67
அன்னச் சேவ லன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல்
நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக்
கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும்
5மையன் மாலையாங் கையறு பினையக்
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
10வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
இன்புறு பேடை யணியத்தன்
நன்புறு நன்கல நல்குவ னினக்கே.

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.

1 கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார்(பி - ம். இரும்பிசிராந்தையார்) பாடியது.

(இ - ள்.) அன்னச்சேவலே! அன்னச்சேவலே!கொல்லுதலைப் பொருந்திய வென்றியையுடைய அடுபோரண்ணல்தன்னாட்டைத் தலையளிசெய்யும் விளங்கிய முகம்போலஇரண்டுபங்கும் வந்து பொருந்திய மதியம்அரும்புநிலாவிளங்கும் தமியோராயினார்க்கு மயக்கத்தைச்செய்யும் மாலைப்பொழுதின்கண் யாம்செயலற்றுவருந்தக் குமரியாற்றினது பெரிய துறைக்கண்ணே அயிரையைமேய்ந்து வடதிசைக்கண் இமயமலைக் கண்ணேபோகின்றாயாயின், இவ்விரண்டிற்கும் இடையதாகியநல்ல சோழநாட்டின்கட் சென்று பொருந்தின்,உறையூரின்கண் உயர்ந்த நிலையையுடைய மாடத்தின்கண்ணே நினது குறும்பறையோடு தங்கி வாயில்காவலர்க்குஉணர்த்திவிடாதே தடையின்றிக் கோயிற்கண்ணேபுக்கு எம்முடைய பெருங்கோவாகிய கிள்ளி கேட்பப்பெரிய பிசிரென்னும் ஊரின்கண் ஆந்தையுடைய அடிக்கீழென்றுசொல்லின், மாட்சிமையையுடைய நினது இன்புறும் பேடைபூணத் தனது விருப்பமுறும் நல்ல அணிகலத்தை அளிப்பன்,நினக்கு-எ-று.

‘ஆடுகொள்வென்றி’ என்பதற்குவென்றியுள் மிக்க வென்றியெனினும் அமையும்.

குறும்பறையென்றது பேடையை.

வாயில்விடாதென்றதற்குவாயில்காவலர் விடவேண்டாதெனினும் அமையும்.

முகிழ்நிலாவென்பது ஒருசொன்னடைத்தாய் மதியம்முகிழ்நிலா விளங்குமென முதல்வினைகொண்டது; மதியம்முகிழ்க்கும் நிலாவெனினும் அமையும்.

ஆந்தையடியுறை யென்பதற்கு ஆந்தைநின் அடிக்கண் உறைவானென்று உரைப்பாரும் உளர்.

பேடையணிய நன்கலம் நல்குவனென்பதனாற்பயன் : மறவாதுபோதல்வேண்டுமென்னும் நினைவாயிற்று.


(கு - ரை.) 1. தொல். கிளவி.சூ. 52, தெய்வச். மேற், ‘அன்னச்சேவ லன்னச் சேவலென்னும்பாட்டினுள் இரும்பிசிராந்தையடியுறை யெனினென்பது.......குறிப்புமொழி’(தொல். எச்ச. சூ. 25, தெய்வச்.)

2. ஆடு - அடுதல், கொல்லுதல். இது முதனிலைவிகாரமுற்ற தொழிற்பெயர்.

4. மதியக்கோடு: “இருகோட் டொருமதியெழில்பெற மிலைத்தனை” (நக்கீரர்திருவெழுகூற்றிருக்கை)

5. மையல்மாலை-பிரிந்தவர்களுக்குமயக்கத்தைச் செய்யும் மாலைக்காலம். கை அறுபுஇனைய - செயலற்று வருந்த.

6-7. குமரியும் வடமலையும் : புறநா.6 : 1-2, 17 : 1; மதுரைக். 70-71. குமரி-கன்னியா குமரியென்னும்ஆறு. அயிரை - ஒருவகைமீன்.

8. கோழி - உறையூர்; சிலப். 10 :247-8. உறையூர் இராசதானியாதலின் உயர்நிலை மாடம்கூறப்பட்டது.

9. குறும்பறை - குறுகிய இறகை உடைய பேடை;அன்மொழித்தொகை; புறநா. 69 : 12.

10. புறநா. 69 :17.

11. பிசிர் - பாண்டிநாட்டிலுள்ளதோர் ஊர்; புறநா. 215 : 6 - 7.

12. அடியுறை - அடியில் வாழ்வேன்; புறநா.198 : 26, உரை; “அடியுறை யருளாமை யொத்ததோ” (கலித்.54 : 4); “காவலற் குறுகி, அடியுறை யருண்மொழி யான்பணிந்துரைப்ப’‘ (பெருங். 1. 47: 7 - 8)

11-4. கோப்பெருஞ் சோழனுக்கும்தமக்குமுள்ள நட்பின் மிகுதியை இவ்வடிகளாற்பிசிராந்தையார் புலப்படுத்தினார். நற்செய்தி கேட்டோர்சொன்னவர்களுக்குத் தாமணிந்த அணிகலம் நல்குதல்: “அணிகலம் பரிந்து நங்கை யணிமரு ளுருவந் தந்த,மணிமருண் முறுவற் செவ்வாய் மாதவ சேனைக் கீந்து”(சூளா. கல்யாண. 182); “ஆயபே ரன்பெனு மளக்கரார்த்தெழத், தேய்விலா முகமதி விளங்கித் தேசுறத்,தூயவ ளுவகைபோய் மிகச்சு டர்க்கெலாம், நாயக மனையதோர்மாலை நல்கினாள்” (கம்ப. மந்தரை. 52)

‘புணர்ச்சி: ஒரு தேயத்தாராதல்;பழகுதல்; பலகாற்கண்டும் சொல்லாடியும் மருவுதல்; இவ்விரண்டுமின்றிக்கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும்போல உணர்ச்சியொப்பின் அதுவே உடனுயிர் நீக்கும்உரிமைத்தாய நட்பினைப் பயக்குமென்பதாம்’ (குறள்,785, பரிமேல்.); ‘கோப்பெருஞ்சோழன் துறந்துழிப்பிசிராந்தையாரும் பொத்தியாரும்போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள்உதாரணம்’ என்னும் நச்சினார்க்கினியர்வாக்கியம் ஈண்டறியத்தக்கது; தொல். கற்பியல்,சூ. 52.

மு. “நாராய் நாராய்” என்னும்சத்திமுற்றப்புலவர் பாடல் இங்கே ஞாபகத்திற்குவருகின்றது.

(67)


1. 11 - 2-ஆம் அடிகளில் தலைவன்பெயரும் புலவர்பெயரும் அமைந்திருக்கின்றன.