மறையோன்” (பெரிய. தடுத்தாட்கொண்ட. 7); வேள்விக்குரிய முறையைக் காட்டுவோர்க்கு உபதிருஷ்டாக்கள் என்பது பெயர்.

2. பருந்துவடிவமாகச் செய்வதற்குக் கருடசயனம் என்று பெயர்.