162
இரவலர் புரவலை நீயு மல்லை
புரவல ரிரவலர்க் கில்லையு மல்லர்
இரவல ருண்மையுங் காணினி யிரவலர்க்
கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க்
5கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானை யெம்பரிசில்
கடுமான் றோன்றல் செல்வல் யானே.

திணை - அது; துறை - பரிசில்விடை.

அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான்துஞ்சுவான் தம்பியைப் பரிசில்கொடுவென அவன் சிறிதுகொடுப்பக் கொள்ளாது போய்க் குமணனைப் பாடிக் குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று வெளிமானூர்க் கடிமரத்துயாத்துச்சென்று அவர் சொல்லியது.

(இ - ள்.) இரப்போர்க்கு ஈந்து பாதுகாப்பாய் நீயுமல்லை; புரப்போர் இரப்போர்க்கு இல்லையுமல்லர்; இனி இரப்போருண்டாதலையும் காண்பாயாக; இனி இரப்போர்க்கு இடுவோருண்டாதலையும் காண்பாயாக; நின்னுடைய ஊரின்கட் காவலையுடைய மரம்வருந்தக் கொடுவந்து யாம் கட்டிய உயர்ந்த நல்ல இலக்கணமுடைய யானை எமது பரிசில்; விரைந்த செலவினையுடைய குதிரையையுடைய தலைவனே! இனி யான் போவல்-எ - று.

யான் போவலென்ற கருத்து : முன் சிறிதுகொடுப்பக் கொள்ளாத மிகுதி தோன்றநின்றது.

இரவலருண்மையுங்காணினியென்றகருத்து : இரப்போர்க்குப் பெருந் தன்மையுளதாதல் என்னளவிலே காணென்பதாம்.

‘யாம்பிணித்த’ என்னும் பன்மை 1பெருமிதந்தோன்ற நின்றது.

2“நடைவயிற் றோன்று மிருவகை விடையும்” என்பதனால், இது பெறாது பெயர்ந்த பரிசில்விடை.


(கு - ரை.) 5. கடிமரம் - காவன்மரம்; அது பகைவர் அணுகாத வண்ணம் வளர்க்கப்படுவது.

6. யானைப்பரிசில் : புறநா. 131, 140, 394.

5 - 6. பகைவருடைய காவன்மரத்தை அல்லது காவற்சோலையை வெட்டுதலும் வெட்டாமல் அம்மரத்தில் தம்முடைய யானையைக் கட்டுதலும் அரசர்க்கியல்பு; புறநா.23 : 8 - 9, 36 : 6 - 9, 57 : 10 - 11, 336 : 4, 345:1 என்பனவற்றாலுணர்க; அனுமான் அசோகவனத்தை அழித்ததும் இங்கே அறிதற்குரியது.

மு. அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கத்துள், ஏற்றற்கு மேற்கோள்; ஏற்றலாவது கொள்வோன் தனது சிறப்பிற் குன்றாமற் கொள்ளுதல்; தொல். புறத்திணை. சூ. 16, இளம்.; “இரவலர்.......யானே : இது பிறன்பாற் பெரிது பெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை” (தொல். புறத். சூ. 36, ந.)

(162)


1‘யாம் என்றாள், தம்பிராட்டியாதலால், தன்பெருமிதந்தோன்ற’ (சிலப்.20 : 13, அரும்பத.)

2தொல். புறத்திணை. சூ. 36.