திணை - அது; துறை - இயன்மொழி. அவன்மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது. (இ - ள்.) மலர்ந்த பூவையுடைய தும்பைக்கண்ணியை அணிந்த அழகிய வலிய மார்பினையும் திரண்டு நீண்ட பெரிய கையினையுமுடைய என் இறைவன்மகன் இளையோனுக்குப் பகை இரண்டு தோன்றின; அவற்றுள் பூப்போலும் வடிவினையுடைய மையுண்டகண்கள் பசப்பத் தோள் மெலியத் தன்னைப் பார்த்த மகளிரை நெஞ்சு பிணித்ததனால் அவர் துனி கூருதலின் உள்ளதாயது ஒருபகை; அவன் எடுத்துவிட்டுச் சென்றிருக்கும் ஊர், விழாவில்லையாயினும், உண்டாக்கப்படும் உணவு யாவர்க்கும் தப்பாமற் செம்மறியாட்டுத் தசையைத் தின்ற சுற்றத்துடனே யாறுங்குளனு முதலாகியவற்றின் துறைநீரை அவன்யானை முகந்துண்ணுமெனக் கருதி அவ்விடத்துறைதலை வெறுக்கும்; அவ்வெறுத்ததனால் உளதாயது ஒரு பகை; ஆகப் பகை இரண்டு-எ - று. பசந்து நுணுகி என்னும் செய்தெனெச்சங்களைச் செயவெனெச்சமாக்கி, அவற்றைப் பிணித்தன்றென்னும் வினையோடு முடிக்க. ஓகாரம் : அசைநிலை இதனால், அவன் இன்பச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு. |