90
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல்
மறப்புலி யுடலின் மான்கண முளவோ
மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய
5இருளு முண்டோ ஞாயிறு சினவின்
அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய
பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய
வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ
10எழுமரங் கடுக்குந் தாடோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர் பெரும
இருநில மண்கொண்டு சிலைக்கும்
பொருநரு முளரோ நீகளம் புகினே.

(பி - ம்.) 8 ‘வரிமணன்ஞமலக்’11 ‘வண்கை’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) முறிந்த வளையை ஒப்பமலர்ந்த வெண்காந்தட்பூ இலை தழைத்த 1குளவியுடனே நாறும் மலைச்சாரற்கண் மறத்தையுடையபுலி சீறின் எதிர்நிற்க வல்ல மானினமும் உளவோ?மயங்கிய ஆகாயத்திடத்தும் திசையின் கண்ணும் செறிந்தஇருளும் உண்டோ ஞாயிறு கொதித்தெழுமாயின்?பார்த்து மிகுதியாற் பார் அச்சுமரத்தோடு வந்துதாக்கி உற இருத்தலின் நிலத்தின்கட் 2குளித்த பண்டத்தையுடைய சகடத்தினது ஆழ்ச்சியைப்போக்குதற்குப் புனல் கொழிக்கப்பட்ட மணற்பரக்கவும்கற்பிளக்கவும் நடக்கவல்ல மிக்க மனச்செருக்கினையுடையகடாவிற்குப் போதற்கரிய துறையுமுண்டோ? இல்லையன்றே;அவைபோல, கணையமரத்தையொக்கும் முழந்தாளிலே பொருந்தியபெரியகையாகிய தப்பாத வன்மையைச் செய்யும் கையினையுடையவீரர்க்குத்தலைவ! பெரிய நிலத்தின்கண் நினது மண்ணைக்கொண்டுஆர்க்கும் வீரரும் உளரோ? இல்லையன்றே, நீபோர்க்களத்திற் புகின்-எ - று.

மழவர்பெரும! நீ களம்புகின் பொருநரும்உளரோ? இல்லை யன்றேயெனக் கூட்டி வினை முடிவு செய்க.

தடக்கையையுடைய பெருமவெனக் கூட்டி,வன்கையை மழவரொடு கூட்டியுரைப்பினும் அமையும்.
இருநிலமாகிய மண்ணென்பாரும் உளர்.

‘மதப்பகடு’ என்பதூஉம் பாடம்.


(கு - ரை.) 1. வளை-கைவளையல்.“இவட்கே, அலங்கிதழ்க் கோடல் வீயுகு பவைபோல்,இலங்கே ரெல்வளை யிறையூ ரும்மே”, “ஊழுறு கோடல்போலெல்வளை யுகுபவால்”, கமழ்தண்டா துதிர்ந்துகவூழுற்ற கோடல்வீ, இதழ்சோருங் குலைபோல விறைநீவுவளையாட்கு” (கலித். 7 : 15-6, 48 : 11, 121 : 13-4); வளையுடைந்தன்ன வள்ளிதழ்க் காந்தள்” (மலைபடு. 519);“துணைமலர்க் காந்த ளூழ்த்துச் சொரிவபோற்றோன்றி முன்கை அணிவளை நலத்தோடேங்க” (சீவக.1742)

1-2. காந்தளும் குளவியும் : “இலையடர்தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்தளினவண் டிமிரும்” (ஐந். எழுபது, 3)

3. “பாயும், புலிமுன்னர்ப்புல்வாய்க்குப் போக்கில்” (பழ. 234) மறப்புலி:பதிற். 41 : 7; கலித். 42 : 1; சிலப். 12 :27; சீவக. 752.

5. “ஞாயிற்று முன்ன ரிருள்போலமாய்ந்ததென், ஆயிழை மேனிப் பசப்பு”, “ஞாயிற்றுமுன்ன ரிருள்போல மாய்ந்ததென் ஆயிழையுற்ற துயர்”,“ஆயிழை மடவர லவல மகலப், பாயிருட் பரப்பினைப்பகல்களைந் ததுபோல்” (கலித். 42, 145, 148)

7. சொல்லிய : புறநா. 39 : 1.

8. ஞெமலல் - பரத்தல்.

6-9. புறநா. 60 : 7-9, குறிப்புரை.

8-9. ‘வரிமணன்....உண்டோவென்றாற்போலும் உவமப் பொருள்களும் இக்காலத்திற்கு ஆகாவாயின’(தொல். செய். சூ. 80, ந.)

10. எழுமரம் - கோட்டைக்கதவின்உட்புறத்தே குறுக்காகப் போடப்படும் வலியமரம்; புறநா.97 : 8; கணையமரமெனவும் வழங்கும்; “முழுவிறற் கணையம்”(சிலப். 15 : 215) என்பதன் உரையைப் பார்க்க.தாடோய் தடக்கை : புறநா, 59 : 2, குறிப்புரை.

11. வழுவில் வன்கை : “கருனையாற்குழைக்குங் கைகள், வாளமர் நீந்தும் போழ்தின்வழுவழுத் தொழியு மென்றான்” (சீவக. 257)

(90)


1. குளவி - மலைமல்லிகை; புறநா.168 : 12, உரை.

2. ‘குளித்த’ என்ற இவ்வுரைக்குரியமூலமாகிய ‘இயங்கிய’ என்பது ‘இங்கிய’ என்றிருக்கவேண்டுமென்று தோற்றுகிறது.