திணையும் துறையும் அவை. அவன்மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. (இ - ள்.) இவ்விடத்து நின்றோர்க்குந் தோன்றும், சிறிது எல்லை போய் நின்றோர்க்குந் தோன்றும், நிச்சயமாக; யானை மென்று போகடப்பட்ட கவளத்தினது கோதுபோல மதுப்பிழிந்து போகடப்பட்ட கோதுடைத்தாகிய சிதறியவற்றினின்றும் வார்ந்த மதுச்சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை-எ - று. நெடியோன் குன்று தோன்றுமென்றது புகழான் உயர்ந்து காணா தார்க்கும் செவிப்புலனாகத் தோன்றும், அவன் உளனாயகாலத்து; இப்பொழுது பிறமலைபோலக் கட்புலனாகத் தோன்றும் அளவாயிற்றெனக் கையற்றுக் கூறியவாறாகக் கொள்க. |