375
அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி
நிலைதளர்வு தொலைந்த வொல்குநிலைப் பல்காற்
பொதியி லொருசிறை பள்ளி யாக
முழாவரைப் போந்தை யரவாய் மாமடல்
5நாரும் போழுங் கிணையொடு சுருக்கி
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
ஊழிரந் துண்ணு முயவல் வாழ்வைப்
புரவெதிர்ந்து கொள்ளுஞ் சான்றோர் யாரெனப்
பிரசந் தூங்கு மறாஅ யாணர்
10வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந
பொய்யா வீகைக் கழறொடி யாஅய்
யாவரு மின்மையிற் கிணைப்பத் தாவது
பெருமழை கடற்பரந் தாஅங் கியானும்
ஒருநின் னுள்ளி வந்தனெ னதனாற்
15புலவர் புக்கி லாகி நிலவரை
நிலீஇய ரத்தை நீயே யொன்றே
நின்னின்று வறுவி தாகிய வுலகத்து
நிலவன் மாரோ புரவலர் துன்னிப்
பெரிய வோதினுஞ் சிறிய வுணராப்
20பீடின்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே.

(பி - ம்.) 5 ‘போருங்’ 9 - 10 ‘யாணாவரையணிப்’ 12 ‘கினபப’ 19 ‘பெரியவேத்தினுஞ்’ 21 ‘பாடிமன்னரை’

திணை - பாடாண்டிணை; துறை - வாழ்த்தியல்.

அவனை அவர்.


(கு - ரை.) 1. கதிர் - வெயில். சூழி - ஒருவகை நீர்நிலை.

3. பொதியில் ஒருசிறை - மன்றத்தினொருபக்கம்.

4. மத்தளத்தைப் போன்ற அரையையுடைய பனையின் அரம் போன்ற வாயினையுடைய மடல் ; “முழாவரைப் போந்தைப் பொருந்தி”, “மடல்வன் போந்தை” (புறநா.85 : 7, 297 : 10) ; “முழவுத்தாளெரி வேங்கை” (கலித்.44 : 4)

5. “நாரும் போழுஞ் செய்துண்டு” (புறநா.370 ; 2)

6. புகாஅ - புகுந்து. 7. ஊழ் - முறையே. உயவல் - வருத்தம்.

8. புரவு எதிர்ந்துகொள்ளும் - பாதுகாத்தலை ஏற்றுக்கொள்ளும்.

9. பிரசம் - தேன்கூடு ; “பிரசந்தூங்கு சேட்சிமை” (அகநா.242 : 21) அறாஅ யாணர் - இடையறாத செல்வ வருவாயையுடைய ; பொருந.1, ந.

10. படப்பை - தோட்டம். 11. ஆஅய் : விளி.

13. மழை - மேகம். 14. நின்னுள்ளி - உன்னை நினைத்து.

15. புக்கில் - எப்பொழுதும் இருத்தற்குரிய வீடு ; “புக்கி லமைந்தின்று கொல்லோ” (குறள்,340)

16. நிலீஇயர் - நிற்பாயாக ; அத்தை : அசை.

18 - 9. “துன்னி..............உணராவென்புழிப் பெரிய சிறியவென்பன பெருமை சிறுமைப்பண்படியாக வந்தமையின், இவ்வெச்சத்தின் குறிப்பென்றலு மொன்று ; இவ்வெச்சப் பொருள்படும் உரிச்சொலென்றலு மொன்று”, “பெரியவோதினு மென்பதற்குச் சிறிய வோதினுமெனக் குறிப்பும் மறைவிகற்பமும் அறிக” (தொல்.வினை. சூ. 30, 38, கல்.) ;
“துன்னி.........உணராவென அகரம் வினைக்குறிப்புப்பற்றி வருவனவும்” (தொல்.வினை. சூ. 31, .)

21. பாடன்மார் - பாடுதலைத் தவிர்வாராக ; தொல்.வினை. சூ. 10, கல்,; ந. மேற்.

20 - 21. தொல்.வினை. சூ. 10, சே.; இ - வி. சூ. 232, 239, உரை, மேற்.

19 - 21. தொல்.இடை. சூ. 8, கல்.; நன். சூ. 326, மயிலை ; நன். வி.சூ. 327, மேற்.

(375)