309
இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னார்
இருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே
நல்லரா வுறையும் புற்றம் போலவும்
கொல்லேறு திரிதரு மன்றம் போலவும்
5மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளனென வெரூஉ மோரொளி
வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே.

(பி - ம்.) 1 ‘முகளு...யொன்’ 6‘உளனேவரூஉம்’, ‘உளளென வெரூஉம்’ 7 ‘லென்னைக்கண’,‘லென்னைக் கண்ணதுவே’

திணை - தும்பை; துறை - நூழிலாட்டு.

மதுரையிளங்கண்ணிக் கௌசிகனார்.


(கு - ரை.) 1 - 2. பகைவருடைய படைக்கலங்களின்முகஞ்சிதையும்படி தங்கள் படைக்கலங்களால்அவருடைய போரை வெல்லுதல் மற்றவர்க்கும்எளிதாகிய காரியம். இரும்பு: படைக்கலத்துக்கு ஆகுபெயர்.ஏனோர் - ஏனையோரென்பதன் விகாரம்.

3. நல்லரா - நாகம்; “நாம நல்லரா”(அகநா. 72) எனச் செய்யுளிலும், ‘நல்ல பாம்பு’என வழக்கிலும் உண்மை அறிக. இஃது உறையுமிடத்தைப்பிறர் அஞ்சி யணுகாரென்பது, “வரிமிடற், றரவுறைபுற்றத் தற்றே நாளும், புரவலர் புன்க ணோக்கா திரவலர்க்,கருகா தீயும் வண்மை, உரைசா னெடுந்தகை யோம்பு மூரே”(புறநா. 329 : 5 - 9) என்பதனாலும் விளங்கும்.

4. கொல்லுகின்ற இடபம்திரிகின்ற மன்றம்; மன்றம் - பசுக்கள் தங்கும் பொதுவிடம்;“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்,புல்லாளே யாய மகள்; (கலித். 103 : 63 - 4)

6. ஒளி - பிறர்க்கு அச்சமுண்டாதற்குக்காரணமான நன்மதிப்பு; ஒளியென்பதற்குப் பரிமேலழகர்(குறள், 698) எழுதிய விசேடக் குறிப்பும், “உறங்குமாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங்காக்குமால்” (சீவக. 248) என்பதும் இங்கே அறியற்பாலன.

5 - 6. குணமடியாகத் தோன்றிய வினைக்குறிப்புச்சொற்கள் பல விகற்பப்பட்டு வருமென்று கூறி “மாற்றருந்துப்பின் மாற்றோர் பாசறையுளன்” என்பதைஒருவகைக்கு மேற்கோளாகக் காட்டினர்; நன். வி. சூ.321.

7. வென்றோர் வேலை யுயர்த்தல்மரபு; “வென்று...உயர்கநும் வேலே” (புறநா. 58);‘வெங்களத்து வேலுயர்த்த வேந்து” (பு. வெ. 199)

5 - 7. மாற்றுதற்கரிய வலியொடுபகைவர் பாசறைக்கண்ணே,

இவன் இருக்கின்றானென்றுவெருவுதற்குக் காரணமாகிய ஒப்பற்ற ஒளி, வெற்றியால்உயர்த்தும் நெடிய வேற்படையையுடைய என் தலைவனிடத்தேயுள்ளது. 6 - 7. ஒளி என்னை கண்ணது.

மு. “பெரும்பகைதாங்கும் வேலினானும்”என்பதனுரையில் சான்றோர் பெரும்பாலும் வேற்படையையேசிறப்பித்துக் கூறுவரென்று கூறி, இதனை மேற்கோள்காட்டினர்; தொல். புறத்திணை. சூ. 21, ந. (309)