322
உழுதூர் காளை யூழ்கோ டன்ன
கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப்
புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும்
புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற்
5பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய
மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல
திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட்
டண்பணை யாளும் வேந்தர்க்குக்
10கண்படை யீயா வேலோ னூரே.

(பி - ம்.) 1 ‘உழுதூர்க்காளை’6 ‘முனறினறபாயும்’ 7 - 8 ‘னயலினிருஞ்சுவலி...யானைபிறழுமாங்கட்’

திணையும் துறையும் அவை.

ஆவூர்கிழார்.


(கு - ரை.) 1. காளையின் செவ்வியழிந்தகொம்பையொத்த.

2. பொருந்தியவர் சிறார்.

1 - 2. கள்ளியின் முள்ளுக்குக் கோடுஉவமை; “குண்டைக் கோட்ட குறுமுட் கள்ளி” (அகநா.184 : 8)

3. வரகு அரிகால் - வரகம்பயிரின்அரிந்த தாள். கருப்பை - எலியை; “வேலிக் கருப்பைபார்க்கும்” (புறநா. 324 : 7)

3 - 4. எய்த சிறார் முழங்குவராயின்.

5. முயல்: எழுவாய். கருங்கலன் - மண்ணாற்செய்யப்பட்ட அடிசிற் பாண்டம்.

4 - 6. “தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக்குறுமுயல், புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பிற்,படப்பொடுங் கும்மே” (புறநா. 334 : 2 - 4)

7. எந்திரம் - ஆலை; “கரும்பி னெந்திரம்”(ஐங்குறு. 55)

8. சுவல் - பிடர்.

9. தண்பணை - மருதநிலத்தைச்சார்ந்த ஊர்கள்.

ஊர் (10) வன்புலத்ததுவே (6)

(322)